ஆளும் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஷூரா சபை சந்திப்பு

WhatsApp Image 2026 09 11 atr 10.16.34

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பமாகி, சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது.

தேசிய ஷூரா சபையின் சார்பில், தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸுஹைர், செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ், பொருளாளர் ஏ. அனஸ் அஸீஸ், முன்னாள் தலைவர் அஷ்-ஷெய்க் எஸ். எச். எம். ஃபலீல், அஷ்-ஷெய்க் அஸாத் அப்துல் முஈத், சகோ. எம். என். ஷாம் நவாஸ் மற்றும் அஷ்-ஷெய்க் முஹம்மத் தாஸிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பை ஏற்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் M.K.M. அஸ்லம், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, பிரதியமைச்சர் முனீர் முளப்பபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் பைசல், அபூபக்கர் ஆதம் பாவா, ரியாஸ் பாரூக் மற்றும் பஸ்மின் ஷரீப் ஆகிய ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது ஊடகத்துறைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், தேசிய ஷூரா சபையினால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சில அமைச்சர்கள் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்துக்கு தேசிய மற்றும் முஸ்லிம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் 25க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டதுடன், தற்போதைய ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் 27 முக்கிய பிரச்சினைகள் அடங்கிய ஆவணமொன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டமையும் நினைவுபடுத்தப்பட்டது. மேலும், தேசிய மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேசிய ஷூரா சபைக்கும் இடையிலான இவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தேசிய வேலைத்திட்டங்களை தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகள் வரவேற்றதுடன், இவ்வாறான தேசிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் சுட்டிக்காட்டினர்.

2024 செப்டம்பர் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஆற்றிய உரையில் பலஸ்தீன் மற்றும் காஸா தொடர்பாக வெளிப்படுத்திய நிலைப்பாட்டையும் தேசிய ஷூரா சபை வரவேற்றது. குறிப்பாக, காஸாவில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், பலஸ்தீன மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் பலஸ்தீன் ஒரு தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தியிருந்தமை பாராட்டத்தக்கது என பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

அதேநேரம், நாட்டில் அண்மைக் காலங்களில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் என்பன மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரங்களைப் பாதிக்காத வகையில் அமைவதற்கு அனைத்து தரப்பினருடனும் உரிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அதேநேரம், நாட்டில் இனவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகள் வரவேற்றனர். எனினும், இனவாதம் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் மாத்திரமன்றி, அரசாங்க மற்றும் உத்தியோகபூர்வ மட்டங்களிலும், பொதுமக்கள் மத்தியிலுள்ள சில தரப்பினரிடையேயும் வெளிப்படுவது கவலைக்குரிய விடயம் என சுட்டிக்காட்டிய அவர்கள், இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கடுமையான சட்ட ரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தேசிய மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய விடயங்களில் தேசிய ஷூரா சபையின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் முக்கியமானவை என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததுடன், சமூக நலன், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை முன்னிலைப்படுத்தி ஷூரா சபை தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

சமூக ஒழுக்கம் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய பொறுப்பற்ற சமூக ஊடகச் செயற்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டதுடன், இவ்வாறான விடயங்களில் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதிலும் ஆக்கபூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தேசிய ஷூரா சபையின் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பு சுமுகமாகவும் ஆக்கபூர்வமான முறையிலும் இடம்பெற்றது. நாட்டின் நலன், தேசிய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேசிய ஷூரா சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் அவசியம் இருதரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது.

WhatsApp Image 2026 09 11 at 10.16.343

2

7

8

9

10

11

Scroll to Top