தேசிய ஷூரா சபையின் பொதுச்சபைக் கூட்டம்

New Project 4 1

தேசிய ஷூரா சபையின் நான்காவது பொதுக் கூட்டம் எதிர்வரும் 27.11.2022 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. தற்போது சட்டத்தரணி ரீ.கே.அஷூர் அவர்களை தலைவராகவும் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களை செயலாளரகவும் கொண்டு அது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஷூரா சபையினது பொதுச் சபை அங்கத்தவர்கள் மாத்திரம் கலந்துகொள்ளவுள்ள மேற்படி கூட்டத்தின் போது அடுத்த மூன்று வருடங்களுக்கான நிறைவேற்றுக் குழு தெரிவுசெய்யப்படவுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் ‘முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புக்கள்’ என்ற தலைப்பிலும் ஷூரா சபையின் உபதலைவர் அஷ்ஷெய்க் பளீல் ‘ஷூரா சபை – நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பிலும் உரைகளை நிகழ்த்தவுள்ளனர். கடந்த ஒன்பது வருடங்களாக இந்த நாட்டில் குறிப்பிடத்தக்க பணிகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சமூகம் தொடர்ந்து முகம்கொடுத்து வந்த சவால்களுக்கு தீர்வுகளை கண்டறியும் வகையில், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள், சமூகத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் 2013 டிசம்பர் 07 ஆம் திகதி தேசிய ஷூரா சபை உருவாக்கப்பட்டது. ஆலோசனைக் குழு பற்றிய இந்த சிந்தனை “அவர்களது பண்பு ஆலோசனை சொல்வதாகும்’ என்ற குர் ஆனிய போதனைகளின் வழிகாட்டுதலில் இருந்து உருவானதாகும்.
முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் சவாலாக அமையும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வது மற்றும் இணக்கமான தீர்மானங்களுக்கு வருவதற்கு தேவையான வழிமுறைகளையும் வழிகாட்டல்களையும் உருவாக்குவதற்காக சமூகக் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்போர், துறை சார் வல்லுனர்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடுவது, அவர்கள் தமக்கிடையில் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பது அவர்களுக்கான ஒரு ஆலோசனை தளத்தை அமைத்துக் கொடுப்பது என்பன தேசிய ஷூரா சபையை முக்கிய பணிகளாகும்.
‘ஷூரா’ அல்லது ‘மஷூரா’ என்பது பல்துறை சார்ந்தவர்களது அனுபவங்களையும் அறிவுகளையும் பெறுவதற்கான கலந்தாலோசனை முயற்சியாகும். வித்தியாசமான பல கோணங்களில் சிந்திப்பவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்த்து தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அந்த முடிவுகள் பல வகையிலும் சிறப்பாக முழுமையாக அமையும்.

தற்காலத்திலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், தொடர்புசாதனம், உளவியல்,சுகாதாரம், விவசாயம், தொழிநுட்பம், மருத்துவம்… போன்ற மார்க்கத்தோடு நேரடியாக சம்பந்தப்படாத இன்னோரன்ன துறைகளில் வஹியின் தலையீடு வரையறுக்கப்பட்டதாகும். அதாவது, அவற்றின் இலக்குகள், அவற்றில் ஈடுபடுபவர்களது மனநிலை என்பன இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று மட்டுமே இஸ்லாம் வலியுறுத்துகிறது. இவற்றை விருத்தி செய்வது, நடைமுறைப்படுத்துவது, கண்டு பிடிப்புகளில் ஈடுபடுவது போன்ற பொறி முறையுடன் சம்பந்தப்பட்ட அம்சங்களை மனிதர்களே தீர்மானிக்க முடியும்.
பல அபிப்பிராயங்களின் சங்கமாக அமையும் சூரா முறைபற்றி அல்லாஹ் “அவர்களிடம் (நபியே) நீர் ஆலோசனை செய்வீராக” என்று கூறுகிறான். வஹி இறங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் கூட தன்னை விட அறிவில் குறைந்த சகாபாக்களிடம் ஆலோசனை கேட்டார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்? ஷூரா செய்வதில் அல்லாஹ்வின் அருள் உண்டு. அதில் சமூகத்தின் ஏகோபித்த கருத்து பிரதிபலிக்கும். தவறுகள் குறைவாக இடம்பெறும். கூட்டுப் பொறுப்பு (Collective Responsibility) இருக்கும். அடையப் பெறும் நலன்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் பலதுறை சார்ந்தவர்களது கருத்துக்கள் பெறப்படுவதால் அடையப் பெறும் நலன்கள் அளப்பரியவையாகும்.

