தேசிய ஷூரா சபையின் பொதுக்கூட்டம்

bgm 11

தேசிய சூரா சபையின் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27.11.2022) கொழும்பில் நடைபெற்றது. அதன் போது அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் கடந்த பொதுக் கூட்ட அறிக்கை மற்றும் கடந்த இரு வருடங்களில் சூரா சபை மேற்கொண்ட பணிகள் பற்றிய அறிக்கை என்பன அதன் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அறிக்கையை மௌலவி ஸியாத் இப்ராஹிம் அவர்கள் சமர்ப்பித்தார்.

சூரா சபையின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் பளீல் அவர்கள் “சூரா சபை நேற்று, இன்று, நாளை” என்ற தலைப்பில் அதன் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய விரிந்த ஒரு விளக்கத்தை வழங்கினார். 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூரா சபையானது கடந்த ஒன்பது வருடங்களாக பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும் அதற்காக சமூகத்தின் புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சூரா சபையின் முன்னை நாள் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தேசங்களைக் கட்டியெழுப்புவதில் பேச்சுவார்த்தை எவ்வளவு முக்கியம் என்பது தொடர்பாக அவர் வலியுறுத்தினார். முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை நாட்டுப் பற்றுடன் செயல்பட்டு வருகின்றனர்; வந்துள்ளனர். தேவநம்பியதிஸ்ஸ மன்னரின் காலத்தில் விவசாயத்திற்கு குளங்களைக் கட்டுவதற்கு முஸ்லிம்கள் உதவியதாக வரலாற்று ஆசிரியர் கலாநிதி லோனா தேவராஜா அவர்கள் தனது புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். அன்று முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் இந்த நாட்டுக்கு நிறைய பங்களிப்பு செய்திருக்கிறது என தெரிவித்த ஜனாப் சுஹைர்

தற்கால சூழ்நிலையில் பொதுவாக இலங்கை நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கினார். இந்த நாடு இத்தகைய அதள பாதாளத்தில் விழுந்து இருப்பதற்கும் பயங்கரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தங்களே காரணம் என்றும் இனங்களுக்கிடையிலான உரையாடல் கடந்த காலத்தில் இடம்பெற்றிருந்தால் இந்த யுத்தங்களையும் பொருளாதார நெருக்கடியையும் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் அழுத்தமாக வலியுறுத்தியதுடன் கலந்தாலோசனையும் பரஸ்பர புரிந்துணர்வும் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் எல்.ரி.ரி.ஈ யில் முஸ்லிம்களிற் சிலர் இணைந்திருந்தார்கள்.ஆனால் முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பிரிப்பதற்கு தாயாரான சமூகமாக இருக்கவில்லை என்ற காரணத்தினால் பின்னர் அவ்வியக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதுமட்டுமின்றி முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டார்கள், காத்தான்குடி பள்ளிவாயலில் ஒரே இரவில் 147 பேர் கொல்லப்பட்டார்கள். கிழக்கில் எண்ணிக்கையற்ற முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
1956 இல் ஏற்பட்ட பிரச்சினையின் போது ஒரு தமிழ் குடும்பத்தை ஒரு மாத காலம் எங்கள் வீட்டில் பாதுகாத்து வைத்திருந்தோம். முஸ்லிம்களும் மற்றும் சிங்களவர்களும் தமிழ் மக்களை பாதுகாத்தார்கள்.

1978 ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் 1979இல் வடக்கிலுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்தார்கள். இந்த சட்டம் நாட்டில் சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக 30 வருட கால யுத்தத்திற்கு காரணமாக இருந்தது. இது நாட்டை பாதாளத்தில் தள்ளியது. இதற்கு ஆரம்பத்தில் இருந்தவர்களும் இறுதியாக இருந்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டும். அவர்கள் அன்று சிந்தித்து செயல்பட்டிருந்தால் இன்று நாடு பிச்சை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

நாட்டில் மக்களுடைய கடமை என்ன, ஆட்சியாளர்களின் கடமை என்ன, பொறுப்பு என்ன, காரியங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி சிந்திப்பது அவசியம் என்று அவர் கூறினார்.

கூட்டத்தின் போது தேசிய சூரா சபையின் சட்டக் கோவையில் திருத்தங்கள் முன்மொழிபட்டு அதுவும் அங்கீகரிக்கப்பட்டது.

மேற்படி பொதுச் சபைக் கூட்டத்தின் போது 35 பேர் கொண்ட நிறைவேற்று குழு தெரிவு செய்யப்பட்டது. தலைவராக சட்டத்தரணி அஸூர் அவர்களும் செயலாளராக சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களும் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
உப தலைவர்களாக அஷ்ஷைக் பளீல், சட்டத்தரணி ஜாவித் யூசுப், எம்.எச்.எம்.ஹசன் ஆகியோரும் பொருளாளராக மௌலவி எஸ்.எல். நெளபர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் பலரும் தேசிய சூரா சபையின் 11 உறுப்பு அமைப்புகளது பிரதிநிதிகளும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

bgm 12

bgm 13

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top