இலங்கை முஸ்லிம் பேரவை (SLMA)எனும் சூராசபையின் செயற்பாடுகள்

DFU

இலங்கை முஸ்லிம் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை கடந்த 6.11.2013 ஆம் திகதி சந்தித்தார்கள். அச்சந்திப்பின் நோக்கம் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சம் முஸ்லிம்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை கையளிப்பதுடன் தற்கால இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கியமான இனரீதியான சவால்களைப் பற்றி கலந்துரையாடுவதாகும். இது முஸ்லிம் பேரவையின் கருத்து மட்டுமல்ல இலங்கையிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தின் கருத்தாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் தான் கையொப்பம் அடங்கிய ஏடுகள் கையளிக்கப்பட்டன.

கடந்த ஈதுர் பித்ர் பெருநாள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து திரட்டும்

முயற்சிக்குப் பின்னணியில் முஸ்லிம் பேரவையின் செயற்குழு மற்றும் செயலக அங்கத்தவர்களின் அயராத முயற்சி இந்த இடத்தில் ஈண்டு குறிப்பிட வேண்டும். அல்லாஹ் அனைவரது முயற்சியையும் ஏற்றுக் கொள்வானாக!

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளின் செயற்பாடுகள் சூரா சபை உருவாகுவதற்கான உடனடிக் காரணயாக அமைந்த போதிலும் முஸ்லிம் சமூகத்திற்கான கூட்டுத் தலைமையின் அவசியமும், பல்துறை சார்ந்தவர்களதுஅபிப்பிராயங்களை உள்வாங்கிய நிலையில் பாரிய முடிவுகள் எடுக்கப்படுவதன் அவசியமும் அண்மைக் காலத்தில் அதிகமாக உணரப்படுவதுதான் சூரா சபையின் அவசியத்தை காட்டி நிற்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியம், குழுச் செயற்பாடு, திட்டமிடல்,நீண்ட கால நிரந்தரத் திட்டங்கள், பொறுப்புக்களை உரிய முறையில் பங்கிட்டுக் கொள்வது போன்ற இஸ்லாம் வேண்டி நிற்கும் முறைமைகளுக்கு சூரா சபையே பொருத்தமான ஊடகம் என்று பலரும் உணரத்தடைப்பட்டனர்.

அந்த வரிசையில், இலங்கை முஸ்லிம் சமூகம் எதிகொள்ளும் சவால்களைப் பற்றி ஆராயவதற்கான விஷேட கலந்துரையாடல் ஒன்று சமூகத்தின் பல்வேறு தரப்பினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் 13/12/2012 அன்று கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்வி மையத்தில் நடைபெற்றது. இதன்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சுமார் 133 பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டதுடன், அவற்றில் தலைமைத்துவமின்மை ,ஒற்றுமையின்மை என்பன முதல் தரப் பிரச்சினைகளாக இருப்பதாக அறியப்பட்டது. இதன் பிரதிபலிப்பாக ஊற்றெடுத்த எண்ணக்கருவே தேசிய ஷூரா சபையாகும்.

பல்வேறுபட்ட இஸ்லாமிய இயக்கங்களையும் சமூக சேவை நிறுவனங்களையும் சேர்ந்த சுமார் 20 பேர் கொண்ட இளைஞர்கள் இக்கருத்தியலை ஆரம்பத்தில் வளர்த்தார்கள்.

ஆரம்ப நிகழ்வுகள்

சமூக ஆர்வலர்களை அடிக்கடி சந்தித்து நாடுதழுவிய ஒரு சூரா பொறிமுறைக்கான ஆலோசனைகளைப் பெற்ற அவர்கள் 2.5.2014அன்று கொழும்பு மியாமி ஹோட்டலில் பகிரங்க கூட்டமொன்றை ஏற்பாடு செய்தார்கள். அதற்கு நாட்டின் முக்கிய உலமாக்கள், சமூக மற்றும் தஃவா அமைப்புக்களது முக்கிய பிரமுகர்கள், துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டார்கள். அக்கூட்டத்தில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் சூரா சபைக்கான திட்ட வரைபொன்று முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல முக்கியஸ்தர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட போது சூராவின் அவசியம் பற்றியும் முன்வைக்கப்பட்ட திட்ட வரைவு பற்றியும் கருத்துக்களை அவர்கள் சுதந்திரமாக வெளியிட்டார்கள்.

