தேசிய ஷூரா சபையுடனான சந்திப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுத்தல்
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் மற்றும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபைக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை(26) இரவு கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கை முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களில் முஸ்லிம் சமூகத்தின் சமகால மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எந்தளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது, அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுவரும் அதிர்ச்சிதரும் மாற்றங்கள், புதிய அரசியலமைப்பு மாற்றத்தில்; தேர்தல் முறைமை மாற்றம், முஸ்லிம் தனியார் சட்டம், வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு, என்பன பற்றியும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப்பிரச்சினைகள் மற்றும் பொதுவாக சமூகப் பிரச்சினைகள் கலந்தரையாடப்பட்டன.
தேசிய ஷூரா சபை தலைவரான தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப அமர்வில் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பைசல் காசிம் மற்றும் கௌரவ அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம் நவவி, முஜீபுர் ரஹ்மான், அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எஸ்.எம் மரிக்கார், இஷ்ஹாக் ரஹுமான், காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்து முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான பல முக்கிய வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
அதன்படி பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன,
- முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாகிய பைதுல் முகத்தஸ் மீதான யுனெஸ்கோ தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்தது இலங்கை அரசாங்கம் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டதையும், அதனைத் தவறான முறையில் நியாயப்படுத்த முயற்சித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களது கூற்றையும் வன்மையாக் கண்டித்தும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடல்.
- இலங்கை முஸ்லிம்களின் உடனடியாகத் தீர்வுகானப்பட வேண்டுடிய அல்லது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதில் கட்சிபேதம், பிரதேசவாதம் மறந்து அனைத்து முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான தளத்தை தேசிய ஷுரா சபை உருவாக்கி முன்னெடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு பிரச்சினையும் பல்பக்க வடிவங்களையும், நீண்டகால வாழ்வியல் சான்றாதாரங்களையும், சிக்கல்தன்மைகளையும் கொண்டுள்ளமையினால், அவை அனைத்தும் தனித்தனியாக துறைசார்ந்த நிபுணர்களின் பங்கேற்புடன் ஆராந்து தீர்வுகாணப்பட வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும், பாராளுமன்றம் நடைபெறும் வாரங்களின் (முதலாம்/மூன்றாம் வாரங்கள்) புதன் கிழமைகளில் (7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல் தொடர்சியாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்த அமர்வுகளுக்கான தெளிவானதும், வெளிப்படையானதுமான நிகழ்ச்சி நிரல்களும், சபை ஒழுங்குகளும் பேணப்படல் வேண்டும்.
அன்றைய தினம் பாராளுமன்றத்தில் VAT சட்டமூலம் மீதான வாக்கெடுப்பிற்கான காலம் திடீர்ரென ஒரு மணி நேரத்தால் (பி.ப.6.30 இலிருந்து 7.30 வரை)) நீடிக்கப்பட்டமை காரணமாக கௌரவ அமைச்சர்களான ரவூப் ஹகீம் மற்றும் கபீர் ஹாஷிம் உட்பட பல உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க முடியாமைக்கான தமது வருத்தத்தை தொிவித்ததுடன் தேசிய சூரா சபையின் அடுத்தகட்ட முன்னெடுப்புக்களுக்கு தமது ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என்பதனையும் அறியத்தந்தனர். அமைச்சர்களான ஏ. எச். எம். பவுஸி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், அலி ஸாஹிர் மவ்லானா ஆகியோர் தமது வெளிநாட்டுப்பயணம் காரணமாக சமூகமளிக்க முடியாமையை அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரவு 8 மணி தொடக்கம் 10.00 மணிவரை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தேசிய ஷுரா சபையில் அங்கம்வகிக்கும் 18 தேசிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தேசிய ஷுரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.