நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு வெள்ளிக்கிழமை (18.11.2016) குத்பாப் பிரசங்கத்தை கதீப்மார்கள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் அமைத்துக் கொள்வது நல்லது என தேசிய ஷூரா சபை கருதுகிறது:
- முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவோ பெரும்பான்மையினராகவோ வாழ்ந்த போதிலும் பிற சமுதாயத்தவர்களது மத, கலாசார, தனித்துவங்களை கொச்சைபடுத்தாமல் அவர்களுடன் சகிப்புத்தன்மையோடு , சமாதான சகவாழ்வைப் பேணி வாழும்படியே இஸ்லாம் கட்டளையிடுகிறது.
அ. பிறர் வணங்கும் தெய்வங்களை ஏசலாகாது (06:108)
ஆ. மார்கத்தை பலாத்காரமாக திணிக்கலாகாது (2:256)
இ.முஸ்லிம்களுக்கு மத்தியில் பிறசமயத்தவர்கள் வாழ்வதற்கு இஸ்லாம் அங்கீகாரமளித்துள்ளதுடன் அவர்களுக்கு தேவையான பாதுகாப்புகளையும் அது வழங்கியுள்ளது.மதீனாவில் யூத,கிறிஸ்தவர்கள் மதீனா சாசனத்தின் பாதுகாப்பின் கீழ் ‘திம்மீக்கள்’ என்ற கௌரவமான நாமத்துடன் வாழ்ந்தார்கள்.
- பிற சமயத்தவர்கள் அல்லாஹ்வையோ அவன் தூதரையோ இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ விமர்சிக்கும் போது அவற்றை வன்முறையாலும் கடும் சொற்களினாலும் எதிர்கொள்ளாமல் மிகவும் அழகிய வழிமுறைகள் மூலமே எதிர்கொள்ளவேண்டும். (23:96), (41:34) மூஸா (அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்களையும் அல்லாஹ் பிர்அவுனிடம் அனுப்பிய போது மிருதுவான பேச்சு மூலம் தகவல் பரிமாறும்படியே கட்டளையிட்டான். (20:44)
- விதண்டாவாதம், குதர்க்கம், மனதைப் புண்படுத்தும் வார்த்தைகள் என்பவற்றைத் தவிர்த்து ,பண்பாடன முறைகளிலேயே உரிமைப் போராட்டங்களும் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற வேண்டும். அப்படியல்லாத அணுகுமுறைகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
- குறிப்பாக Social Media – சமூக வலைத்தளங்களில் பிறசமயத்தவர்களை சீண்டும் வகையில் அபிப்பிராயங்களை (Comments) இடுவதையும் ஆக்கங்களை எழுதுவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளை நீக்கி சகவாழ்வைத் தூண்டும் குறிப்புக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனாவசியமான , பீதியை உண்டுபண்ணும் தகவல்கள் சமுதாயத்தில் அவநம்பிகையைத் தோற்றுவிக்கும்.
- சமூகவலைத்தளங்களில் வரும் எந்தவொரு தகவலும் முதலில் ஊர்ஜிதமானதா என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் அரசியல் நோக்கம் கொண்டவர்கள், நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு மாற்றும் எண்ணமுள்ளவர்கள், நாட்டை இனமுறுவல் நிலைக்கு தள்ளி குளிர்காய விரும்புபவர்கள் அந்த தகவல்களை உருவாக்கியிருக்கலாம். ஒரு முஸ்லிம் முதலில் தகவல்களை ஊர்ஜிதம் செய்யாது பரப்பமாட்டான். அப்படி பரப்புவது பாவமாகும் , பெரும்குற்றமாகும்.(49;06) அவனது பொறுப்பற்ற நடத்தைக்காக அவன் மறுமையில் விசாரிக்கப்படுவான். (17:36), அச்சமூட்டும் தகவலொன்று கிடைத்தால் அதனைப் பரப்ப முன்னர் அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நேரடியாக சம்பத்தப்பட்டு அதன் நம்பகத்தன்மையை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.(4:83)
- தகவல் ஊர்ஜிதமானதாக இருந்தாலும் அதனைப் பரப்புவதால் நன்மை அதிகம் விளையுமா, தீமை அதிகம் விளையுமா என்பதை தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். சமூகங்களை இணைப்பதற்கும் , மீள்நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமே ஊடகங்கள் பயன்படவேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஆளுக்கேற்ற, சந்தர்பங்களுக்கேற்ற முடிவுகளையே எடுத்திருக்கிறார்கள்.
- இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக, சிதறுண்ட கிராமங்களில், பிறசமுகங்களில் அதிகமாக தங்கி வாழ்வதால் பிறசமுகத்தவர்களைப் பகைத்துக்கொண்டு, அவர்களிலிருந்து விலகி , தூரமாக வாழக்கூடாது. அவ்வாறு வாழ்வது பெரும் பாதிப்புகளை உண்டு பண்ணும் , இன்னும் எம்மைப் பலவீனப்படுத்தும். எனவே , உறவுகளைப் பலப்படுத்தும் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டு, பலவீனப்படுத்தும் முயற்சிகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் எந்தவொரு இனமும் மற்றோர் இனத்தின் பால் தேவைப்பட்ட நிலையில் தான் வாழ்ந்துவருவதை ஒருபோதும் நாம் மறக்கலாகாது.
