“சமாதான சகவாழ்வும், அண்மைக் காலமாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களும்” என்ற தொனிப் பொருளில் தேசிய ஷூரா சபையின் நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம்(Consultative Forum) கடந்த 10.2.2019 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள சோனக இஸ்லாமிய கலாசார அமைப்பின் மண்டபத்தில் இடம்பெற்றது.
காலை 9.00 மணியிலிருந்து மாலை 3.00 மணி வரை இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தேசிய ஷூரா சபையின் உப தலைவரும் கட்டட நிர்மாணத்துறை பொறியியல் நிபுணருமான ரீஸா யஹியா தலைமை தாங்கினார்.
தேசிய ஷூரா சபையின், பொதுச்செயலாளர் கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் நிகழ்ச்சியின் இலக்குகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
பிரதித் தலைவரும் ஜாமிஆ நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம் பழீல் (நளீமி) நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இனம் அல்லது மதத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாத குழுக்களின் செயற்பாடுகளினாலும் வெளிச் சக்திகளின் தலையீடுகள் காரணமாகவும் சமகால இலங்கையில் இனங்களுக்கிடையில் தப்பபிப்பிராயங்கள், சந்தேகங்கள், வன்முறைகள், வதந்திகள், அச்ச நிலை என்பன நிலவுகின்றன.
இந்த பிரச்சினைகளின் பின்புலம் என்ன, இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு செயற்படவேண்டும், ஏனைய சமூகங்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பன தொடர்பாகவும் தேச நிர்மாணப் பணியில் முஸ்லிம்களின் சமகால, எதிர்கால வகிபாகங்கள், பங்களிப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும், இதற்கான மூலோபாய திட்டமிடல் என்ன என்பன குறித்தும் இங்கு விரிவுரைகளும் கலந்துரையாடல்களும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழு, பொதுச் சபை,செயலக உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழில் அதிபர்கள், ஊடகவியலாளர்கள் என சுமார் எழுபதுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு வித்தியாசமான கோணங்களில் தமது கருத்துக்களையும் ஆலோசனைளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
சகோ.ரீஸா யஹியா தற்போதைய சூழ்நிலை தொடர்பான பொது அறிமுகத்தை முன்வைத்தார்.
உப தலைவர் அஷ்.ஷேய்க் எஸ்.எச்.எம் பழீல் (நளீமி) இஸ்லாமிய நோக்கில் தற்கால சவால்களை எதிர்கொள்ள கருத்தியல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் யாவை என விளக்கினார். தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை இஸ்லாமிய கோட்பாட்டு, ரீதியாக எவ்வாறு தீர்க்க முடியும் , இளைஞர் சமூகத்தை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் இதற்கு பள்ளிவாசல்கள், சமூக நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் இனவாதத்தின் பின்னணியில் அமைந்துள்ள பிராந்திய அரசியல் காரணிகளையும் சர்வதேச பின்புலத்தையும் எடுத்துக் கூறினார்.
ஷூராவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு குழுவின் உறுப்பினருமான சட்டத்தரணி ஜாவீத் யூஸுப் அவர்கள் நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டங்களின் சாதக பாதகத் தன்மைகள் குறிப்ப்பக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சாதக பாதகங்கள் என்பன பற்றி விளக்கினார்.
சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ் சாலி மாவனெல்லை சிலை உடைப்பு விவகாரத்தைத் தொடர்ந்து அண்மைக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்தார்.
ஏ.ஆர்.ஸீ. அமைப்பின் தலைவரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மாஹில் டூல் முஸ்லிம் வாலிபர்கள் பற்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கினார்.
சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியத்தின் பொருளாளரும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்த்தின் விரிவுரையாளருமான பொறியாளர் ஏ.எம். அஸ்லம் சஜா கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தமிழர் உறவு பாதிக்கப்பட்டிருப்பது பற்றியதும் அதற்கான காரணிகள் தீர்வுகள் பற்றியதுமான ஆய்வொன்றை முன்வைத்தார்.
இலங்கை சமகால சூழலில் இலங்கை முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்கான இஸ்லாமிய நடுநிலை(வசதிய்யா) சிறுபான்மையினருக்கான இஸ்லாமிய சட்டம்(பிக்ஹுல் அகல்லிய்யாத்), பிக்ஹுல் வாகிஇ போன்ற சட்ட ஏற்பாடுகளின் தேவை தொடர்பாகவும் இதற்கான உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய கலாசாலைகளின் பங்களிப்புகள் எவை என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்களின் போது முன்வைக்கப்பட்ட, பரிமாறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து அவற்றினடியாகப் பொது வேலைத்திட்டத்துக்கான திட்ட வரைபைத் தயாரிப்பதற்கு 10 பேரைக் கொண்ட குழுவொன்றை சபையினர் ஏகமனதாகத் தெரிவுசெய்தனர். குழு எதிர்வரும் ஒரு மாத கால இடைவெளிக்குள் இதற்கான மூலோபாய திட்டத்தைத் தயாரித்துத் தருவதாக உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபை தேசிய மட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டையும், தேசத்தின் நலனையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டுவருகின்றது. இவ்வகையில் கலந்துரையாடல் மற்றும் நிபுணத்துவ ஆலோசனை அரங்குகள் ஊடாக சமூகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய பொது வேலைத்திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றின்பால் பணியாற்ற சமூக நிறுவனங்களையும் துறைசார் நிபுணர்களையும் அது ஒருங்கிணைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Media Unit -NSC