- பன்மைத்துவத்தை ஏற்றல்: பல இனங்கள் வாழுகின்ற சூழலில் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜம். எனினும் பொறுமை, விட்டுக் கொடுத்தல், சமாதான சகவாழ்வு என்பவற்றை இஸ்லாம் தனது அடிப்படை கோட்பாடுகளாகக் கொண்டிருக்கின்றது.மேலும், பலாத்காரம்,கொள்கைத் திணிப்பு, மனது புண்படும் படியாக நடத்தல், பிற சமயத்தவர்களது நம்பிக்கை கோட்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்தல், கொச்சைபடுத்தல் போன்றவற்றை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.இதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்களை ஆதாரங்களாகக் காட்டமுடியும்:
அ.”அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைப்பவர்களை நீங்கள் ஏசாதீர்கள்.அதன் விழைவாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள்” (அல்குர்ஆன்)
ஆ.”(இஸ்லாமிய) மார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமுமில்லை” (2.256)”
இ. ”மேலும் உம் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள் எனவே மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?” (10:99).
- அனைவருக்கும் உதவிசெய்வதல் : உலகிலுள்ள சகலரையும் மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்குமாறு இஸ்லாம் வேண்டுகின்றது. முஸ்லிம்-முஸ்லிம் அல்லாதோர் உறவின் அடித்தளமாக பின்வரும் வசனம் அமைந்துள்ளது:
அ.“மார்க்கவிடயத்தில் உங்களுக்கெதிராக (ஆயுதம் தூக்கி)ப் போராடாத, உங்களை உங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் உபகாரம் செய்வதனை விட்டும் நீங்கள் அவர்களுடன் நீதியாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கமாட்டான்.” (60:08)
உபகாரம் செய்தல் என்பதற்கான இமாம் கராபியின் விளக்கம்: பின்வருமாறு:
’இரக்கம், தேவையை பூர்த்தி செய்தல், உணவளிப்பது, ஆடைகொடுப்பது, இங்கிதமான பேச்சு, ரகசியம், மானம், மரியாதை,சொத்து,செல்வங்கள்,உரிமைகள் போன்றவற்றைப் பாதுகாப்பது, அநீதியைத் தவிர்க்க உதவுவது.’ (அல்புரூக்:3:15)
ஆ.”பூமியிலுள்ளவர்களின் மீது இரக்கம் காட்டுங்கள். வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்.”என நபி (ஸல்) கூறினார்கள்.(திர்மிதி 1924)
எனவே, பிறசமயத்தவர்களாக இருந்தாலும் மானுசீக, பொருளாதார மற்றும் அறிவுரீதியான உதவிகளை அவர்களுக்கு நாம் செய்ய வேண்டும். நோய் விசாரிக்கச் செல்லல், இன்ப துன்பங்களில் பங்கேற்றல் போன்றன இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தினை மேலும் வலுப்பெறச் செய்யும்.நபி(ஸல்) அவர்களும் கூட யூத நோயாளியை சுகம் விசாரிக்கச் சென்றிருக்கின்றார்கள்.
- தொந்தரவின்றி வாழ்வது: பிறருக்கு தொந்தரவின்றி எமது அன்றாட கருமங்களையும் வணக்க வழிபாடுகளையும் அமைத்துக் கொள்ளல்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் \’அல்லாஹ்வீன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) கூறினார்கள். \’அவன் யார்?இறைத்தூதர் அவர்களே!\’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் \’எவனுடைய தொந்தரவுகளில் இருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறவில்லையோ அவன் தான்\’ என்று பதிலளித்தார்கள். (புகாரி-6016)
எனவே, பிறருக்கு எரிச்சலைத் தரும் வகையிலான ஒலிபெருக்கி பாவனை, பொருத்தமற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துதல்,பொதுப் போக்குவரத்து சாதனங்களில் தொலை பேசியில் உச்ச தொனியில் உரையாடல் போன்றனவற்றை நாம் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
- பிற சமயத்தவர்களது மனது புண்படும் வகையிலான செயற்பாடுகள் மற்றும் நடத்தைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.
இறைச்சி கடைகளில் இறைச்சியை பிறருக்கு ஆத்திரமூட்டும் வகையில் காட்சிப்படுத்தல் மிருகங்களை பகிரங்கமான இடங்களில் அறுப்பது போன்றவற்றை தவிர்ந்து கொள்ளல்.
