இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

Z6

‘ஷுரா’ என்பது ஆலோசனை வேண்டுவதனையும் ஆலோசனை வழங்குவதனையும் குறிக்கும் இஸ்லாமிய பரிபாஷைச் சொல்லாகும். ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக” (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த அல்குர்ஆன் வசனம் ஆலோசனைகளை (ஷூரா) செய்வதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானதாகும்.

நபி(ஸல்) அவர்கள்  முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு அல்லாஹ் அல்குர்ஆனின் வசனங்களை இறக்கி வழிகாட்டியிருக்கிறான்.

அதுவும் இல்லாத போது அவர்கள் அல்லாஹ்வின் உள்ளார்ந்த வழிகாட்டலின் பேரில் சுயமாக முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.எனவே,பல சந்தர்ப்பங்களில் தனது தோழர்களின் அபிப்பிராயங்களைப் பெற வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. அப்படியிருந்தும் தோழர்களிடம் ஆலோசனை செய்யுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளையானது ஆலோசிக்கும் பண்பு நபி(ஸல்) அவர்களிடம்  இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் அவர்களுக்குப் பின்னால் வரும் தலைவர்களும் பொறுப்புக்களை வகிப்பவர்களும் நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பிறரது கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது.

வஹீயினால் மாத்திரம் தீர்மானிக்க முடியுமான விடயங்கள் உள்ளன. அவற்றில் ஷூரா  செய்ய முடியாது. ஆனால், மனித சிந்தனைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள- இஜ்திஹாதுக்கு உட்பட்ட விடயங்களில் ஆலோசனை பெறவும் வழங்கவும் முடியும்.
ஆலோசனை பெறுவது என்ற விடயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்க முன்னர் அல்லது ஈடுபட முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும். பலரது அனுபவங்கள் சாறாகப் பிழியப்பட்டு அங்கு வழங்கப்படுகின்றன.  அதில் அல்லாஹ்வின் அருள் இருக்கும்.

ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றிக்கூற வந்த நபி (ஸல்) அவர்கள் ”உன்னிடம் அவன் ஆலோசனை கேட்டால் ஆலோசனை வழங்குவீராக!” (ஆதாரம்-ஸஹீஹ் முஸ்லிம்) என்றார்கள். ”ஆலோசனை கேட்கப்படுபவர் நம்பிக்கை நாணயமானவராக இருக்க வேண்டும்.” (திர்மிதி) என்றும் கூறினார்கள். மறுமை நாளில் பாக்கியசாலிகளான வலப்பாரிசத்தவர்கள் உலகில் வாழும் போது  ”சத்தியத்தையும் அன்பையும் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பார்கள்” (90:17) என்று அல்லாஹ் கூறுகிறான்.
அந்தவகையில் பரஸ்பரம் ஆலோசித்துக் கொள்வது, பரஸ்பரம் உபதேசித்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும். இந்தப் பண்பினால் சமூகத்தின் ஐக்கியம் பாதுகாக்கப்பட்டு ஒருவர் மற்றவரை மதிக்கும் தன்மை வளரும். இறுதி விளைவுகளுக்கு எல்லோரும் சேர்ந்து பொறுப்பாளர்களாக மாறுவார்கள். மாறாக, ஒரு சிலர் மாத்திரம் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் அவை அரைகுறையாக இருக்கும் என்பதுடன் பலரும் சந்தேகப்படுவதற்கும் கூட்டுப்பொறுப்பிலிருந்து விலகுவதற்கும் வழி வகுக்கும்.

சிறிய விடயங்களில் கூட ஷூரா இஸ்லாத்தைப் பொறுத்தவரை நாம் அற்பமாகக் கருதும் இடங்களில் கூட ஷூரா செய்யும் படி அது பணிக்கின்றது.

