இனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல்

அல் மஷூரா – வெளியீடு: 07
\”காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர\” (சூரா அல் அஸ்ர்)

அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்காமல், நற்கிரியைகளை செய்யாமல், சத்தியம் மற்றும் பொறுமையை பற்றி ஒருவருக்கு ஒருவர் உபதேசம் செய்து கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் மனித இனத்திற்கு ஏற்படக் கூடிய அழிவையே மேற்படி திருக்குர்ஆன் வசனங்கள் எச்சரகிக்கின்றன.

உள்ளூர் அடிப்படையிலும் உலகாலாவிய அடிப்படையிலும் முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை அனுபவிக்கும் ஒரு காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் சேறு பூசப்படுவதோடு, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு தவறான, மோசமான வரைவிளக்கணங்கள் அள்ளி வீசப்படுக்கின்றன. அது மட்டுமன்றி, உலகில் இன்று ஏற்பட்டுள்ள அனைத்து துன்பங்களினாலும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களாக இருக்க, அவற்றிற்கு காரணகர்த்தாக்களே முஸ்லிம்கள் என அபாண்டமாக பழி சுமத்தப்படுகின்றது.

அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்காமை, நற்கிரியைகளை செய்யாமை, சத்தியம் மற்றும் பொறுமையை பற்றி ஒருவருக்கு ஒருவர் உபதேசம் செய்து கொள்ளாமை தான் தற்காலத்தில் முஸ்லிம்களக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளுக்கான மூல காரணங்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இறையச்சத்துடன் தமது கடமைகளை செய்த வண்ணம் உண்மையான முஸ்லிம்களாக உலகில் வாழ்பவர்களுக்கு இம்மை மறுமை இரண்டிலும் இழிவுகள் மற்றும் நஷ்டங்கள் தவிர்க்கப்படுவதற்கான நிபந்தனைகள் மேலே உள்ள திருமறை அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வசனங்களின் படி, மனோ இச்சைக்கு அடிபனிந்து வாழந்த வண்ணம் தம்மை உண்மையான விசுவாசிகள் என கூறிக்கொள்வதில் எவ்விதப் பயனும் கிடையாது என்பது தெளிவாகின்றது. தமது செயல்களுக்கு அவர்கள் பொறுப்புதாரிகள் ஆவதுடன், ஒரு நாள் அச்செயல்களுக்கான விளக்கங்களை அவர்கள் அல்லாஹ்விடம் சமர்பிக்க வேண்டியும் வரும்.

அல்லாஹ்வின் பூரண பாதுகாப்பானது அவனுக்காக அர்ப்பணமாகும், நம்பிக்கை உறுதியுடன் அசையாமல் இருக்கும் உண்மை விசுவாசிகளுக்கு நிச்சயம் கிடைக்கின்றது. எனவே இனவாதம் மேலோங்குவதை பற்றியோ இஸ்லாம் விரோத கருத்துக்கள் பரப்பப்படுவதை பற்றியோ தூய்மையான விசுவாசிகள் அதிகம் கவலைக் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கான இறைவனின் காவல் கிடைப்பதற்கான நிபந்தனை அவர்கள் நல்லொழுக்கமிக்க வாழ்க்கையை கடைபிடிப்பதே.

இருப்பினும், ஒரு தேசத்தலில் இனவாதம் பெருகுவது என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி அந்நாட்டின் சகல மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு துர்பாக்கிய நிலையாகும். மேலும், அது சர்வதேச ரீதியில் அந்நாட்டிட்கு அவப்பெயரை ஏற்படுத்தி இறுதியில் அதன் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது, மதத்தின் அல்லது இனத்தின் பெயரால் பிரிவினiயையும் மிதவாதத்தையும் தூண்டுபவர்கள் தேசதுரோகிகளாவதுடன், அவர்கள் தமது மோசமான செயல் மூலம் தேசத்தை அதல பாதாலத்தில் வீழ்த்தவே எத்தனிக்கின்றனர்.

இதே வேளை, மேலோங்கி வரும் பௌத்த தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் விரோத முன்னெடுப்புக்களுக்கும், நாட்டில் வாழும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களுக்கோ சங்கைக்குரிய பௌத்த மதத்தலைவர்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவான விடயமாகும். பெரும்பான்மை சிங்கள மக்கள் வவேகமாக சிந்திக்கக் கூடிய, கல்வி அறிவுள்ள, நாகரீகமான, தேசப்பற்றுள்ள ஒரு பிரிவினரே ஆவர். மீண்டும் நம் நாட்டில் பிரிவினையும் மோதலும் ஏற்படுவதை அவர்கள் ஒருபோதும் விரும்புவர்கள் அல்ல.

இது காலம் வரை நாட்டை முன்னேற விடாமல், பின்னோக்கி இழுத்துக்கொண்டிருந்த இனவாதம், மதவாதம், ஊழல், மோசடி போன்ற தீங்குளில் இருந்து தேசத்தை விடுவித்து பல்லின மதப்பிரிவுகள் ஒற்றுமையுடன் வாழும் ஒரு உன்னத தேசமாக இலங்கைத் திருநாட்டை மாற்றுவது மைத்திரி-ரனில் நல்லாட்சி அரசினதும் அபிலாi~யாகும். மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்த வண்ணம், பரஸ்பர கண்ணியத்துடன்; பல்லினங்கள் ஒற்றுமையுடன் வாழும் சனனாயக கோட்பாடுகளை மதிக்கும் ஒரு தேசமாக நம் நாட்டை உயர்த்தும் தற்போதைய அரசின் இந்த உன்னத இலக்கை அடைய பிரஜகள் அனைவரும் முழுமையாக பங்களிப்பு செய்தல் கட்டாயமாகும். இனவாதம், தீவிரவாதம், ஊழல், மோசடி என்பன அபிவிருத்தி மற்றும் நாகரீகத்தின் எதிர் சக்திகள் ஆகும். எனவே இத்தீய சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்பது நாட்டு மக்களினதும், அரசாங்கத்தினதும் தலையாயக் கடமையாகும்.

