தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் (NSC Food Security Program NSC-FSP)

NSC FSC fly1

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள், விலையேற்றம் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் தற்போது நமது நாட்டு மக்கள் பயங்கரமான உணவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும் காலங்களில் நிலைமை இன்னும்  மோசமடையலாம் என நம்பப்படுகிறது. அல்லாஹ் பாதுகாப்பாக!

இந்த நெருக்கடியான சூழலின் கோர விளைவுகளான பசி, பட்டினி, போசாக்கின்மை போன்றவற்றிலிருந்து எம் அனைவரையும் பாதுகாப்பதற்குத்  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைவரதும் கடமையாகும்.

எம்மாலான உச்சகட்டமான முயற்சிகளை மேற்கொண்டு அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து அவன் மீது தவக்குல் வைப்போம்.

அந்த வகையில், எமது உணவுப் பயிர்களை நாமே வளர்ப்போம் – Let’s Grow Our Food’ எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய ஷூரா சபை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை (NSC Food Security Program – NSC FSP) ஆரம்பித்துள்ளது.

உணவுப் பயிர்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதன் மூலம் உணவு நெருக்கடியிலிருந்து எம்மையும், எமது குடும்பத்தையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு சமூகத்திற்கு வழிகாட்டுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின்  பிரதான கூறுகளாவன:-

🟢 பொருத்துமான அனைத்து இடங்களிலும் உணவுப் பயிர்களை வளர்ப்பதற்கு பொதுமக்களுக்கு ஆர்வமூட்டுவது

🟢 வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

மஸ்ஜித்-மைய உணவுப் பாதுகாப்பு மையங்களை (MFSC)’ உருவாக்கி அவற்றை மஸ்ஜித்களை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் செயற்திட்டங்களாவன:-

  1. மஸ்ஜித்-மைய உணவுப் பாதுகாப்பு மையங்களை (MFSC) உருவாக்குதல் –ஒவ்வோர் ஊரிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அலகாக இம்மையங்களே செயற்படுவுள்ளன.
  2. ஊர்களில் செயற்படும் பொது நிறுவனங்கள் சங்கங்கள் அமைப்புகள் என்பவற்றுக்கு ஊடாகவும் இத்திட்டத்தை  நடைமுறைப்படுத்த முடியும்.
  3. தனித்தனியாக அல்லது சிறு குழுக்களாக அதாவது கொத்தணிகளாக இணைந்து இல்லங்கள் தோறும் வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளல்
  4. பொருத்தமான பொது இடங்களான மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், சன சமூக நிலையங்கள் போன்றவற்றில் உணவுப் பயிர்களை பொதுவாக வளர்த்தல்.
  5. அரசினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருத்தமான விவசாய செயற்திட்டங்களில் இணைந்து பயன்பெறுவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்.
  6. இவ்வாறு பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோருக்கு தொழில்நுட்ப வழிகாட்டல்கள், ஆலோசனைகள், உதவிகள் என்பவற்றை அரசின் விவசாயத் திட்டங்கள், விவசாய ஆலோசகர்கள், கள உத்தியோகத்தர்களினூடாகப் பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டல்

இத்திட்டத்திற்கு மாவட்ட ரீதியான ஒருங்கிணைப்பை வழங்க அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ ஒன்றியம் (AUMSA) முன்வந்திருப்பதுடன் கள ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்க விவசாய நிபுணர்கள், கள உத்தியோகத்தர்கள்  முன்வந்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்!

எனவே, இத்திட்டத்தை தத்தம் பிரதேசங்களில் ஆரம்பிக்க விரும்பும் மஸ்ஜித் நிருவாகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் தேசிய ஷூரா சபையை பின்வரும் முறைகளில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்:-

Whatsapp : 0766 270 470 | Email: office546546@gmil.com | Web: www.nationalshoora.com

இவ்வண்ணம்

தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டப் பிரிவு

21.05.2022

நபி(ஸல்) அவர்கள்:-

\”முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ,ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்\” எனக் கூறினார்கள்.  (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி :2320)

Scroll to Top