குத்பா வழிகாட்டல் : உணவு நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பான தேசிய ஷூறா சபையின் குத்பா வழிகாட்டல்

NSC-FSC-quthbah

பள்ளி நிர்வாக சபைகளும் பொதுமக்களும் இத்திட்டத்தை உள்வாங்கி இதனை தமது ஊரிற்கான முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்திட்டமாக கருதி அமுலாக்கல் செயல்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியினால் இத்திட்டம் வெற்றியளிக்கும் என்று அது கருதுகிறது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுத் தட்டுப்பட்டு எதிர்காலத்தில் மென்மேலும் உக்கிரமடையலாம் என நம்பப்படுகிறது. எனவே, அதன் விளைவாக உருவாகக்கூடிய உணவு நெருக்கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய ஷூறா சபை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருவதுடன் அதனை ஊர் வாரியாக நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பள்ளிவாசல் நிர்வாக சபைகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. 

ஒவ்வொருவரும் தத்தமது உணவுத் தேவையை தாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு தமது வீட்டுத் தோட்டங்களையும் எனைய நிலங்களையும் உச்சகட்டமாகப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் இத்திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

எனவே, உலமாக்கள் தாம் நிகழ்த்தும் குத்பாக்களை பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் அமைத்துக்கொள்ளும் படி தேசிய சூரா சபை பணிவாக வேண்டிக் கொள்கிறது:-

குத்பா வழிகாட்டல் குறிப்புகள்:-

  1. மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவைப் பெற்றுக்கொள்வதற்கான மூலமாக விவசாயம் காணப்படுகிறது.
  2. பொருளாதார சுபீட்சத்தையும் தேசிய உற்பத்தி உயர்வையும் எதிர்பார்க்கும் ஒரு சமூகம் விவசாயத்தில் கட்டாயமாக ஈடுபாடு காட்ட வேண்டும். 
  3. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விவசாயம் ஒரு பர்ளு கிஃபாயா. நல்ல நிய்யத்துடன் அதில் ஈடுபட்டால் உலகத்தில் நற்பயன்கள் கிடைப்பது போன்று மறுமையில் அல்லாஹ்வின் உயர்ந்த கூலிகளும் கிடைக்கும்.
  4. இஸ்லாமிய சட்டப் பகுதியில் நிலத்தை வாடகைக்கு விடுதல், மரங்களை வாடகைக்கு விடுதல் என்ற இரு பகுதிகளுடன் தொடர்பான சட்டங்கள் உள்ளன.
  5. ஆதம் (அலை) அவர்கள் முதல் பல நபிமார்களும் நபித்தோழர்களிற் பலரும் விவசாயிகளாக இருந்துள்ளார்கள்.
  6. யூஸுஃப் (அலை) அவர்கள் மிகவும் பஞ்சத்தில் இருந்த எகிப்து நாட்டை முறையான விவசாய கட்டமைப்பின் மூலம் சீர்ப்படுத்தி, பொருளாதார ரீதியாக மிகப்பெரும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தார்கள்.
  7. பூமியை வளப்படுத்தி விவசாயம் போன்ற உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அதனை \’இமாரத்துல் அர்ள்\’ (பூமியை வளப்படுத்தல்) என்ற சொல்லால் அல்லாஹ் குறிக்கிறான். (61:11) 
    இங்கு வந்துள்ள \’இஸ்தஃமரகும்\’ என்ற சொற்பிரயோகம் நீங்கள் பலவிதமான கட்டடங்களை அமைப்பதிலும் விதைப்பது, நாட்டுவது போன்றவற்றிலும் ஈடுபடவேண்டும் என்று உங்களை பணித்திருக்கிறான் என இமாம்களான பகவீ, ஸஅதீ போன்றோர் விளக்கம் சொல்கிறார்கள். 
  8. அல்குர்ஆனில் அல்லாஹ் விவசாயத்துடன் நேரடியாக சம்பந்தப்படும் கூறுகளான நிலங்கள், காற்று, மழை,மகரந்த சேர்க்கை, நீர், பயிரிடல், முளைப்பித்தல், அறுவடை செய்தல் என்பன பற்றியும் பழங்கள், தாவரங்கள் தோப்புக்கள், கீரை வகைகள் பற்றியும் பல நூற்றுக்கணக்கான இடங்களில் பிரஸ்தாபிக்கிறான். அவனது பேராற்றலுக்கான அடையாளங்களாகவும் மனிதர்களுக்கு வழங்கிய பாக்கியங்களாகவும் அவற்றை அவன் குறிப்பிடுகின்றான். (உதாரணமாக பார்க்க:- 80:24-32 , 23:18-20)  
  9. திராட்சை, அத்தி, ஈத்தம்பழம், போன்ற சுமார் 30க்கும் அதிகமான பழங்கள் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  10. விவசாயம் தொடர்பாக அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் வந்துள்ள வசனங்கள் அதன் சிறப்பு, உலகிலும் மறுமையிலும் கிடைக்கும் பலாபலன்கள் பற்றியெல்லாம் பேசுகின்றன. விவசாயத்தில் மனிதனின் முயற்சி பற்றி கூறும் வசனங்களிற் சில: (67:15), (36:34,35), இங்கு வந்துள்ள \’அவர்களது கைகள் செய்தவை\’ என்ற சொற்றொடர் மனிதர்களது விவசாய உற்பத்தி முயற்சிகளை குறிக்கும். அது அவர்கள் தமது கைகளால் செய்யும் மரநடுகையாகும் என்பது இமாம் இப்னு அப்பாஸ் ,இமாம் தபரீ போன்றோரது கருத்தாகும்.
  11. அந்த வகையில், நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய உணவு நெருக்கடியிலிருந்து எம்மையும், சமூகத்தையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பங்களிப்பு செலுத்த வேண்டும். அந்த வகையில் எமக்குத் தேவையான உணவுப் பயிர்களை முடியுமான அனைத்து இடங்களிலும் பயிரிடுவதே இந்த உணவு நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு சிறந்த தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  12. எனவே, ஒவ்வொரு வீடுகள், மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், பாடசாலைகள் மற்றும் ஊரின் பொது நிறுவனங்களில் பொருத்தமான உணவுப் பயிர்களை தாமதிக்காது பயிரிடுவதற்கு  மாக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும். மேலும் இதற்கான வழிகாட்டல்கள், ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொடுக்க ஊர் நிருவாகங்கள்  முன்வர வேண்டும்.

