கடந்த ஒக்டோபர் 8, 9 திகதிகளில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழு மேற்கொண்டது. பிராந்திய உறவினைப் பலப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் நோக்கங்கள், இலக்குகள் எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்துகொள்ளல், கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடையாளம் காணல், அவற்றுக்கான தீர்வுகளை அடையக்கூடிய வழிவகைகளை பிராந்திய தலைமைகளுடன் ஆராய்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டு இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கல்குடா மஜ்லிஸ் ஷூரா, ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அம்பாறை மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளுடன் விஷேட சந்திப்புகளும் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, தேசிய ஷூரா சபையின் செயற்பாடுகள், பிராந்தியத்தில் செயற்படும் கூட்டுத்தலைமைத்துவ அமைப்புகளின் செயற்பாடுகள், பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், தேசிய ஷூரா சபையுடன் எதிர்கலத்தில் பிரதேச தலைமைத்துவங்கள் இணைந்து செயற்படக்கூடிய பொறிமுறைகள் என்பன பற்றியும் கலந்திரையாடப்பட்டன.
தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தின் போது அதன் பிரதித் தலைவர் அஷ்-ஷேய்க் எஸ்.எச்.எம் பழீல் (நளீமி), நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் எஸ்.எச்.எம் ஹஸ்புல்லாஹ் (சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்), சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், மௌலவி எம். தஸ்லீம் (கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிரதம இமாம்), கலாநிதி. ரமீஸ் அபூபக்கர் (சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) சட்டத்தரணி ரூடானி ஸாஹிர், சகோ. எம். பார்ஸான் ஆகியோரும் செயலக உறுப்பினர்களான சகோ. எம். அஜ்வதீன் (சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி, இலங்கைப் பாராளுமன்றம்), சகோ. சிராஜ் மஷூர், சகோ. ஸஜாத் இஸ்லாஹி, சகோ. இஹ்திஷாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்துக்கான இரண்டாம் கட்ட விஜயம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் காலங்களில் திருகோணமலை மாவட்டத்துக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.