முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

Muslim-Marriage-Act

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு  அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் நமக்கு வழங்கியிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை நீக்கிக் கொண்டது. இதன் போது, மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளை கடந்த அரசாங்கம் மீறி வந்தைமையே அதற்கான பிரதான காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன.

அதன் பின் ஆட்சிக்கு வந்த தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை மீண்டும் பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வந்ததுடன், இறுதியில் அச்சலுகையை மறுபடியும் பெற வேண்டுமாயின் அதற்காக 58 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விதித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தது.

நாம் அறிந்த விதத்திலும் வெளியாகிய தகவல்கள் படியும் மேற்படி நிபந்தனைகள் அனைத்தும் மனித மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பானவையே.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இசைவாகும் ஒரு நடவடிக்கையாக இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த உப குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மாணித்துள்ளதாக வெளியாகிய செய்தி இலங்கை முஸ்லிம்களை வியப்பிட்கும் அதிர்ச்சிக்கும் உட்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய சட்டத்துடன் இசைவாகும் விதத்தில் தற்போது இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை தேசிய ஷூரா சபையும் கொண்டுள்ளது. ஆனால்,அச்சீர்திருத்தம் தொடர்பான செயற்பாடுகளை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தலைமையில் முஸ்லிம் சமூகமே மேற்கொள்ள வேண்டும் என்பதும் அதைத் தவிர்த்து, அந்த மாற்றங்கள் வெளி நபர்களால் மேற்கொள்ளப்பட முடியாது என்பதும் எமது நிலைப்பாடாகும்.

இறை கட்டளைகளின் அடிப்படையில் உள்ள இஸ்லாமிய சட்டங்களில் உள்நாட்டு சூழலுக்கு ஏற்றவாரு சில சிறிய மாற்றங்களை மேற்கொள்வதென்பது மிகவும் எச்சரிக்கையுடன் அனுக வேண்டிய ஒரு விடயமாகும்.

இதனடிப்படையில்,இவ்விடயம் தொடர்பாக நீதிபதி ஸலீம் மர்சூஃப் தலைமையில் பல முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மற்றும் விற்பன்னர்களைக் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் நியமனம் செய்ததுடன், கடந்த 7 ஆண்டு காலமாக இது பற்றி அக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.அத்துடன்,அக்குழுவின் இறுதி அறிக்கை முற்றுப் பெரும் தருவாயில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்,இது போன்ற பாரதூரமான ஒரு விடயத்தை அமைச்சரவை நியமித்துள்ள ஒரு உப குழுவின் பொறுப்பில் விடுவதன் விவேகம் பற்றிய கேள்வி இயல்பாகவே எழுகின்றது. மேலும், இதில் உட்படும் முஸ்லிம் அமைச்சர்கள் ஏதேனும் தவறுகள் செய்யும் பட்சத்தில் இஸ்லாமிய சமூகத்தின் தீராத விசனத்திற்கும் இலக்காகும் அபாயமும் உள்ளது என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஒருவருக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றும் உரிமை நம் அரசியல் யாப்பு மூலமே உறுதி செய்யப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். அதன் படி, இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் மீது கை வைப்பது என்பது ஒரு ஜனநாயக உரிமை மீது கை வைப்பதற்கு சமமாகும்.

தமது மார்க்கத்தின் அடிப்படையில் செயற்படும் சுதந்திரமானது காலனித்துவ ஆட்சிக்கும் முன்பிருந்தே முஸ்லிம்களுக்குள்ள ஒரு உரிமையாகும். அத்துடன், இஸ்லாமிய சட்டமும் தனிநபர் சட்டமும் நம் நாட்டில் ஒரே சட்டக் கோவையில் இடம் பெற்றுள்ளமையானது, இன பன்முகத்தன்மை இலங்கையின் அரசியல் சாசனம் மூலமே ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளமைக்கான சிறந்த ஒரு உதாரணமாகும். அத்துடன் பல இனங்கள் சம உரிமையுடன் வாழும் ஒரு தேசம் என்ற வகையில் நாம் பெருமைப்படக் கூடிய ஒரு விடயமும் ஆகும்.

இதை பலவீனப்படுத்துவதானது அரசாங்கம் தற்சமயம் மேற்கொண்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளையும் பாரிய விதத்தில் பின்னடையச் செய்துவிடலாம்.

எனவே, ஒரு தலைப்பட்சமாக அரசு திட்டமிட்டு வரும் மேற்படிமுஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்த முன்னெடுப்பை, ஸலீம் மர்சூஃப் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை பிற்படுத்துமாறு தேசிய ஷூரா சபை கேட்டுக்கொள்கின்றது.

அத்துடன், 2015 ஜனவரி மாதத்தில் நம் நாட்டு அரசியல் அரங்கில் ஏற்பட்ட சரித்திர முக்கியத்துவம் மிக்க மாற்றத்திற்கு துணிச்சலாக தோள் கொடுத்து முக்கிய பாத்திரமேற்று செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறும்  நல்லாட்சி அரசாங்கத்தை எமது சபை கேட்டுக்கொள்கின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top