  1. கணவனும் மனைவியும் தமது குழந்தைக்கு பால் மறக்கடிக்க முனைந்தால் அதற்காக இருவரதும் பரஸ்பர ஒப்புதலும் கலந்தாலோசனையும் தேவை என்கிறது குர்ஆன்:-” (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவருக்கும்தத்தமது பரஸ்பர விருப்பத்தின் பேரிலும் ஆலோசனையின் பேரிலும் பால் குடிமறக்க நாடினால் அவ்விருவர் மீதும் குற்றமில்லை” (2.233) என அல்லாஹ் கூறுகின்றான்.
  2. ”பெண்களிடம் அவர்களது புத்திரிகள் விடயமாக ஆலோசனை கேளுங்கள்” (அபூதாவூத்) என்ற நபி(ஸல்) அவர்களது கட்டளை மகள்மாரின் நிச்சயதார்த்தத்துக்கு முன்னர் கணவன் தனது மனைவியின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்கிறது.

அல்குர்ஆனில் ”அஷ்ஷூரா

குர்ஆனில்அல்லாஹ் (42: 38) (3: 159) (2: 233) போன்ற வசனங்களில் சூரா பற்றி கூறுகிறான்.”அஷ்ஷூரா” (கலந்தாலோசிப்பது-42) என்ற பெயரிலான தனியான ஓர் அத்தியாயமே அல்குர்ஆனில் உள்ளது. அந்த அத்தியாயத்திலுள்ள, ”அத்துடன் அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது பண்பாகும்.” (42:38)  என்ற வசனம் மக்காவில் தான் இறக்கப்பட்டது என்று கூறும் ஷஹீத் சையித் குதுப் அவர்கள்,ஷூரா என்பது அரச விவகாரங்களுடன் மட்டும் குறுகியதல்ல.முஸ்லிம் சமூகத்தின் வாழ்வின் சகல பகுதிகளுக்கும் விரிந்தது என்பதை இது காட்டுகிறது என்றார்.

மேற்படி ”அஷ்ஷூரா” எனும்அத்தியாத்தில் நபித் தோழர்களது எட்டுப் பண்புகள் பற்றி பிரஸ்தாபிக்கும் அல்லாஹ் (42:36- 38)  (1)ஈமான்,(2)தவக்குல், (3) பெரும் பாவங்களைத் தவிர்த்தல்,(4) கோபம் வந்தால் மன்னிப்பது, (5)தமது இரட்சகனின் கட்டளைகளுக்கு அடிபணிவது, (6)தொழுகையை நிலை நிறுத்துவது, (7)தமது காரியங்களை ஆலோசனையின் பேரில் அமைத்துக்கொள்வது, (8)அல்லாஹ் வழங்கிய சொத்து செல்வங்களிலிருந்து செலவு செய்வது ஆகிய பண்புகள் அவர்களிடம் இருப்பதாகக் கூறுகிறான். இங்கு ஆறாவது பண்பாக தொழுகையை நிலைநிறுத்துவதையும் எட்டாவது பண்பாக ஸகாத் கொடுப்பதையும் கூறும் அல்லாஹ் தொழுகைக்கும் ஸகாத்துக்கும் இடைப்பட்ட பண்பாக ”அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது பண்பாகும்”என்று ஏழாவது பண்பாக ஷூராவைக் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஷூராவின் முக்கியத்துவம் உணர்த்தப்படுவதாக இமாம் இப்னு கதீர் குறிப்பிடுகிறார்.

முஸ்லிம் சமூகத்தில் ஏதாவது ஒரு முக்கிய தகவல் பரிமாறப்படும் போது சிலர் அதன் நம்பகத் தன்மையைப் பற்றி அலசி ஆராயாமல் துறைசார் நிபுணர்களிடம் அதுபற்றி கேட்டறிய முன்னர் அத்தகவலை சமூகத்தில் பரப்பக் கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறும்போது, ”பாதுகாப்போடு அல்லது அச்சத்தோடு தொடர்பான ஒரு தகவல் அவர்களுக்குக் கிடைத்துவிட்டால் அதனை அப்படியே பரப்பிவிடுவார்கள். அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமும் அவர்களில் அதிகாரமுள்ளவர் (உலுல்அம்ர்) களிடமும் தெரிவித்திருந்தால் அவர்களிலிருந்து அதனை ஆய்வு செய்பவர்கள் அதனை (நன்கு) அறிந்துகொள்வார்கள்.(4:83) என்கிறான்.