அந்த வகையில் மற்றுமொரு முக்கிய நிகழ்வு 13.06.2013 அன்று கொழும்பு 10 இலுள்ள பூக்கர் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். சூராவுக்கான ஆரம்ப முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு உற்சாகம் வழங்கப்பட்டதுடன் இஸ்லாமிய அமைப்புக்கள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் மற்றும் சில முக்கியஸ்தர்களையும் இடைக்கால சூராவுக்கு தெரிவு செய்வதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்திய செயற்குழுவுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டதன் பேரில் இலங்கை முஸ்லிம் பேரவை உருவாகுவதற்கான பூரண ஆதரவு தெரிவிக்கப்பட்டதுடன் அ.இ.ஜ. உலமாவின் மத்திய நிறைவேற்றுக்குழுவைச் சேர்ந்த உலமாக்களில் ஐவர் பேரவையின் மத்திய செயற்குழு, மற்றும் பொதுச் சபைககளின் அங்கத்துவங்களிற்காக அ.இ. ஜ. உலமாவினால நியமிக்கப்படனர்.

இதே நேரத்தில் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய இயக்கங்களுடனும் சங்கங்களுடனும் உத்தியோகபூர்வமான சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், சூராவின் அவசியத்தை அவர்கள் அங்கீகரித்ததுடன் உருவாகப்போகும் சூரா சபைக்கும் தமது அமைப்புக்குமிடையிலான உறவு எப்படியிருக்க வேண்டும் என்பது சம்பந்தமாகவும் அபிப்பிராயங்களை வெளியிட்டார்கள்.

பெரிய பள்ளிவாசல் கூட்டம்

அதன்பின்னர் 23.7.2013 அன்று கொழும்பில் பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வில் சூரா சபைக்கான இடைக்கால மத்திய செயற்குழுக்கான அங்கத்தவர்களும் அதற்கான பொதுச்சபை அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இக்குழு எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு இயங்கும் என்றும் இடைக்காலத்தில் சட்டயாப்பை தயாரிப்பதுடன் நிரந்தர சூரா சபைக்கான ஏற்பாடுகளை செய்யும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இவ்விடைக்கால சூரா சபை `இலங்கை முஸ்லிம் பேரவை` என்ற பெயரில் இயங்கும் என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அன்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற அந்த முக்கிய நிகழ்வின் போது இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் அடங்கிய 14 போரையும், செயலகக் குழுவிலிருந்து 7 பேரையும் கொண்ட மத்திய செயற்குழு(Executive Committee) உருவாக்கப்பட்டது. இம்மத்திய செயற்குழு ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜரை தயாரித்து சமர்ப்பிப்பதை தனது முதல் செயல் திட்டமாக அமுலாக்கியது. மத்திய செயற்குழு, செயலகக் குழு என்பவற்றின் வேறு சில செயற்றிட்டங்கள் வருமாறு;

