அல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்

al mashoora issue 08 dsg by zamil 1

அல் மஷூரா: வெளியீடு 08

தஸ்கியத்துன் ந.ப்ஸ் – ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதே வெற்றியின் முதல் படித்தரமாகும்.

நிச்சயமாக எவன் (தனது) ஆன்மாவை தூய்மைப்படுத்தினானோ அவன் வெற்றி பெற்றான். எவன் அதை அசுத்தப்படுத்தினானோ அவன் தோல்வி அடைந்தான் -அல் குர்ஆன் 91:9,10
இலங்கைக்கு GSP+ சலுகையை வழங்குவதற்கு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருப்பதை கண்டித்து தேசிய ஷூரா சபை ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது. தேசிய ஷூரா சபையானது தேசிய மட்டத்தில்; இயங்கக் கூடிய 18 முஸ்லிம் அமைப்புக்களை கொண்டதொரு ஒருங்கிணைப்பாவதுடன், இலங்கையை புவியரசியல் ரீதியில் நெறுக்கும் தனது முயற்சியில் ஒரு அங்கமாக நல்லாட்சி, வெளிப்படைத் தன்மை மற்றும் நீதி என்ற போர்வைகளில், இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை தேவையற்ற விதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வம்பிற்கு இழுப்பதை இச்சபை வன்மையாக கண்டிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகளை சார்ந்த அமைப்பக்களின் வற்புறுத்தல்களின் விளைவாகவும் ராஜபக்~ அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் காரணமாகவும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த GSP+ சலுகை அப்போது நீக்கப்பட்டது. ஆனால், இதற்கும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. இச்சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் படி ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துவதானது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் ஒரு முறையற்ற செயலாகும். அது மட்டுமன்றி அதற்கு எதிராக முஸ்லிம்கள் குரல் எழுப்பும் நிலை உருவாகும் போது, GSP+ சலுகை இலங்கைக்குக் கிடைப்பதற்கும் அதன் ஊடாக ஏற்படும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முஸ்லிம் சமூகம் தடையாக இருப்பதாக அதை தென்படச் செய்து, இங்குள்ள ஏனைய இனங்களுடன் முஸ்லிம்களுக்கு பகைமை ஏற்படத்துவதற்கான ஒரு சதியுமாகும். எனவே இது நமது அரசியல் தலைவர்கள் தெளிவாக புறிந்து கொள்ள வேண்டியதொரு ஆபத்தான நிலையாகும்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமானது அரசியல் சாசனத்தில் உட்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம் தனிநபர் சட்டத்தைச் சார்ந்த, அவர்களுடைய ஒரு சொந்த விடயமாகும். மாறாக, இதற்கும் இலங்கையின் தேசிய பொருளாதாரம் அல்லது பணியாளர் மற்றும் தொழில்துறை உற்பத்தித் திறன் இடையே எவ்வித தொடர்புமில்லை. அது தவிர, சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் ஒரு நாடாகவும் இலங்கை கருதப்படுவது கிடையாது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்படி முயற்சியை நாம் கண்டிப்பதோடு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் ஒன்றாகவும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு சொந்த விடயமாகவும் எடுத்தக் கொள்ளும் படி நல்லாட்சி அரசை கேட்டுக்கொள்ளும் அதே வேளை, இலங்கையின் ஒரு சமூகத்தை ஏனைய சமூகங்களுடன் மோத விடுவதற்கு உள்நாட்டு விடயம் ஒன்றில் தலையிடுவதன் ஊடாக ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக மேற்கொள்ளும் இந்த சதியின் உட்கருத்தை புறிந்து கொள்ள முயற்சிக்குமாறு பொதுமக்களையும், தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களையும், ஏனைய முன்னணி இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் அல்லாத அமைப்பக்களையும் தேசிய ஷூரா சபை கேட்டுக் கொள்கின்றது.

மேலும், அநாவசியமாக அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் மோதிக் கொள்ளும் ஒரு சூழலையும், அதைத் தொடர்ந்து அரசின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மந்தகதியாக்கிவிடும் ஒரு நிலையையும், அத்துடன் சில பிரிவினர்களை தீவிரவாதத்தின் பக்கம் தள்ளி விடும் ஒரு நிலையையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்படி வலியுறுத்தல் உருவாக்கி விடும் அபாயமும் உள்ளது.