இங்கு வந்துள்ள ‘உலுல்அம்ர்’ எனப்படுவோர் துறைசார்ந்தவர்களாக,சமுதாய முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பவர்களாவர். சமூகத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பாரதூரமான விடயங்களில் முடிவுகளை எடுக்க முன்னர் இப்படியானவர்களை அணுகி ஆலோசனை பெறுவதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

சுலைமான் (அலை) அவர்கள் பல்கீஸ் அரசிக்கு கடிதமொன்றை எழுதினார்கள். அக் கடிதத்தில் அந்த அரசி தனது மேலாண்மையை விட்டு விட்டு சுலைமான் (அலை)  அவர்களிடம் முஸ்லிமாக வரவேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது அவள் தனது பிரதானிகளைப் பார்த்து ”எனது பிரதானிகளே எனது விடயத்தில் நீங்கள் தீர்ப்பு (ஆலோசனை) கூறுங்கள். எனக்கு இது விடயமாக நீங்கள் (சாட்சியம் கூற) சமூகமளிக்கும் வரை நான் தீர்க்கமான முடிவுக்கு வரமாட்டேன்’ என்று கூறினாள் (27:32) இவ்வாறு தொடரும் வசனங்களில் இரு தரப்பாருக்கும் இடையிலான உரையாடல் பற்றி விளக்கமாக தெரிவிக்கப்படுகின்றது. இதிலிருந்து முற்காலங்களில் படை நடாத்துதல், ஆட்சி செய்தல் போன்று கருமங்களில் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளமை பற்றி அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