  1. இலங்கையிலுள்ள சகல இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வையும் சகவாழ்வையும் தோற்றுவிப்பதற்கான முஸ்லிம் சமூகத்திற்கான சகவாழ்வு தொடர்பான தேசியக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக 14.7.2013 அன்று முழு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்று நடாத்தப்பட்டது. இதில் இத்துறையில் செயற்படும் அமைப்புகளின் பிரதிநிதிகள், தனிநபர்கள் 30 பேர் கலந்துகொண்டனர். தற்போது பின்னூட்டல்கள் பெறப்பட்டு அதன் நகல் தயாரிக்கப்பட்டுவருகிறது. முஸ்லிம் பேரவையின் சகவாழ்வுக்கான உபகுழு இதனை ஒழுங்கு செய்து வருகின்றது.
  2. மத்திய செயற்குழு மற்றும் செயலகக் குழுவினருக்கும் ஊடகத்துறை சார்ந்த சுமார் 35 பேருக்குமிடையிலான ஒரு சந்திப்பு 05.10.2013 அன்று இடம்பெற்றது. கொந்தளிப்பான சூழ்நிலையில் முன்மாதிரியான முஸ்லிம் ஊடகவியலாளர்களது பணி பற்றிய பிரக்ஞையை உண்டு பண்ணுவதும் எதிர்காலத்தில் சிறந்த ஊடகக் கொள்கையொன்றை வகுப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாக இருந்தது.
  3. இவ்வருடம் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தபோது அதனை எதிர்கொள்வதற்காக வேண்டி குர்பான் கொடுப்பதற்கான ஒரு வழிகாட்டலை உள்ளடக்கிய ஆவணமொன்றை முஸ்லிம் பேரவை வெளியிட்டது. இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அது ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டது. இஸ்லாம் கூறும் குர்பானின் சட்டவிதிகளும், இலங்கையில் அதனை நிறைவேற்றும் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குகளும் சட்ட ஆலோசனைகளும் அந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
  4. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு நாடுதழுவிய ரீதியில் நடாத்தவிருக்கும் சகவாழ்வுக்கான வேலைத்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து முஸ்லிம் அமைப்புக்களது குடை நிறுவனமான இலங்கை முஸ்லிம் பேரவை தொடர்ந்தும் அதற்கான ஒத்துழைப்பை நல்கி வருகின்றது.
  5. உத்தேச சூரா சபைக்கான முழுமையான சட்டக்கோவையொன்று தயாரிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே இதற்கான நகல் பற்றிய பல சுற்று கலந்துரையாடல்களில் மத்திய செயற்குழு மற்றும் செயற்குழுவினர் ஈடுபட்ட பின்னர் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அமைப்புக்களின் அபிப்பிராயங்களை பெறுவதற்காக அவ்வமைப்புகளுக்கு அது அனுப்பப்பட்டது. 7.12.2013 அன்று கொழும்பில் நடைபெற்ற அனைத்து இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் மற்றும் முக்கியஸ்தர்களது மாநாட்டில் சட்ட யாப்பின் இறுதி வடிவம் அங்கீகரிக்கப்பட்டது.

விரிந்த இலக்க்குகள்

மொத்தத்தில் முஸ்லிம் பேரவை அல்லாஹ்வின் உதவியால் தனது பயணத்தை வேகமாக மேற்கொண்டு வருகிறது. இடைக்கால மத்திய செயற்குழுவினரும்

செயலகக் குழுவினரும் முஸ்லிம் சமூக விவகாரங்கள் பற்றி அடிக்கடி சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தி பல திட்டங்களை தமது சக்திக்குப்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இலங்கையின் முன்னணி தஃவா, சமூக சேவை அமைப்புக்களது ஆதரவும் பங்கேற்பும் கிடைத்திருப்பது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. அவர்கள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் பொதுக்காரியங்களில் நாம் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் பாரிய விவகாரங்களை ஐக்கியமாகவும் துறைசார் நிபுணர்களது ஆலோசகர்களைப் பெற்றும் கையாள்வதே தற்கால தேவை என்பதை SLMA உணர்ந்திருக்கிறது. கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல்,குடும்பவியல், சுகாதாரம், பிறசமூகங்களுடனான உறவுகள், முஸ்லிம்உள்ளகக் கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த தளங்களில் இந்த வகைத் திட்டமிடலினதும் கூட்டுச் செயற்பாட்டினதும் பேரவையாக அது திகழ வேண்டும் என்பதே அதன் எதிர்பார்ப்பாகும்.

2014 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சூராவுக்கான நிரந்தர மத்திய செயற்குழுவை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

அல்லாஹ்வின் அருளும் அனுக்கிரகமும் இதுவரை கிடைத்திருப்பதாக உணர முடிகிறது. அல்ஹம்துல்லாஹ்! எனவே, இதன் வளர்ச்சிக்கு சமூகத்தின் ஆதரவும் ஆலோசனையும் மிகவும் அவசியமாகும். உங்களது கருத்துக்கள், ஆலோசனைகள், அபிப்பிராயங்கள், விமர்சனங்களை பேரவைக்கு அதன் இணையத்தளமான www.nationalshoora.com அல்லதுteam.nshoora@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக வழங்கலாம். அதன் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சேவைகள் muslimassembly எனும் பெயரில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

“அவர்களது விவகாரங்கள் சூராவின் அடிப்படையில் அமையும்’` என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு செயலுருவம் கொடுக்கும் இந்த முயற்சிக்கு அவனது அருள்கிட்டுமாக!

– அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம் பளீல் (நளீமி)

Scroll to Top