வெள்ள அனர்த்தம் – தேசிய ஷூரா சபையின் வேண்டுகோள்!

flood sri lanka

அண்மையில் ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சியாலும் வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் கணிசமான தொகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமது உடமைகளை இழந்து வேறு இடங்களில் குடியேற வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சோதனையாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பின்வரும் கடமைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

  1. இது அல்லாஹ்வின் சோதனையாகும். எனவே மனம் தளராமல் பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் நாட்டத்தை ஏற்றுக் கொள்வது நன்மைகளைப் பெற்று தரும் என்ற கருத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியுறுத்தி உளரீதியாக அவர்களை ஆற்றுப்படுத்த உளவளத்துணை ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
  2. அவர்களுக்குத் தேவையான தற்காலிக தங்குமிட, ஆடை, மருத்துவ,உணவுத் தேவைகள் என்பவற்றை உடனடியாகச் செய்வதற்கு சமூக நிறுவனங்களும் தனியாரும் முயற்சிக்க வேண்டும்.
  3. நாட்டில் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இருப்பதனால் பொதுவாக ஏனைய காலங்களிலும் குறிப்பாக இக்காலப் பிரிவிலும் அனாவசியமான செலவுகளையும் வீண் விரயங்களையும் முற்று முழுதாகத் தவிர்த்து நிவாரணப் பணிகளுக்காக அதிகமதிகம் உதவி செய்ய வேண்டும். ‘வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்கள்’ என்பது அல்குர்ஆனின் கருத்தாகும்.
  4. நிவாரண உதவிகளை சேகரிப்பதற்கு, களஞ்சியப்படுத்துவதற்கு, விநியோகிப்பதற்கு கணிசமான தொகையினர் முன்வந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என நாம் துஆச் செய்கிறோம். பாதிக்கபட்டவர்களுக்கு மேலும் ஒத்துழைப்புக்கள் தேவைப்படுவதனால் இன்னும் பலரும் அல்லாஹ்வின் நன்மையைப் பெற்றுத் தரும் இதுபோன்ற கருமங்களில் சம்பந்தப்பட வேண்டும்.
  5. நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகளும் தனி மனிதர்களும் தமக்கிடையில் தகவல்களையும் திட்டங்களையும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு ஒத்துழைப்பது அவசியம்.நேர, கால,வள விரயத்தை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

அல்லாஹ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள நிம்மதியை, பொறுமையை, மிக விரைவான நிவாரணத்தை வழங்குவதோடு இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்குவானாக என தேசிய ஷூரா சபை பிரார்த்திக்கிறது.

யா அல்லாஹ்! எம் அனைவருக்கும் உன்னுடைய ‘களா கத்ர்’ ஐ பொருந்திக் கொள்ளும் மனப்பான்மையையும் பொறுமையையும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்கின்ற உழைப்பாங்கையும் நிறைவான கூலியையும் தருவாயாக!!

இவ்வண்ணம்

தேசிய ஷூரா சபை

13.10.2024

Scroll to Top