நபிகளார்(ஸல்) அவர்களது வாழ்வில் ஷூரா

  1. பத்ர் யுத்தம் இடம்பெற முன்னர் நபி (ஸல்) அவர்கள் முதலில் முஹாஜிர்களிடம் ஆலோசனை பெற்றார்கள். அதன் பின்னர் தனது படையில் பெரும்பான்மையினராக இருந்த அன்ஸார்களிடம் வந்த அவர்கள்,”மக்களே எனக்கு ஆலோசனை கூறுங்கள்”என்றார்கள். அன்ஸார்களின் சார்பில் பேசிய சஅத் இப்னு  முஆத்(ரழி) அவர்கள் தமது தரப்பின் பூரண ஒத்துழைப்புக் கிட்டும் என்பதைத் தெரிவித்தார்கள்.
  2. பத்ர் படை எந்த இடத்தில் பாளையமிட்டிருக்க வேண்டும் என்ற விடயத்திலும் நபி (ஸல்) தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றார்கள்.முதலில் அன்னார் ஓர் இடத்தைத் தெரிவு செய்த வேளை அதனை அவதானித்த யுத்த தந்திரங்கள் தொடர்பான நிபுணரான அல்ஹப்பாப் இப்னுல் முன்திர்(ரழி) அவர்கள், நீங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து முந்தவோ பிந்தவோ எம்மால் முடியாத அளவுக்கு அது அல்லாஹ் உங்களுக்குத் தங்கும் படி கட்டளையிட்ட இடமா அல்லது மனிதர்களது பகுத்தறிவுக்கும் யுத்த தந்திரங்களுக்கும் அதில் இடமுள்ளதா?எனக்கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ”பகுத்தறிவுப் பிரயோகத்துக்கும் யுத்த தந்திரங்களுக்கும் அதில் இடமுண்டு” என்றார்கள். அது கேட்ட அல்ஹப்பாப் (ரழி) அவர்கள் ”அப்படியானால் இது பொருத்தமான இடமல்ல. மக்களை அழைத்துக் கொண்டு வாருங்கள். குறைஷிப்படை தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் நாம் தங்குவோம். அங்கு ஓர் நீர் தடாகம் அமைப்போம்” என்று கூறினார். அந்த ஆலோசனையை அப்படியே அங்கீகரித்த நபி(ஸல்) அவர்கள் ”நீர் (தான் சரியான) அபிப்பிராயத்தை வெளியிட்டீர்” என்று கூறியதுடன் அதன்படியே நடந்தார்கள். (அர்ரஹீகுல் மக்தூம்)
  3. பத்ர் கைதிகளை எவ்வாறு கையாள்வது என்பது சம்பந்தமாகவும் நபி (ஸல்) அவர்கள் தோழர்களது அபிப்பிராயங்களைப் பெற்றார்கள்.
  4. உஹத் யுத்தத்தில் ஈடுபட முன்னர் நபி(ஸல்) அவர்கள் தோழர்களை அணுகி ஆலோசனை கேட்டார்கள்.” நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு ஆலோசனை கூறுங்கள்”  என்றார்கள். யுத்தத்தில் சம்பந்தப்படத் தேவையில்லை என அன்ஸார்கள் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டனர். ஆனால், மற்றும் பலரது கருத்து வேறு விதமாக அமைந்தது. இறுதியில் யுத்தம் செய்வது என நபி(ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், உஹதில் முஸ்லிம்களுக்குத் தோல்வி ஏற்பட்டாலும் உஹதின் பின்னர் இறக்கப்பட்ட குர்ஆனிய வசனத்தில் ” அவர்களை நீர் மன்னிப்பீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக. விடயங்களில் அவர்களிடம் ஆலோசனை பெறுவீராக!” (3:159) என்று அல்லாஹ் கூறினான்.  உஹதுக்கு முன்னர் தோழர்களிடம் ஆலோசனை கேட்ட நபிகளாருக்கு தொடர்ந்தும் அவர்களிடம் ஆலோசனை கேட்கும்படி இவ்வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
  5. தொழுகைக்குஅழைப்பது எவ்வாறு என்ற பிரச்சினை வந்த போது பல தோழர்களதுஆலோசனைகளும் பெறப்பட்டபின்பே தற்போதைய பாங்கு முறையை நபிகளார்(ஸல்)அறிமுகம்செய்தார்கள்.
  6. தனது மனைவி ஆயிஷா(ரழி) அவர்கள் மீது எதிரிகள் அபாண்டம் சுமத்தியவேளை அன்னார் தனது தோழர்களது ஆலோசனைகளைப்பெற்றார்கள்.
  7. நபி(ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் தனது தோழர்களுக்குச் சில கட்டளைகளை இட்ட போது அவர்கள் அவற்றை அமுலாக்கத் தயங்கிய சந்தர்ப்பத்தில் அன்னார் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தனது மனைவி உம்மு ஸலமா (ரழி) விடம் அன்னார் ஆலோசனை கேட்டது மாத்திரமின்றி அதன்படியே முடிவெடுத்தார்கள்.

குலபாஉர்ராஷிதூன்கள்

அபூபக்கர்(ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலப்பிரிவில் ஏதாவது முக்கிய அம்சங்களில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை வந்தால் முதலில் குர்ஆனிலும் சுன்னாவிலும் தீர்வுகளைத் தேடுவார்கள். அங்கு தீர்வு இல்லாதபோது ”இதுபோன்ற பிரச்சினைகள் ஏதாவது நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஏற்பட்டு அதற்கு அன்னார் தீர்வுகளை வழங்கியமை பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?” என தோழர்களிடம் விசாரிப்பார்கள். ’இல்லை’ எனப் பதில் வந்தால் மக்களின் தலைவர்களை ஒன்று திரட்டி அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள்.

உமர்(ரலி) அவர்கள் சிரேஷ்ட சகாபாக்களை மதீனாவிலிருந்து வெளியே சென்று குடியேற அனுமதிக்கவில்லை. அடிக்கடி அவர்களை கலந்தாலோசிக்கத் தேவைப்பட்டதால் இவ்வாறு செய்தார்கள். அவர்களது அரச அவையில் இளம் வயதினரான அல்லது வயது முதிர்ந்த, அல்குர்ஆனில் தேர்ச்சிபெற்றவர்கள்(குர்ராஉகள்) தான் இருந்தார்கள் என ஸஹீஹுல் புகாரியில் வரும் ஒரு ஹதீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஹாவன்த் போருக்கு முன்னர் உமர் (ரழி) அவர்கள் முக்கியமான தோழர்களுடன் கலந்தாலோசித்தார்கள்.‘’ஷூரா இன்றி எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்திலும் நலவே கிடையாது’’ என்றும் அவர்கள் ஒரு தடவை கூறினார்கள்.