- பிறர் மேற்கொள்ளும் பொதுப் பணிகளில் பங்கெடுத்தல்:
”இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்.பாவத்திலும் அத்துமீறலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.”(05:02)
சிரமதானம்,பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை அமைத்தல், இரத்ததான முகாம்,போதைவஸ்து ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் பங்கெடுத்தல்.
6.இஸ்லாம் பற்றிய தெளிவை வழங்குவது: முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை பற்றி அதிகமான தப்பபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதால் அவற்றை இல்லாமற் செய்வதற்கான்ன சில ஏற்பாடுகளை முன்னெடுத்தல்.
இஸ்லாத்தைப் பற்றிய தெளிவை நூல்கள், கலந்துரையாடல் மூலமாகவும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடகவும் அவர்களுக்கு முன்வைத்தல். இதன் போது நிதானமாகவும் அறிவுபூர்வமாவும் நடந்துகொள்வதோடு காலத்துக்கு உகந்த வழிமுறைகளையும் கைக்கொள்ளல் வேண்டும்.
குறிப்பாக குர்ஆன், ஹதீஸ் வசனங்களை முஸ்லிம் அல்லாதவர்கள் தவறாக விளங்கியிருப்பதனால் அவை பற்றி அவர்களுக்கு போதிய தெளிவினை வழங்குதல்.
- நீதியும் நியாயமும் : பிறசமயத்தவர்களுடனான எமது சமூக உறவுகளின் போது நீதியாகவும் கண்ணியமாவும் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டும் நடந்து கொள்ளல்.வியாபார கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்தல்,பொய் சொல்லல், வாக்குறுதி மீறல், ஏமாற்றல், இலஞ்சம் கொடுத்தல் போன்றன முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் வரை பிற சமூகங்களின் அபிமானத்தைப் பெறுவது சாத்தியமானதன்று.
- கல்வித் துறை முன்னேற்றம்: முஸ்லிம்கள் கல்வித் துறையில் அதிகூடிய முக்கியத்துவத்தினை வழங்கி கல்விமான்கள் மற்றும் ஆய்வாளர்களை உருவாக்குதல் இன நல்லுறவினை வளர்க்கும்.
- ஐக்கியம்: முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பரஸ்பர அன்புடனும் விசுவாசத்துடனும் ஐக்கியப்பட்ட சமூகமாகவும் வாழல் வேண்டும். மாற்றமாக காட்டிக் கொடுத்தல் மற்றும் அற்ப விடயங்களுக்காக பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களை நாடல் போன்றன எம்மை அதிகம் பலயீனப்படுத்தி எமக்கு எதிரானவர்களை அணிதிரளச் செய்யும்.
”இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.”(08.46)
- பலமான ஈமான் : எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுடனான எமது உறவை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். திக்ர், இஸ்திஃபார், தவக்குல், ஸப்ர் , துஆ போன்றன எமது ஆயுதங்களாக இருக்க வேண்டும்.
- அல்லாஹ்வின் நியதி-ஏற்பாடு என நம்புவது
இஸ்லாத்தினை மிகச்சரியாக பின்பற்றுபவர்களுக்கு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் ஏற்படும் என்பதனை புரிந்து கொள்ளல்.இஸ்லாத்தை மிகச்சரியாக பின்பற்றுபவர்களுக்கு எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் சோதனையாகவே வரும். \’நீங்கள் உங்களது சொத்துக்கள், உயிர்கள் விடயத்தில் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடமிருந்தும் இணை வைத்தவர்களிடமிருந்தும் நிச்சயமாக மனதுக்கு அதிகம் கவலை தரும் தகவல்களை செவியேற்க நேரிடும்.\’ (ஆல இம்ரான்:186)
மாற்றமாக இஸ்லாத்தை அரைகுறையாகப் பின்பற்றுவதாலோ அல்லது முழுமையாகப் பின்பற்றாமல் இருந்தாலோ எதிர்ப்புகளும் விமர்சனங்களும் தண்டனையாக அமையும். மிகச் சரியாகப் பின்பற்றினால் வருவது சோதனைகளாகும்.
மேற்கூறப்பட்ட வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு உலமாக்கள் தமது ஜுமுஆ குத்பாக்களையோ வேறு உபன்னியாசங்களையோ அமைத்துக்கொள்ளும் படி தேசிய ஷூரா சபை பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறது.
வல்லஅல்லாஹ் இலங்கை நாட்டில் சமாதானம் மலர அருள் பாலிப்பானாக! ஆமீன்.