வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த 130 பாடசாலை அதிபர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சியை தேசிய ஷூரா சபை 2026 செப்டம்பர் 30 ஆம் திகதி அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் நடாத்துகிறது.
கல்வி அமைச்சின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய விடயங்களை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பாடசாலை நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
பாடசாலை அடிப்படையிலான ஆசிரியர் தொழில்சார் மேம்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்துதல், பாடசாலை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தில் ஏற்படும் முரண்பாடுகளை திறம்பட நிர்வகித்து தீர்ப்பதற்கான உத்திகள்,நேர்மறையான பாடசாலைச் சூழலை உருவாக்குவதில் அதிபரின் பங்கு, அத்துடன் உடல் ஆரோக்கியம், மனநலம் மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பான பல்துறை அணுகுமுறை ஆகிய முக்கிய விடயங்கள் இந்நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்படும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, வடமத்திய மாகாணக் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான அஷ்-ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல், மாஹோ வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷைக் ஜின்னாஹ், அக்கரைப்பற்று ஆசிரியர் தொழில்சார் மேம்பாட்டு நிலைய முகாமையாளர் திரு. எம்.ஏ.எம். தாஜஹான் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் மேஜர் என்.டி. நஸுமுதீன் ஆகியோர் வளவாளர்களாகப் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் தேசிய ஷூரா கவுன்சிலின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான அஷ்-ஷெய்க் ஏ.எம்.ஆஸாத், நிர்வாக அதிகாரி சட்டத்தரணி ஏ.ஜே.எம்.அர்ஷத் மற்றும் இக்கிரிக்கொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.மிஸ்கீன் விதான ஆகியோர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




