பிராந்திய ஸகாத் கருந்தரங்குத் தொடர்- காலி மாவட்ட அமர்வு

முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் மிகமுக்கிய இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வரும் தேசிய ஷுரா சபையின் சமூக-பொருளாதார உபகுழு, கூட்டு ஸகாத் நடைமுறைப்படுத்தலை வினைத்திறன்மிக்க வகையில் விஸ்தரிப்பதை ஊக்குவிக்கும் விஷேட செயற்திட்டம் ஒன்றை நாடளாவியரீதியில் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், அதன் இன்னுமொரு செயலமர்வு காலி ஒன்றியம் (Galle Forum) இனால் காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று ( 25) காலி வர்த்தக சம்மேளன கேட்போர்கூடத்தில் நடந்தேறிய இந்நிகழ்வில் காலி மாவட்ட வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

காலி ஒன்றியம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில்  ‘ஸகாத் நிதியை முதலீட்டுக்கு எவ்வாறு பயன்பத்துவது?’ எனும் தலைப்பில் தேசிய ஷூரா சபையின் பொதுச்செயலாளரும்,  உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளருமான அஷ்ஷெய்க் என். எம் மிப்லி (நளீமி) அவர்களும், இஸ்லத்தில்  ஸகாத்தின் அவசியமும் கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவமும்’ எனும் தலைப்பில் தேசிய ஷூரா சபையின்  பிரதித் தலைவரும், ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அஷ்-ஷேய்க்  எஸ்.எச்.எம். பளீல் (நளீமி, எம்.ஏ) அவர்களும், ‘ஸகாத் சேகரிப்பும், விநியோகமும்’ எனும் தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான உஸ்தாத் ஜயூப் அலி (நளிமி) அவர்களும் விஷேட வழிகாட்டல்களை வழங்கினர்.

தேசிய ஷூரா சபையின் கூட்டு ஸகாத் நடைமுறைப்படுத்தலை வினைத்திறன்மிக்கதாகும் இச்செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் இடம்பெற்றது.

நாடளாவியரீதியில் வெற்றிகரமாக செயற்பட்டுவரும் ஸகாத் அமைப்புக்களின் அனுபங்களையும், செயற்திட்டங்களையும் பகிர்ந்துகொள்ளும் செயலமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்  இலங்கையில் பிராந்திய மற்றும் கிராமிய மட்டத்தில் செயற்பட்டு வரும் அனுபவமிக்க 47 ஸகாத் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஸகாத்துறையில் தோ்ச்சிபெற்ற உலமாக்கள் மற்றும் சமூக பொருளாதாரத் துறை ஆய்வாளர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள், சமூக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 150 போ் பங்கேற்றனர்.

இதில் ஸகாத் அமைப்புக்களுக்களின் அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதுடன், இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன. குறிப்பாக, இலங்கையில் தற்போது இயங்கிவரும் 80 ஸகாத் அமைப்புக்களின் எண்ணிக்கையை அடுத்துவரும் 5 வருடகாலப்பகுதியில் சுமார் 400 வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதன் தேவையும் இந்த செயலமர்வில் உணரப்பட்டது.

Scroll to Top