தேசிய ஷூரா சபையானது இலங்கையின் அபிவிருத்தியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதோடு, தேசத்தின் சுபீட்சத்திற்காக கட்சி அரசியலை புறக்கனித்து, ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கத்திற்கும்; பூரண ஒத்துழைப்பை வழங்க அது என்றும் சித்தமாகவுள்ளது. தேவையற்ற வெளிப்புற தலையீடுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் தீய உள்நோக்கம் கொண்ட அரசியல் பித்தலாட்டங்களும் சமூகத்தின் சில குழுக்களை தீவிரவாதத்தின் பக்கம் இட்டுச் செல்லும் சாபக்கேடுகள் ஆகும். இது ஒவ்வொரு பிரஜையும் இனங்கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டியதொரு விடயமாகும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் விவகாரத்திற்கு எதிராக இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) செயற்பட்ட விதத்திலேயே இது ஊர்ஜிதமாகின்றது.

அனுபவமிக்க, முதிர்ந்த மற்றும் முன்னணி இஸ்லாமிய அமைப்புக்கள் இப்பிரச்சினை விடயத்தில் பொறுப்புணர்ச்சியுடனும் நிதானத்துடனும் செயற்பட்ட அதே வேளை பிரதான முஸ்லிம் அமைப்புக்களில் ஒன்றாக பொதுவாக கருதப்படாத இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தும் அதன் சில இள இரத்தங்களும் பதற்றத்தைத் தூண்டும் விதத்திலும் முறையற்ற விதத்திலும் செயற்பட்டு இந்த விவகாரத்தை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பான ஒரு பிரச்சினையைத் தூண்டி இனங்கள் இடையே பகைமையும் இனவாதத்தையும் தூண்டி விடும் ஒன்றாக மாறும் ஆபத்தான சூழலை உருவாக்க அண்மித்ததை கண்டோம்.

இந்த அடிப்படையில் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய அண்மைய ஆர்பாட்டத்தை, முறையற்ற மற்றும் இஸ்லாத்திற்கு புறம்பான விதத்திலேயே மேற்கொண்டதாக நமது சபை கருதுகின்றது. இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தினர் மேற்படி ஆர்பாட்டத்தை மேற்கொண்ட விதத்தைக் கண்டிக்கும் அதே வேளை, அவர்களுடைய சமூக மற்றும் மார்க்கப் பற்றையும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் கை வைப்பதன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீய உள்நோக்கத்திற்கு எதிராக அவர்கள் வெளிப்படுத்திய தேச பக்தியையும் தேசிய ஷூரா சபை பாராட்டுகின்றது.

அதே சந்தர்ப்பத்தில், நிதானமின்மை மற்றும் ஆவேசமானது தம்மை தீவிரவாதத்தின் பக்கம் இட்டுச் செல்லலாம் என்ற விடயத்தையும், அதன் மூலம் இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் பற்றி நிலவும் நல்லெண்ணம் பழுதடைந்து விடலாம் என்பதையும், இறுதியில் சமூகத்திற்கு நன்மையை விட தீங்கையே தமது செயற்பாடுகள் ஏற்படுத்தும் என்பதையுதம் அவர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

முஸ்லிம்கள் என்ற விதத்தில் நாம் மேற்கொள்ளும் செயல்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சரியானவையாகவும், ஒழுக்க விழுமியங்களின் எல்லைகளுக்கு உட்பட்டவையாகவும், வல்ல அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுபவையாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது நமது கட்டாயக் கடமையாகும். முஸ்லிம்கள் என்ற ரீதியில் நமது சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பல நமக்கு உள்ளதோடு, மனித இனத்தின் தேவைகளுக்கு குரல் கொடுக்கும் சிறந்த முஸ்லிம்களாக தகைமை பெறுவதற்காக தஸ்கியதுன் நஃப்ஸ் ஊடாக நமது ஆன்மாக்களை தூய்மைப்படுத்திக் கொள்வதும் நமது கடமைகளில் ஒன்றாகும் என்பதையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Scroll to Top