உறுப்பு அமைப்புக்களுடனான தேசிய சூரா சபையின் சந்திப்பு

mo2

Member Organisations (உறுப்பு அமைப்புக்கள்) உடனான சூரா சபையின் விஷேட அமர்வு நேற்று(29.8.2019)கொழும்பில் நடைபெற்றது.

ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழலை அடுத்து இந்த நாட்டில் இயங்கும் தஃவா மற்றும் சமூக சேவை அமைப்புகள் அனைத்தும் தத்தமது கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தில் இயங்கும் இந்த சிவில் அமைப்புகள் தொடர்பான சந்தேகங்கள் பிற சமூகங்களுக்கு மத்தியில் வலுப்பெற்று வருவதனால் அத்தகைய சந்தேகங்களைக் களைந்து இந்த சிவில் அமைப்புக்கள் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதனாலும் இந்த அமைப்புகளைப் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டு வருகிறது.

இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக இயங்கிவரும் சுமார் பதினெட்டு சிவில் அமைப்புகளது குடை(Umbrella Organisation) நிறுவனமாக அமையும் தேசிய சூரா சபை இந்த அமைப்புகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கும் நோக்குடன் இந்த கலந்துரையாடல் அமர்வு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஒவ்வொரு அமைப்பினது பிரதிநிதிகளும் தத்தமது அமைப்பின் கடந்தகால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் 21ம் திகதி சம்பவத்துக்குப் பின்னரான தமது மூலோபாயத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பாகவும் விளக்கினார்கள்.

தேசிய ஷூறா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய சூரா சபை இந்த உறுப்பு அமைப்புக்களுக்கு சில முக்கியமான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கியது.

இந்த சிவில் அமைப்புக்கள் அனைத்தும் எல்லாவற்றுக்கும் முன்பதாக இந்த நாட்டின் இறைமையை பாதுகாக்கும் விதத்திலும் சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்பும் விதத்திலும் தத்தமது வேலைத்திட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதேநேரம் முஸ்லிம் சமூகத்தின் கட்டுக்கோப்பையும் ஸ்திரத் தன்மையையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை ஏககாலத்தில் செய்ய வேண்டுமென்றும் தேசிய சூரா சபை உறுப்பு நிறுவனங்களை வேண்டிக் கொண்டது.கொள்கைகளை வகுக்கும் போதும் அமுலாக்கலின் போதும் மிகவும் நிதானமாகவும் தூரநோக்கோடும் நடந்து கொள்ள வேண்டுமென்றும் அது வலியுறுத்தியது.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழுகிறார்கள். சர்வதேச மற்றும் தேசிய சதிவலைகளுக்குள் இந்த நாடு சிக்கியுள்ளது. பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நலன்களுடன் நாடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்துக்குள் நிலவும் கொள்கை மற்றும் இயக்க முரண்பாடுகளும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆகவே, இஸ்லாமிய அமைப்புக்கள் ஒவ்வொன்றும் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு தான் செயல்பட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடனும்(Transparency) நம்பகத்தன்மையுடனும் செயல்படுவது மிகவும் அவசியமாகும்.நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை சகோதர சமூகங்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு முன்னரை விடவும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் மனிதாபிமான செயல்பாடுகள் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும் என்றும் கலந்துரையாடலின் போது பலரும் அபிப்பிராயப்பட்டனர்.குறிப்பாக இஸ்லாமிய தஃவா பணியானது முன்னரை விட அதிகமாக திட்டமிடப்பட வேண்டியுள்ளது என்பதால் அதற்கான மூலோபாயத் திட்டங்களை வகுக்கவென உறுப்பு அமைப்புகளிலிருந்து 8 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இலங்கை நாட்டின் சூழல் தனித்துவமானது என்ற வகையில் இந்நாட்டுகென்றே பொருத்தமான தஃவா மற்றும் சமூக செயற்பாட்டு உத்திகள் கடைபிடிக்கப்பட வேண்டும். எமது நாட்டிலும் முஸ்லிம் சமூகத்திலும் முதன்மைப் படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் பல இருக்கையில் வேற்று சமூகங்களது சந்தேகங்களைத் தூண்டும் வகையிலான இந்த நாட்டுக்கு பொருத்தமில்லாத எத்தகைய கொள்கைகளையும் நடைமுறைப்படுத்த எவரும் முயற்சிக்க கூடாது என்ற விஷயத்தில் அனைவரும் கருத்தொற்றுமைப் பட்டனர்.

மேற்படி அவர் அமர்வில் COSLAM, SLJI, ACTJ, JASM, AMYS, OMSED, AUMSA, SLISM, ACUMLYF, SALAMA,WCCD ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக் குழு மற்றும் செயலகக் குழு அங்கத்தவர்களும் மற்றும் சமூகத்தின் புத்திஜீவிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.

mo4

mo3

mo2

mo1

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top