 1. இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற யதார்த்தத்தை நடைமுறையில் காட்ட முடியும்.
 2. பல்துறை சார்ந்தவர்களும் சமூகத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பைப் பெறுவர்.
 3. ஆய்வு மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிவுபூர்வமான, தூரநோக்குள்ள திட்டங்களை வகுக்க வழியேற்படும்.
 4. வெளியிலிருந்து வரும் பல்வேறுபட்ட சவால்களை ஐக்கியமாக நின்று எதிர்கொள்வதற்கான பலம் ஏற்படும்.
 5. அற்பமான காரியங்கள் தவிர்க்கப்பட்டு அடிப்படையாகவுள்ள, உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் இனம் காணப்பட்டு, ஆக்கபூர்வமான திட்டங்கள் வகுக்கப்படும்.
 6. ஒவ்வொரு இயக்கமும், சங்கமும் தத்தமது வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்துவது போலவே சமூகத்தின் பொதுவான வேலைத் திட்டங்களுக்காக ஒன்றிணைந்து ஐக்கியப்படுவதற்கான சூழல் உருவாகும்.
 7. ‘ஒரு வேலைத் திட்டத்தில் பலரும் ஈடுபட, பலவேலைத் திட்டங்களில் ஒரு சிலர் மட்டும் ஈடுபடுவது அல்லது எவருமே ஈடுபடாமலிருப்பது` என்ற தற்போதைய நிலையில் மாற்றம் வந்து வேலைத் திட்டங்களை முஸ்லிம்கள் தமக்கிடையே முறையாகப் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகும்.
 8. ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையிலான உறவு பலத்த அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பப்படவும் தேசிய நலன்களில் முஸ்லிம்கள் பங்கெடுத்து நாட்டை கூட்டாகக் கட்டியெழுப்பும் பணி விரைவுபடுத்தப்படவும் வழியேற்படும்.
 9. உணர்ச்சிவசப்படுவது, வெளிவேஷங்களில் மயங்குவது, குறுகிய இலக்குகளுக்காக முண்டியடித்துக் கொள்வது போன்ற நிலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

அதன் பிரதான நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்:

 • தாய்நாட்டின் ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைக் காப்பதற்காக ஒன்றுபட்டிருத்தல்.
 • முஸ்லிம் சமூக விவகாரங்களில் ஆலோசனை, ஒத்துழைப்பு, ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துதல்.
 • இலங்கையில் தேசத்தை கட்டியெழுப்புதல், சமூகப் பாதுகாப்பு, பேண்தகு அபிவிருத்தி மற்றும் சட்ட ஆட்சியை அமுல்படுத்துதல் ஆகியவற்றில் முஸ்லிம் அமைப்புகளின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் உறுதிப்படுத்துதல்.
 • இலங்கையின் பல்லின மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக உழைத்தல்.
 • முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உறுதி செய்வதற்கும் உழைத்தல்.
 • பொதுவாக நலிவுற்ற சமூகங்களுக்கு எதிரான சமத்துவமின்மை மற்றும் அனைத்து வகையான அநீதிகளையும் ஒழிப்பதற்காக பணியாற்றுதல்.
 • சமூகங்களுக்கு இடையிலான மற்றும் சமயங்களுக்கு இடையிலான உறவுகளை வளர்ப்பதற்காகவும் சமாதானம், சகவாழ்வு மற்றும் இன நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடுதல்.
 • சமூகத்தினதும் நாட்டினதும் பொது நலன், அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் பங்குதாரர்களுடன் ஆலோசனை, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வளர்த்தல்.
 • குறிப்பாக முஸ்லிம்களையும் பொதுவாக நாட்டையும் மோசமாகப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலைகளில் தலையிடுதல்.
எனவே, சமூகத்தின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தேசத்தின் பொதுவான நலன்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றில் கலந்தாலோசித்து கூட்டாக செயல்படவேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய ஷூரா சபை வலியுறுத்தி வந்துள்ளதுடன் இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்காக ஒரு கூட்டுக் குரலை உருவாக்க முயற்சிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top