COVID-19 அச்சுறுத்தலுக்கு கூட்டாக எதிர்வினையாற்ற தேசிய சூறா சபை வலியுறுத்து

COVID-19

கொரோனா வைரஸ் COVID-19 உலக அளவில் முழு மனித குலத்தையூம் பாதிக்கும் தொற்று நோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு மேலதிகமாக பொதுமக்களும் உரிய அதிகாரிகளுடன் ஒத்துழைத்துச் செயற்படாவிட்டால் இது நாடுமுழுவதும் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இன, மத, கலாசார, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இது இலங்கையர் அனைவருக்குமான சோதனைக் காலமாகும். நாங்கள் மத, கலாசார நம்பிக்கைகளால் வளப்படுத்தப்பட்ட தேசமாகும். ஆன்மீக அனுஷ்டானங்கள், நல்லொழுக்க விழுமியங்கள், பாவங்களில் இருந்து விலகியிருத்தல் என்பவையெல்லாம் இயற்கை மற்றும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட பேரழிவுகள், நோய்கள் பரவுதல் போன்றவற்றால் வரும் தீங்குகளில் இருந்து காத்துக் கொள்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதனை சகல சமூகங்களும் சான்றுப்படுத்துகின்றன.

முஸ்லிம் சமூகத்தின் ஆலோசனைக் குழு என்ற வகையில் COVID-19 அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு தேசிய சூறா சபை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் பதட்டப்படாமல் இருக்குமாறும் அடுத்தவர்களுக்கு அசௌகரியங்களையும் கஷ்டங்களையும் ஏற்படுத்தும் வகையில் வதந்திகளையும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி அனைவரும் பொறுப்புடன் செயற்படுமாறும் தேசிய சூறா சபை நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

அத்தோடு அரச நிறுவனங்கள் சுகாதார அமைச்சு உள்ளுர் சுகாதார நிறுவனங்கள் சிவில் மற்றும் சமூகத் தலைமைகள் உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் வழிகாட்டல்களைச் செயற்படுத்த ஒத்துழைக்குமாறும் தேசிய சூறா சபை பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய நிறுவனங்களுக்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் வழங்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் உலகளாவிய தொற்று நோயான கொரோனா வைரஸ் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய இஸ்லாமிய வழிகாட்டுதல்களை ஏற்று நடக்குமாறும் தேசிய சூறா சபை முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிமைப் பொறுத்தவரையில் மனித உயிரைப் பாதுகாப்பது இஸ்லாமிய போதனைகளின் உயர்ந்த இலட்சியங்களில் ஒன்றாகும். அன்றாடம் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஐவேளைத் தொழுகைக்காக வுளு செய்யும் போது கைகளையும் கால்களையும் முகத்தையும் கழுவி தேகாரோக்கியத்தையும் சுத்தத்தையும் பேணுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் ஏவப்பட்டிருக்கிறான்.

இந்தத் தொற்றுநோயிலிருந்து நாட்டையும் மக்களையூம் பாதுகாப்பதற்காக COVID-19இன் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் எடுக்கப்படும் தேவையான நடவடிக்கைள் அனைத்திலும் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாகக் கருதி இணைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இது ஒரு சவால் மட்டுமல்ல, சமூக மற்றும் சுற்றுச் சூழல் விடயங்களில் பொறுப்புடன் செயற்படும் வகையில் எங்கள் வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்வதற்கானதொரு சந்தர்ப்பமாகும்.

அனாவசிய சுற்றுப் பயணங்களையும், கூட்டமாயிருத்தலையும் நெரிசலான இடங்களையும் தவிர்த்துக் கொள்வதற்கும் வீட்டில் பிள்ளைகளுடன் குடும்பமாய் இருப்பதற்காகவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்.

உலகெங்கிலும் உள்ள மக்களின் பாதுகாப்புக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துரித நிவாரணம் வேண்டியும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top