2016 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளாகிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், நிரந்தர அல்லது தற்காலிக (கூலி வீடு) முகவரியில் வசிப்போர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போர் என அனைவரும் கட்டாயம் தமது வாக்குரிமையைப் பதிவுசெய்துகொள்ளுமாறு தேசிய ஷூறா சபை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றது.
வாக்காளர் பதிவு நடவடிக்கைக்கு குறித்த வாக்காளரின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் எனும் விபரங்கள் மாத்திரமே வேண்டப்படுகின்றன. இருப்பினும் தனி நபர்களின் கவனயீனமும் அதேபோல பிரதேச சமூக அமைப்புக்களின் ஆர்வமின்மையும் முக்கியமான தோ்தல் நிலைமைகளிலும், நாளாந்த விடயங்களிலும், அனர்த்த சூழ்நிலையிலும் முஸ்லிம் வாக்காளர் பதிவில் உள்ள குறைபாடுகளை இன்னும் அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது.
வாக்களர் பதிவு வெறுமனே வாக்களிப்புடன் மாத்திரம் தொடர்புடைய விடயமல்ல மாறாக குடியுரிமை மற்றும் அனைத்து வகையான நாளாந்த விடயங்களிலும் வேண்டப்படும் மிக முக்கியமான அத்தாட்ச்சிப்படுத்தல் ஆவணம் ஆகும். அதேபோல, எமது ஒன்றிணைந்த வாக்குப் பலம் தேசிய அரசியலில் பல பாரிய பங்களிப்புக்களைச் செய்யுள்ளமையை நாம் அனைவரும் அறிவோம். எனவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ள புதிய வட்டாரப் பிரிப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய முறையிலான எதிர்வரும் உள்ளூராட்சித் தோ்தலில் கிராமிய மட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் 2016 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவு பொிதும் துணைநிற்கும் என்பதையும் நாம் அனைவரும் கட்சி பேதம் மறந்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அறியத்தருகின்றோம்.
எனவே மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபைகள், சமய மற்றும் சமூக அமைப்புக்கள், மற்றும் பிரதேச சமூக ஆர்வளர்கள் முன்நின்று தமது பிரதேச முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் சரியான முறையில் பதிவுசெய்யப்படுவதற்காக வழிகாட்டல்களை வழங்குவதுடன்,கிராம உத்தியோகத்தர்களுடன் இணைந்து வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான பூரண ஆதரவையும் வழங்குமாறு தயவாய் வேண்டிக் கொள்கின்றோம்.
உங்கள் பங்களிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நட்கூலி வழங்குவானாக! ஆமீன்.
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்!
குறிப்பு: மஸ்ஜித்களில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து, தெளிவுபடுத்தி, அறிவித்தல் பலகையில் பிரசுரிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.