கல்முனை வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் உடனடி விசாரணைக்கு தேசிய ஷூரா சபை அழைப்பு விடுத்துள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, உடனடியாக விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு உத்தரவிடுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் தேசிய ஷூரா சபை (NSC) கோரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவம் 2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
பிரதமருக்கு ஆகஸ்ட் 15 ஆம் திகதியிட்டு தேசிய சூறா சபை அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“தற்போது நடைமுறையிலுள்ள அரசாங்க ஆடை ஒழுங்குவிதிகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு அமைய ஆடை அணிந்து குறித்த வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக வருகை தந்த புதிதாக நியமிக்கப்பட்ட பல பெண் அரச உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகளினால் உட்செல்ல அனுமதிக்கப்படாமல் தங்களது சட்டபூர்வமான கடமைகளை மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.”
மேலும் அக்கடிதத்தில் “தாங்கள் அறிந்தவாறு, 2019/06/26 திகதியிடப்பட்ட பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 13/2019(I)-இன் 3(i) மற்றும் 3(iv) ஆகிய உறுப்புரைகள், அரச உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வ ஆடைக்கு மேலதிகமாக, (காதுகள் தவிர்ந்த) முகம் முழுமையாக வெளிப்படையாகத் தெரியக்கூடியவாறு, தத்தமது பாரம்பரிய மதக் கலாசார முறைமைகளுக்கு அமைவான ஆடைகளை அணிந்து உத்தியோகபூர்வ கடமைகளுக்கு சமூகமளிக்க அனுமதியளிக்கின்றன.
இந்த உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பதை தன்னிச்சையாகத் தடுத்தமை சட்டவிரோதமானதும், நடைமுறையிலுள்ள அரசாங்க சுற்றறிக்கைகளுக்கு முரணானதுமாகும். அத்துடன், இது தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் ஒரு குற்றமான, ‘அரச உத்தியோகத்தர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளை ஆற்றுவதைத் தடுத்தல்’ என்பதாக அமையக்கூடும். மேலும், இந்நடவடிக்கையானது இலங்கை அரசியலமைப்பின் 10, 12(1), 12(2) மற்றும் 14(1)(e) ஆகிய உறுப்புரைகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதுடன், அரச சேவையில் உள்ளடக்கத்தினைப் (inclusivity) பலவீனப்படுத்தும் ஒரு தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்விடயத்தின் அவசரத் தன்மையையும் தீவிரத்தையும் கருத்திற்கொண்டு, அரசாங்கத்திடம் தேசிய ஷூரா சபை பின்வருவனவற்றை மரியாதையுடன் கோருகிறது:
- பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 13/2019(I)-க்கு அமைய, பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் உடனடியாக தங்களது கடமைகளைப் பொறுப்பேற்று ஆற்றுவதற்கு அனுமதிக்குமாறு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திற்கு உடனடி உத்தரவுகளைப் பிறப்பித்தல்;
- இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்தமைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகப் பொருத்தமான நிருவாக நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தல்;
- எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்கும் பொருட்டு, நடைமுறையிலுள்ள சுற்றறிக்கை விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு சகல அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தும் மீள் அறிவுறுத்தல் சுற்றறிக்கையொன்றை வெளியிடுதல்.” என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸினால் கையொப்பமிடப்பட்ட இக்கடிதத்தின் பிரதி, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