ஷூராவின் துறைகள் அல்லது எல்லைகள்

ஷூரா என்பது பல்துறை சார்ந்தவர்களது அனுபவங்களையும் அறிவுகளையும் பெறுவதற்கான ஒரு முயற்சியாகும். ஒருவர் சகலகலா வல்லவராக இருப்பது சாத்தியமில்லை. வித்தியாசமான பல கோணங்களில் சிந்திப்பவர்களது கருத்துக்கள் கேட்கப்படும் போது சமூகம் வளர்ச்சி காணும்.

இப்னு குவைஸ் மின்தாத் எனப்படும் மாலிகி மத்ஹப் இமாம் குறிப்பிடுவதாக இமாம் குர்துபீ பின்வருமாறு கூறுகிறார். ”ஆட்சியாளர்கள் தமக்குக் குழப்பமான சன்மார்க்க விடயங்களில் மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை கேட்கவேண்டும். யுத்தங்களுடன் தொடர்பான விடயங்களை படையிலுள்ள முக்கியஸ்தர்களிடமும், சமுதாய நலன்கள் பற்றி மக்களுக்கு மத்தியிலுள்ள முக்கியஸ்தர்களிடமும் நாட்டின் நலன், அதனை வழிப்படுத்துவது பற்றிய விடயங்களை அமைச்சர்கள், கவர்னர்களிடமும் கேட்க வேண்டும்”.
தற்காலத்திலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், தொடர்புசாதனம்,

உளவியல்,சுகாதாரம், விவசாயம்,தொழிநுட்பம், மருத்துவம்… போன்ற மார்க்கத்தோடு நேரடியாக சம்பந்தப்படாதஇன்னோரன்ன துறைகளில் வஹியின் தலையீடுவரையறுக்கப்பட்டதாகும். அதாவது, அவற்றின் இலக்குகள், அவற்றில் ஈடுபடுபவர்களதுமனநிலை என்பன இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்றுமட்டுமே இஸ்லாம் வலியுறுத்துகிறது. இவற்றை நடைமுறைப்படுத்துவது, கண்டு பிடிப்புகளில்ஈடுபடுவது போன்ற பொறி முறையுடன் சம்பந்தப்பட்ட அம்சங்களைமனிதர்களேதீர்மானிக்க முடியும்.

இதற்கு நல்லதொரு உதாரணத்தை நபி(ஸல்) அவர்களதுவரலாற்றில் காணலாம். அவர்கள்மதீனாவுக்குவந்தவேளை ஸஹாபாக்கள் ஈத்தமரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்து விளைச்சலைப் பெற்று வந்தார்கள்.ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.நபிகளாரின் கட்டளைக்கிணங்க மகரந்த சேர்க்கை செய்யாமல் தோழர்கள் உற்பத்திசெய்த போது விளைச்சலில் வீழ்ச்சியேற்பட்டது. அப்போது நபியவர்கள் ‘‘உங்களதுஉலகவிவகாரங்களில் நீங்கள் அதிகம் அறிவுள்ளவர்களாக இருக்கிறீர்கள்’என்றுகூறி மகரந்த சேர்க்கைக்கான தடையை நீக்கினார்கள். இதிலிருந்து பயிர்ச் செய்கைமுறைகளுடன் தொடர்பான அறிவை அத்துறை சார்ந்தவர்களிடமிருந்து பெறுவதேசிறந்தது என்பதுடன் அதில் வஹியின் தலையீடு இருக்கமாட்டாது என்றும் உணர்த்தப்படுகிறது.“உங்களுக்குத் தெரியாத போது வேதத்துக்குரியவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.“(16: 43)என்ற திருமறை வசனம், துறை சார்ந்தவர்களை அணுகி அவர்களில்தங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது.