(இஸ்லாம் விவசாயத்தை வலியுறுத்துவது பற்றிய மேலதிக விளக்கங்கள் மற்றும் விவசாயம் தொடர்பான  ஹதீஸ்களை இந்த இணையத்தளத்தில் https://nationalshoora.com/2022/05/29/islam-and-agriculture/ எனும் பகுதியில் இணைத்துள்ளோம். )

அடுத்த நிமிடம் உலகம் அழியப்போவது நிச்சயமான சூழலிலும் கூட விவசாய உற்பத்தி முயற்சிகளைக் கைவிடக்கூடாது என்பதையும் விளைவுகள் பற்றி அவநம்பிக்கை நிலவும் சூழலிலும் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் அதன் கூலியை அல்லாஹ் தருவான் என்பதையுமே இஸ்லாம் எமக்குப் போதித்துள்ளது.

விவசாயத்தில் ஈடுபடும் ஒருவர் தனது இறைவனின் கட்டளைக்கு அடிபணிகிறார்; அவனது நற்கூலியைப் பெறுகிறார்; உலக மாந்தர்களதும் தான் வசிக்கும் நாட்டு மக்களதும் ஏன் உலக மாந்தர்களதும் உணவுத் தேவையின் ஒரு பகுதி பூர்த்தி செய்ய பங்களிப்பு செய்கிறார்.

எனவே, மக்கள் உணவு உற்பத்தி செய்யும் இந்த இபாத்தில் ஈடுபட்டு அல்லாஹ்வின் நட்கூலியை பெற்றுக் கொள்வதோடு தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடவும் தமது உணவுத் தேவையை தாமே பூர்த்தி செய்வதற்கும் உலமாக்கள் மேற்படி குறிப்புகளை உள்ளடக்கிய வகையில் குத்பாக்களை அமைத்து ஒத்துழைப்பு நல்கும் படி தேசிய சூரா சபை பணிவாக வேண்டிக் கொள்கிறது.

இவ்வண்ணம்

டீ.கே. அஸூர் (சட்டத்தரணி)                                  ரஷீத். எம். இம்தியாஸ் (சட்டத்தரணி)

தலைவர்                                                                                                              பொதுச் செயலாளர்

01.06.2022

Scroll to Top