கடந்த பல ஆண்டுகளாக இனவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி மௌனமாக துன்பங்களை அனுபவித்த வந்த இந்நாட்டு முஸ்லிம்கள் சட்டத்தின் ஆளுகையும் ஒழுங்கும் பாரிய விதத்தில் வீழ்ச்சி அடைவதை கண்டு திகைத்தனர். சில காலங்களுக்கு முன்பு அளுத்கமையில் நடைபெற்ற கோரமான சம்பவங்கள் உட்பட நாட்டில் பல இடங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம் விரோத சதிகள் காரணமாக முஸ்லிம்கள் பெரிதும் கவலை கொண்டு விரக்தியுற்றிருந்தனர். நல்லாட்சி மலர்ந்த பின்பும் இந்நிலை மீண்டும் தலைதூக்குவதை அவதானித்து வந்த தேசிய ஷூரா சபை, 2016 ஜுலை 11 ம் திகதி ஏனைய சகோதர அமைப்புக்களை ஒன்று கூட்டி நடத்திய கலந்தாலோசிப்பின் போது கீழ் காணும் தீர்மாணங்களை நிறைவேற்றியது:

  1. முஸ்லிம்களது மனதைப் புண்படுத்தும் அவர்களுக்கெதிரான வி~மப் பிரசாரங்களும் சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் மதங்களுக்கெதிரான இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகளும் மீண்டும் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் நாட்டின் சகல குடிமக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழும் ஒரு சூழலை உருவாக்கும் மற்றும் அதனை ஊர்ஜிதப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது என்பதை தேசிய ஷூரா சபை வலியுறுத்த விரும்புகிறது.
  2. அரசியல் யாப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பது போல அரசாங்கமும் நீதி மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்றுள்ள பொலிஸ் போன்ற அரச நிறுவனங்களும் நாட்டின் சகல பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். மேலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் விடயத்தில் எவ்வித தயக்கமோ பாரபட்சமோ இல்லாமல் நடந்து கொள்ளவதும் அவசியமாகும்.
  3. இது தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிரிசேன, கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம் அரசியல்வாதிகள், பாதுகாப்பு செயலாளர் மேலும் அதிகரித்து வரும் இன மற்றும் மத விரோத சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க பாடுபட்டு வரும் தன்னார்வக் குழுக்கள் போன்றோரை சந்தித்து அதிகரித்துவரும் இனவாதம் மற்றும் மதரீதியான வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தேசிய ஷூரா சபை தீர்மானித்துள்ளது.
  4. தற்காலத்தில் தலை தூக்கியிருக்கும் பண்பாடற்ற இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் மறைவான ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கலாம் என தேசிய ஷூரரா சபை கருதுவதுடன், அவற்றின் மூலம் அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்து, தேசத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டு வரும் நோக்கம் அதற்குள் அடங்கியிருக்கலாம் எனவும் தேசிய ஷூரா சபை சந்தேகிக்கின்றது.
  5. இதே வேளை, ஊடக தர்மத்தைப் பேணிக் கொள்வதிலும் அதற்கான ஒழுக்க விழுமியங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதிலும் சகல வகையான ஊடகங்களுக்கும் அதிமுக்கிய பங்கு உண்டு எனவும் தேசிய ஷூரா சபை நம்புகின்றது.
  6. இதே வேளை, சிங்கள சமூகத்திலுள்ள ஒரு சிலரது மோசமான நடவடிக்கைகளைப் பொருத்தவரையில் பண்பாடான மரியாதைக்குரிய பெரும் எண்ணிக்கையிலான சிங்கள மக்களை அவை எந்த வகையிலும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பதை ஷூரா சபை நன்கு உணர்ந்துள்ளது. ஒரு சில பௌத்த மதகுருக்களது மோசமான நடவடிக்கைகள் முழு பௌத்த பிக்கு சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்த மாட்டாது என்ற உண்மையயும் அது விளங்கி வைத்துள்ளது.
  7. எனவே தீய சக்திகளின் தூண்டுதல் மற்றும் தந்திரங்களுக்குள் சிக்க வேண்டாம் என்றும், பொறுமையை கடைபிடிக்கமாறும் விட்டுக் கொடுத்து நடக்குமாறும் முஸ்லிம்களை தேசிய சூரா சபை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. இஸ்லாம் என்பது அமைதியையும் அன்பையையும் வலியுறுத்தும் சாந்தி மார்க்கம் ஆகும் என்பதையும் அது முஸ்லிம்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது.
  8. இந்த அசாதாரண சூழலை கையாழுவதற்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசு காண்பதற்கு உதவும் வகையிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான செய்திகளையும் பிழையான கருத்துக்களையும் தெளிவு படுத்துவதற்குமான ஒரு பிரத்தியேகமான பிரிவை அமைப்பது பற்றி தேசிய ஷூரா சபை ஆராய்ந்து வருகின்றது. இது பரஸ்பர புரிந்துணர்வும் சமாதான சகவாழ்வும் எற்பட வழிவகுக்கும் எனவும் அது உறுதியாக நம்புகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top