தேசிய சூரா சபையின் சுதந்திரதின நிகழ்வு

nsc 1

சக்தியும் பலமும் கொண்டவர்கள் அவற்றில் குறைந்தவர்களை ஆக்கிரமித்தமையை மனித வரலாற்றில் காணமுடிகிறது. இவ்வாறான ஆக்கிரமிப்புகளால் சிறிய நாடுகளது கலாச்சாரங்களும் அங்கு பாரம்பரியமாக இருந்து வந்த வாழ்வு முறையும் அதிகம் பாதிக்கப்பட்டன. நிலபுலன்கள் மீதான உரிமையை மக்கள் இழந்தனர். பொருளாதார முறை மாற்றமடைந்தது என களனி பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் விரிவுரையாளரும் பௌத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலையத்தின் பணிப்பாளருமான கல்கந்தே தம்மானந்த தேரர் தேசிய சூரா சபை  கடந்த  புதன் கிழமை (07) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரதின நிகழ்வில் தெரிவித்தார்.

எல்லோரையும் இணைத்த ஒரு அரசாங்கத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்று நாம் சிந்திக்க வேண்டும். ஒரு தேசத்தில் உள்ள குறிப்பிட்ட ஓர் இனத்தவர்கள் தாம் அந்த தேசத்துக்கு உரித்துடையோர் அல்லர் என்று உணரும் நிலைக்கு தள்ளப்படுகின்ற பொழுது நாம் என்ன சுதந்திரத்தை தான் பெற்றிருக்கின்றோம்?

nsc 4200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக மக்கள் இன்றும் கூட இந்திய தமிழர்கள் என்று பெயர் சூட்டப்படுவதாயின் அது எவ்வளவு பெரிய அநியாயமாகும்? 1948 இல் கிடைத்தது சுதந்திரம் என்றும் தற்போது வைபவங்களை நடத்துவது மாத்திரமே போதும் என்றும் நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகும்.

சுதந்திரப் போராட்டத்திற்கு முடிவு கிடையாது. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். இது சுதந்திர நாடாக இருக்குமாயின் இந்த நாட்டில் பிறந்த அனைவரையும் அன்பால் நாம் அரவணைக்க வேண்டும். நானும் நீங்களும் இந்த பூமியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டுக்கு முதலில் யார் வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எல்லோரும் இந்த பூமியில் பிறந்தவர்கள் தான். எல்லோரும் சகோதர சகோதரிகளே. எல்லோருக்கும் சமனான உரிமை, கௌரவம் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உழைப்பது சுதந்திரப் போராட்டமாகும்.

கோத்திர ரீதியாக பிரிந்திருந்த மக்களை முஹம்மத் நபியர்கள் முரண்பாடுகளை தவிர்த்து ஒற்றுமைப்படுத்திய தலைவராவார். சகோதரத்துவம், கூட்டுறவு, கௌரவம் என்பன அவரால் ஏற்படுத்தப்பட்டன. நாம் எமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் ஒவ்வொரு சாராருடைய ஆலோசனைகளும் பயன் மிக்கவையாக இருக்கும். இஸ்லாமிய மார்க்கத்திற்கும் இந்த பொறுப்புண்டு.

முஸ்லிம்களுக்கு மத்தியில் கட்சிகள் பின்னர் தான் உருவாகின. முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்குதாரர்களாக இருந்தார்கள். அவர்கள் தற்பொழுதும் பிரதான நீரோட்டத்தில் இருந்து வருகிறார்கள்” என்று தேரர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்

nsc 3 இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கெடுத்திருக்கிறார்கள். 1893 இல் இலங்கையில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த சேர் பொன்னம்பலம் அருணாசலம், 1908 இல் சேர் ஜேம்ஸ் பீரிஸ், சேர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் 1924 இல் கலாநிதி. டி.பி.ஜெயா போன்ற அன்றைய தலைவர்கள் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரச்சாரம் செய்தார்கள்; அவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் பேச்சாளர்களாக அல்லாமல், ஒட்டுமொத்த நாட்டிற்காகவும் பேசினார்கள் என ஈரான் நாட்டுக்கான முன்னாள் தூதுவரரும் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் எனக் குறிப்பிட்டார்.

வருந்தத்தக்க வகையில் அடுத்தடுத்த நிகழ்வுகள், அப்போது உருவாகி வந்த பன்மைத்துவ அடித்தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டன. இறுதியில் அவை நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமாதானத்திற்கும் செழுமைக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

வரலாற்றாசிரியர்களான பேராசிரியர். கே.எம்.டி சில்வா, பேராசிரியர். சிறிமா கிரிபமுன,டாக்டர். லோனா தேவராஜா மற்றும் பலர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் பலவற்றை பதிவு செய்துள்ளனர்.

சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டி டாக்டர் லோனா தேவராஜா குறிப்பிடுகையில் 5 ஆம் நூற்றாண்டில் தாதுசேன மன்னரின் ஆட்சியின் போது கட்டப்பட்ட யோத வெவ பற்றி எழுதுகிறார். இலங்கையில் அந்தக் காலத்தில் வாழ்ந்த அரேபியர்கள் தான் அந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்கினார்கள் என்று அவர் பாராட்டுவதோடு அதன் நிர்மாணத்திற்குப் பிறகு 300 ஆண்டுகளுக்கும் மேலாக அதிலிருந்து தான் விவசாயத்திற்கு நீர் விநியோகம் செய்யப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.

7, 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில், முஸ்லிம்கள் வணிக சமூகமாக இங்கு குடியேறினர். 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து நிபுணத்துவம் பெற்ற கைத்தறி பின்னல்களை முஸ்லிம்கள் அமைத்தனர். 13 ஆம் நூற்றாண்டில், அரசர்களது பாதுகாப்புத் துறையில் ஏராளமான முஸ்லிம்கள் பணியாற்றியதாக இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

அதேபோன்று முஸ்லிம்கள் எப்போதும் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். நாட்டை எவரும் பிரிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்காக அவர்கள் பல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள்.

இந்த நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்காத ஒரே சமூகம் என்றால் அது முஸ்லிம்கள் மாத்திரம் தான். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன ரீதியான வன்முறைகளுக்காக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை; நீதி கிடைக்கவுமில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பொறுத்தவரையில் அது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதற்கும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அஷ்ஷெய்க் பளீல்

nsc 2ஃபிர்அவ்ன் எனப்படும் கொடுங்கோலனின் அடக்குமுறைகளில் இருந்து இஸ்ரவேலர்களை விடுவிப்பது மூஸா (அலை)அவர்களது இலக்காக இருந்தது. மக்காவில் குறைஷியர்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த சமூகத்தை விடுவிக்க முயற்சிசெய்யாமல் இருந்தோரை அல்லாஹ் குர்ஆனிலே கண்டிக்கிறான். அச்சம், பயம் , பீதி இல்லாமல் நிம்மதியாக வாழக் கிடைப்பது இறைவனின் பாக்கியமாகும் என்பதற்கு குர்ஆனின் குரைஷ் அத்தியாயம் சிறந்த ஆதாரமாகும் என ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அதன் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் பளீல் தெரிவித்தார்.

காரணித்துவவாதிகள் தமது மதத்தைப் பரப்புதல், மக்களது சொத்துக்களை சூறையாடுதல், தமது மகிமையை நிலை நிறுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களைக் கொண்டே செயல்பட்டிருக்கிறார்கள். இவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு பொருளாதார, அரசியல் ரீதியாக பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இந்த நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக உயிர்த் தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். பாதுகாப்பு படையில் இருந்திருக்கிறார்கள். அரசர்களோடும் சிங்கள மக்களோடும் அவர்கள் நெருக்கமான உறவை கொண்டிருந்ததனால் தான் காலத்துவவாதிகளது குறிப்பாக போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் ஆகியோரது எதிர்ப்புகளை அவர்கள் சம்பாதிக்க நேரிட்டது.

இந்த நாட்டின் தேசியக் கொடியில் நான்கு இனங்களது நிறங்களும் உள்ளன. தேசிய கீதத்தில் ‘நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள்’ என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இனவாதம், அரசியல் அராஜகம்,பொருளாதார சுரண்டல் என்பன இருந்து வருகின்றன. 30 வருட யுத்தத்தையும் , இரு தடவைகள் இளைஞர்களது கிளர்ச்சிகளையும் இனக் கலவரங்களையும் இந்த நாடு சந்தித்திருக்கிறது. தற்போது மக்கள் பொருளாதார ரீதியாக பயங்கரமான சவால்களை எதிர்நோக்கி வருகிறார்கள். மூளைசாலிகள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

நிலை இப்படியிருக்க நாம் எப்படி சுதந்திரம் பெற்றதாகக் குறிப்பிட முடியும்? பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, நாட்டுப்பற்று, தியாகம் இன நல்லிணக்கம் என்பன உடனடியான தேவைகளாக இருக்கின்றன. இவற்றை நாம் அடைந்தால் மாத்திரமே சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்களாக கருதப்படுவோம்” என்றும் குறிப்பிட்ட அஷ்ஷைக் பளீல் அவர்கள், தேசிய சூரா சபை உருவாக்கப்பட்டிருப்பது பயங்கரவாதம், தீவிரவாதம் என்பவற்றிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது,தேசத்தை கட்டியெழுப்புவது, நிலைபெறான அபிவிருத்தி என்பவற்றைக் காண்பது, இன நல்லிணக்கம் போன்ற நோக்கங்களாகும்” என்றும் குறிப்பிட்டார்.

தேசிய சூரா சபையின் மேற்படி நிகழ்வில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களை சேர்ந்த புத்திஜீவிகள் சமூக நலன் விரும்பிகள் சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் நன்றியுரை வழங்கினார். அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் நிகழ்வில் விசேடமாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Scroll to Top