எனவே, ஹலால்-ஹராம், சுன்னத்-பிஃஅத், வாஜிப்-சுன்னத்,குப்ர்- ஷிர்க் போன்ற இஸ்லாமிய விவகாரங்களைக் கையாள்வதில் உலமாக்களுக்கு மட்டுமே அதிகாரம்வழங்கப்பட்டிருக்கிறது. எனவே,நேரடியாக மார்க்கத்தோடு தொடர்பான விவகாரங்களில் உலமாக்களிடம் நாம் ’பத்வா’ கேட்பது போல் லோகாயத்த் துறைகளில் அவ்வத் துறைசார்ந்தவர்களிடம் அத்துறைகள் பற்றிய ஆலோசனைகளைப் பெறுவதும் மார்க்கம் காட்டித் தரும் வழிமுறையாகும்.

அடையப் பெறும் நலன்கள்

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் இவ்வாறு பலதுறை சார்ந்தவர்களது கருத்துக்கள் பெறப்படுவதால் அடையப் பெறும் நலன்கள் அளப்பரியவையாகும்.

  1. இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கைத் திட்டம்என்ற யதார்த்தத்தை நடைமுறையில் காட்ட முடியும்.
  2. பல்துறை சார்ந்தவர்களும் சமூகத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பைப் பெறுவர்.
  3. ஆய்வு மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிவுபூர்வமான, தூரநோக்குள்ள திட்டங்களை வகுக்க வழியேற்படும்.
  4. வெளியிலிருந்து வரும் பல்வேறுபட்ட சவால்களை ஐக்கியமாக நின்று எதிர்கொள்வதற்கான பலம் ஏற்படும்.
  5. அற்பமான காரியங்கள் தவிர்க்கப்பட்டு அடிப்படையாகவுள்ள, உடனடியாகக்கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் இனம் காணப்பட்டு, ஆக்கபூர்வமான திட்டங்கள்வகுக்கப்படும்.
  6. ஒவ்வொரு இயக்கமும், சங்கமும் தத்தமது வேலைத் திட்டங்களில் கவனம்செலுத்துவது போலவே சமூகத்தின் பொதுவான வேலைத் திட்டங்களுக்காக ஒன்றிணைந்துஐக்கியப்படுவதற்கான சூழல் உருவாகும்.
  7. ‘ஒரு வேலைத் திட்டத்தில் பலரும் ஈடுபட, பலவேலைத் திட்டங்களில் ஒருசிலர் மட்டும் ஈடுபடுவது அல்லது எவருமே ஈடுபடாமலிருப்பது` என்ற தற்போதையநிலையில் மாற்றம் வந்து வேலைத் திட்டங்களை முஸ்லிம்கள் தமக்கிடையே முறையாகப் பகிர்ந்துகொள்ளும் நிலை உருவாகும்.
  8. ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையிலான உறவு பலத்தஅடிப்படைகளின் மீது கட்டியெழுப்பப்படவும்தேசிய நலன்களில் முஸ்லிம்கள்பங்கெடுத்து நாட்டை கூட்டாகக் கட்டியெழுப்பும் பணி விரைவுபடுத்தப்படவும்வழியேற்படும்.
  9. உணர்ச்சிவசப்படுவது, வெளிவேஷங்களில் மயங்குவது, குறுகிய இலக்குகளுக்காக முண்டியடித்துக்கொள்வது போன்ற நிலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே, அல்குர்ஆனின் கட்டளையாகவும் நபி(ஸல்) அவர்கள் மற்றும் சான்றோர்களது வழிமுறையாகவும் இருக்கும் ஷூரா பொறிமுறையை எமது வாழ்விலும் நடைமுறைப் படுத்தி அல்லாஹ்வின் அருளைப் பெற்று சமூக மேம்பாட்டையும் அடைய வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (பிரதித் தலைவர்– தேசிய ஷுரா சபை, சிரேஷ்ட விரிவுரையாளர்ஜாமிஆ நளீமியா)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top