போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்

flag protest

▪️காலிமுகத்திடலில் ஒரு மாத காலமாக, மிகவும் அமைதியான முறையில் சாத்வீக ரீதியாக போராடி வந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை தேசிய ஷூரா சபை வன்மையாகக் கண்டிக்கிறது.

▪️சாத்வீகப் போராட்டம் ஜனநாயக நாட்டின் உரிமை என்பதை அது வலியுறுத்தும் அதேவேளை இத்தாக்குதலையடுத்து இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற எதிர்விளைவுகளின் போது உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என்றும் அது தெரிவிக்கிறது .

▪️அரசியல்வாதிகள் முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்திருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே சரியானது. அதனைவிடுத்து சொத்துக்களை அழிப்பதையும் வன்முறைகளில் ஈடுபடுவதையும் முற்றுமுழுதாக தவிர்க்கும்படி அது வேண்டிக்கொள்கிறது.

▪️தூர நோக்கோடு மேற்கொள்ளப்படும் சாத்வீகப் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் சில சக்திகள் இனங்களுக்கு இடையிலான மோதல்களை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளிவருவதால் அத்தகைய சதிகார வலையில் சிக்கிவிடாமல் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டுமென அது மேலும் வலியுறுத்துகிறது. 

▪️இடைக்கால நிர்வாகமொன்று பற்றிய கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்ற இச்சூழலில் இனம், மதம், மொழி, ஆகிய குறுகிய எல்லைகளுக்கு அப்பால் நின்று அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவான ஒரு இடைக்கால தீர்வுத் திட்டத்தை நோக்கி, எல்லோரும் இதய சுத்தியோடு முயற்சிகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தேசிய ஷூரா சபை அதற்கான அனைத்து பங்களிப்புகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது.

▪️நீதி, நியாயம், பொருளாதார சமத்துவம், இனங்களுக்கிடையிலான நட்புறவு, தேசத்தின் வளர்ச்சி என்பவற்றை இஸ்லாம் இலக்காகக் கொள்வதனால், இத்தகைய விழுமியங்களைக் கொண்ட புதிய அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதற்கு ஏனைய இனங்களோடு முஸ்லிம்கள் கைகோர்க்க வேண்டும் எனவும் முஸ்லிம்களை அது வேண்டிக் கொள்கிறது.

▪️சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் பொலிசார் தாமதமின்றியும் பக்கச் சார்பின்றியும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கண்டிப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபரை தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.

ரீ.கே.அஸூர்,

தலைவர், தேசிய ஷூரா சபை.

11-05-2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top