- உரிமைகள் பறிக்கப்படும் போதும் அத்துமீறல்கள் இடம் பெறும் போதும் சமாதான , ஜனநாயக ரீதியான , அறிவுபூர்வமான அணுகு முறைகளையே நாம் கையாள வேண்டும். ஏதும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் உடனுக்குடன் ஊர், பிராந்திய தலைவர்களது ஆலோசனைகளைப் பெற்று, பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்யலாம். மேலும், பிரதேச அரசியல்வாதிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி நடவடிக்கைகளை எடுக்கலாம். மாறாக, ஏட்டிக்கு போட்டியாக கலவரங்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளி நிர்வாக சபைகள், இயக்கங்கள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அவ்வப் பிரதேசங்களில் உள்ள பிறமதத் தலைவர்களோடு சுமூகமான உறவுகளைப் பேணி பிரச்சினைகள் வரும் போது அவர்களுடன் தொடர்பு கொண்டு மத்தியஸ்த முயற்சிகளை ஏற்படுத்தலாம். ஹுதைபியாவில் போல விட்டுகொடுப்புகளும் சில போது தேவைப்படலாம்.
- ஒரு முஸ்லிம் எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்கலாகாது, உணர்ச்சிகளுக்கு அடிமைபடலாகாது. அழகிய பண்பாடுகள், குணநலன்களை அவன் அணிகலன்களாகப் பெற்றிருப்பான். மனிதர்களது மனங்களில் அவன் வாழ்வான். நபி(ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் நல்ல பண்பாடுகளுடன் வாழ்ந்ததாக கதீஜா நாயகி (ரழி) சான்று பகர்ந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பணத்தை, அதிகாரத்தை , ஆயுதத்தைக் காட்டி அல்லாமல் பண்பாடுகளை மூலதனமாகக் கொண்டே பிரசாரம் செய்தார்கள்.
- சகோதர இனங்களைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு எவ்வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தாமல் எம்மால் முடியுமான சகல விதமான மனிதாபிமான உதவிகளையும் அவர்களுக்குச் செய்து அவர்களுடனான உறவுகளை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வதந்திகளைப் பரப்புவதில் இருந்தும் கூட்டம் கூட்டமாக பாதை ஒரங்களில் நின்று கதைத்துக் கொண்டிருப்பதில் இருந்தும் தவிர்ந்து கொள்வோமாக!
- முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களின் போது நம்பகத் தன்மையோடும் நீதி நியாயமாகவும் மிகுந்த தாராளத் தன்மையோடும் நடப்பதோடு , அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் தமது கடமைகளுக்கு உரிய நேரத்தில் செல்வதோடு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை திறம்படவும் அல்லாஹ்வுக்குப் பயந்தும் நிறைவேற்ற வேண்டும். காரியாலயங்களில் பணி புரியும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் சிநேகபூர்வமான உறவுகளைக் கட்டியெழுப்பி அவர்கள் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்களது நட்த்தைகள் பற்றியும் எழுப்பும் வினாக்களுக்கு அறிவு பூர்வமான உரிய பதில்களை வழங்கும் வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ளலாம்.பதிலளிக்கத் தெரியாத போது பதிலை பின்னர் கூறுவதாகத் தெரிவிக்கலாம் . முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற அறிவாளிகளை அணுகி பதில்களை தயார் செய்து கொள்ளல்லாம் குதர்க்கம் நல்ல விளைவுகளைத் தரப்போவதில்லை.
- முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியிலுள்ள சற்று தீவிரமாக சிந்திப்போரை நாம் ஒதுக்கிவிடாமல் அவர்களை நெறிப்படுத்தி சமூகத்திற்குள் பிளவுகள் ஏற்படாதிருக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குத்பாக்களிலும் சமூக வலைத்தலங்களிலும் எவரையும் தாறுமாறாக விமர்சிப்பதைத் தவிர்ப்போமாக!
- ஆனால், சமாதான சகவாழ்வு என்ற பெயரில் ஈமானுக்கு விரோதமாக செயல்படுவதிலிருந்தும் தெளிவான ஹராம்களில் சம்பந்தப்படுவதிலிருந்தும் நாம் முற்றிலும் தவிர்ந்திருக்க வேண்டும். “கரைந்து போகாமல் கலந்து வாழ்வதற்கும்”, “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கும்” முன்னுதாரணமாக செயல்படுவது அவசியமாகும்.
- தேசத்தை கட்டியெழுப்பவும் நீதி, நியாயம் மற்றும் ஒழுக்க விழுமியங்களை ஸ்தாபிக்கவும் பரஸ்பரம் ஏனைய இனங்களோடு கைகோர்த்துக் கொண்டு நாம் இலங்கையரான முஸ்லிம்கள் என்பதை நடைமுறையில் காட்டுவோமாக.
- எப்போதும் ஒரு முஸ்லிம் ஆழமான ஈமானோடும் இபாதத்களால் கிடைக்கும் உளப் பலத்தோடும் வாழ வேண்டும். துன்பங்களின் பொழுதும் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் போதும் அல்லாஹ்வை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும். அவன் நாடியது அன்றி வேறு எதுவும் நடக்காது என உறுதியாக நாம் நம்புவோமாக.மேற்படி அம்சங்களை உள்ளடக்கிய வகையில் ஜும்ஆ குத்பாக்களை மட்டுமல்லாமல் அவ்வப்போது இடம் பெரும் வேறு உரைகளையும் ஆக்கங்களையும் அமைத்துக்கொள்ளும்படி தேசிய ஷூரா சபை அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவ அல்லாஹ் அருள்பாளிப்பானாக!
பொதுச் செயலாளர்
N.M. M.மிப்லி
தேசிய ஷூரா சபை