பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

123

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த ஆலோசனை மன்றத்தின் (Consultative Forum) முதல் சந்திப்பு கடந்த  2016 நவம்பர்  17ம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

\"123\"

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை மையமாக வைத்து  இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ பார்ளுமன்ற உறுப்பினர் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம். அமீர் அலி எம். முஜிபுர் ரஹ்மான், காதர் மஸ்தான், எம். மன்சூர், இஸ்ஹாக்  அப்துல் ரகுமான், எம். எஸ். தவ்பீக், அப்துல்லாஹ் மஹரூப் மற்றும் அலி சாகிர் மௌலானா ஆகியோரும், தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜே. தரிக் மஹ்முத் அவர்களின் தலைமையின் கீழ் தேசிய ஷூரா சபையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பல்துறை வல்லுனர்கள் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள் பங்குபற்றினார்கள்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கான சாதக பாதகங்கள், மற்றும் அத்திட்டத்தில் சமூகத்தில் கவனிக்கப்படாத விடயங்கள் போன்றன  பற்றிய ஒரு சுருக்க உரையை தேசிய ஷூரா சபையின்செயற்குழு உறுப்பினரும் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சகோ.எம்.அஜ்வதீன் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தேவைகள், பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், ஆசிரியர் நியமனங்களில் காட்டப்படும் பொடுபோக்குகள், முஸ்லிம்களின் சுகாதார நிலைமைகள் போன்றன பற்றி கவனம் செலுத்தப்ப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, ’இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய சமூகப் பொருளாதார நிலை’ எனும் தொனிப்பொருளில்  தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளரும் வரி மதிப்பீட்டுத் திணைக்கள ஆணையாளருமான அஷ்ஷெய்க் என்.எம்.மிப்லி (நளீமி) அவர்களால் ஓர் உரை நிகழ்த்தப்பட்டது. இலங்கையின் மொத்த சனத் தொகையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் சராசரி 6% ஆக இருக்கையில் இலங்கை முஸ்லிம்களில்  21%ம் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டின் கீழ்  நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் . மேலும்,பொதுவாக முஸ்லிம்கள் ஒரு வியாபார சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டாலும் உண்மையில் மற்ற சமூகத்தவர்களுடன் ஒப்பீட்டு ரீதியில் பார்க்கையில் ஒரு பின்தங்கிய சமூகமாகவே உள்ளனர் என புள்ளிவிபரங்கள் மற்றும் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினார்.

\"photo577815776286845032\"

இந்நிகழ்வில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகையில் இந்த வரவு செலவுத்திடத்தில் முஸ்லிம் சமூகதின் நலன்களோடு தொடர்பான விடயங்களில் தங்களினாலான முடியுமான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதியளித்தனர். அத்தோடு முஸ்லிம் சமூகத்தின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக கொழும்பு மத்தியப் பிரதேசத்தில் தற்போதுள்ள பாடசாலைகளில் முதலாம் ஆண்டிற்கான பிள்ளைகளை சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள், அங்கு மேலதிகமாக பாடசாலைகள் தேவைப்படுவதன் முக்கியத்துவம், பாடசாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதியற்ற நிலைமை,  மக்களின் பொருளாதார நிலை, அரசாங்க பாடசாலைக்கு சேர்க்க முடியாமையால் சர்வதேச பாடசாலைகளுக்கு தங்களது பிள்ளைகளை சேர்த்துவிட்டு வறுமையின் காரணமாக இடை நடுவில் கல்வியை விட்டுவிடுபவர்களின் எண்ணிக்கையில் உள்ள அதிகரிப்பு, தொழில்வாய்ப்பின்மை  போன்றன அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் அவ்விடயங்களில் அரசாங்கத்துக்கு உதவியாக முஸ்லிம் வியாபார சமூகமும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இருக்கின்ற பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டது. அத்தோடு தேவையென அடையாளம் காணப்பட்ட இடங்களில் புதிய பாடசாலைகள் நிர்மானிப்பதற்காக அரசாங்க ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்விற்கு முஸ்லிம் (BUSINESS COMMUNITY) வியாபார சமூகத்தை  சேர்ந்த சில பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிட்த்தக்கதாகும். அவர்கள் தமது வியாபாரத்தைத் தொடர்வதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் அச்சிக்கல்களிளிருந்து வெளிவர எடுக்கத் தேவையான நடவடிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் ஒரு நபரின் குறைந்த வருமான அளவினை திடீரென அதிகரித்தமையானது முஸ்லிம்களில் கணிசமான தொகையினர் சம்பந்தப்பட்டுள்ள  வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், குறைந்த வருமானத்தின் விடயத்தில் மற்ற நாடுகளுடனும் உலக சந்தையுடனும்  போட்டியிட முடியாவிடின் மத்திய கிழக்கு மற்றும் இதர நாடுகள் இலங்கைக்கு வழங்கும் வீசா முற்றாக தடைப்பட சாத்தியமுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக இலங்கைக்கு வரும் அந்நியச்செலாவணியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஒரு மிக முக்கிய பங்களிப்பு செய்வது பற்றியும் பேசப்பட்டது. அதற்குப்பகரமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் தகமைகளை(Skilled Qualification) அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதன் மூலம் குறைந்த வருமானத் தொகையை அதிகரிக்க முடியுமெனவும் கூறபட்டது. ஆனாலும் அதை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதாகவும் உணர்த்தப்பட்டது.

அத்தோடு ஏற்றுமதியாளர்களின் சார்பாக விடப்பட்ட கோரிக்கையில் ஏற்றுமதிக்காக மொத்த வருமானத்தில் செலுத்தும் “CESS” வரிக்குப் பகரமாக மொத்த இலாபத்தில் அறவிடப்படும் வரியினை (Income Tax) அறவிடும்படியும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது. இவ்விடயத்திக்குப் பதிலளிக்கையில்  அது பற்றி ஆராய்ந்து முடியுமான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மேற்படி சந்திப்பின் போது, 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் போது அவர்கள் பயன்படுத்துவதற்கு உதவியாக  அமையலாம் எனக் கருதப்பட்ட சில ஆவணங்கள் அடங்கிய ஒரு கோப்பு அவர்களில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமக்கு அழைப்புவிடுக்கப்படுவதை இட்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் தொடர்ந்தும் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

குருனாகல் மாவட்டத்தின் மும்மானை எனும் கிராமத்து முஸ்லிம்கள் இனவாதிகளது செயற்பாடுகளால் பொருளாதார ரீதியான ஒதுக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது பற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு தேசிய ஷூரா சபைக்கு மும்மானைக் கிராமத்தின் பிரதிநிதிகள் ஏற்கனவே விடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கான சந்தர்ப்பமும் அன்றைய கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top