ஷூரா சபை – ரமழான் வழிகாட்டல்கள்

ஷூரா சபை - ரமழான் வழிகாட்டல்கள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

ரமழான் மாதம் வந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்களை விழித்து: “இதோ ரமழான் மாதம் வந்துவிட்டது. அது ஓர் அருள் நிறைந்த மாதம். அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறந்துவிடப்படும்; நரகத்தின் வாயில்கள் மூடிவிடப்படும்; ஷைத்தான்கள் விலங்கிடப்படுவர். அதில் ஆயிரம் மாதங்களை விட சிறப்பு வாய்ந்த ஓர் இரவு உள்ளது. யார் அவ்விரவின் சிறப்புக்களை இழந்து விடுகிறாரோ அவர் அனைத்து சிறப்புக்களையும் இழந்தவர் போலாவார்.” என்று கூறுவார்கள். (அஹ்மத்)

ஒரு தேசம் என்ற வகையில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் ரமழான் மாதம் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் எமக்கு பெற்றுத் தருவதற்கு வந்திருக்கிறது. சுய முன்னேற்றம், சமூக மேம்பாடு மற்றும் தேச அபிவிருத்தி ஆகியவற்றை நோக்காகக் கொண்டு இச்சந்தர்ப்பத்திலிருந்து உச்ச பயனை அடைந்து கொள்வதற்காக தேசிய ஷூரா சபை அனைத்து முஸ்லிம்களுக்கும் பின்வரும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க விரும்புகின்றது:

  1. இயன்றளவு அதிகமாக தொழுகை, நோன்பு, தர்மம், குர்ஆன் பாராயனம், திக்ர், துஆ, இஸ்திஃபார் போன்ற ஆன்மீக வணக்க வழிபாடுகளிலும் நன்மையான காரியங்களிலும் நாம் ஈடுபட வேண்டும். இம்மாதத்தில் செய்யும் நற்கருமங்களுக்கு வருடத்தின் வேறு எந்தக் காலப் பகுதியில் பெற்றுத்தராத அளவு பன்மடங்கான நன்மைகளையும் கூலியையும் அல்லாஹ் பெற்றுத் தருகின்றான். இங்கு நேரம் என்பது குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். எமது அன்றாட விடயங்களை திட்டமிட்டு ஒழுங்குபடுத்துவதுடன் பயனற்ற விடயங்களில் நேரத்தை வீணடிக்காதிருக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக நற்கருமங்களில் ஈடுபடுகின்றோமோ அந்தளவு அதிகமாக அல்லாஹ் எம்மீது திருப்தி கொண்டு எமது கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கிவிடுவான்.
  2. ரமழான் அல்குர்ஆனின் மாதம். இது குறித்து அல்லாஹ் புனித அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்: “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்(நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது”. (2:185)

அல்குர்ஆன் அனைத்து மனிதர்களுக்குமான அல்லாஹ்வின் தூதாகும். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள் அல்குர்ஆனின் போதனைகளின் சரியான உருவமாக அமைந்திருந்தன. எனவே, இம்மாதத்தில் எமது செயற்பாடுகள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் எமக்கு வழிகாட்டும் இறைவேதத்தின் போதனைகளின் பிரதிபலிப்பாக அமைவதன் மூலம் இஸ்லாத்தின் அழகிய தூதை பிற மதத்தினருடன் பகிர்ந்து கொள்ளக்கூடியதாய் இருக்கும்.

  1. ரமழானின் இரவுப் பொழுதுகளில் எமது உணவுப் பழக்கவழக்கங்கள் சுகவாழ்வு மற்றும் தேகாரோக்கியத்துக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டும். உணவில் வீண் விரயத்தையும் ஆடம்பரத்தையும் தவிர்க்க வேண்டும். சுகாதார நிபுணர்கள் எமக்கு அளிக்கும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். தேவையற்ற மற்றும் ஆடம்பரமான இஃப்தார்களில் இருந்து விலகி, ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினசரி உணவுக்கு வழியின்றி தவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே, மனிதர்கள் மீது நாம் காட்டும் அக்கறைக்கும் பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இந்த ரமழான் மாதம் அமையட்டும்.
  2. முஸ்லிம்கள் ரமழான் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் போது மற்றவர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் வெகுநேரம் பொது இடங்களில் ஒன்றுகூடுவதும், சுற்றித் திரிவதும், தெருக்களில் விளையாடுவதும், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும், சஹர் நேரத்தில் அதிக ஒலியுடன் வானொலி கேட்பதும் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் பெற்றோர்கள், இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவுரை வழங்கி வழிகாட்ட வேண்டும்.
  3. ஒழுக்கக்கேடான நடத்தைகளாலும், பாவச் செயல்களாலும் எமது நோன்பைக் கெடுத்துக் கொள்ளாமல், ரமழான் மாதத்தின் நன்மைகளை இழந்து விடாமல் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவன் பொய்யையும் பொய்யின் அடிப்படையிலான நடத்தையையும் விட்டுவிடவில்லையென்றால், அவன் உணவையும் பானத்தையும் தவிர்ந்திருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.” (அல்-புகாரி)

தூதர்(ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள், “உங்களில் எவரேனும் ஒரு நாளில் நோன்பு நோற்கும் போது, அவர் ஆபாசமான வார்த்தைகளில் ஈடுபடவோ அல்லது கூச்சலிடவோ கூடாது; யாரேனும் அவரைத் தூற்றினால் அல்லது அவருடன் சண்டையிட முயற்சித்தால், ‘நான் நோன்பு நோற்றிருக்கிறேன்’ என்று கூறி ஒதுங்கிவிட வேண்டும்.” (புகாரி, முஸ்லிம்)

  1. ரமழான் மாதத்தில் மகத்தான வெகுமதிகளைப் பெறக்கூடிய புண்ணிய செயல்களான சமூக மேம்பாடு, சமூக நலன் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், மத நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய அல்லது தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்குமாறும் முஸ்லிம் சமூகத்தை தேசிய ஷூரா சபை கேட்டுக்கொள்கிறது.

அல்லாஹ்வின் அருளால் இந்த ரமழான் மாதம்,எல்லாப் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் கடந்து, நமக்குள்ளும், நம் குடும்பத்திலும், சமுதாயத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாய் அமையட்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ரமழான் மாதத்தின் நன்மைகளைப் பூரணமாக அறுவடை செய்ய உதவுவானாக; நமது நற்கருமங்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வானாக; எமது தேசத்தை அமைதியும் செழிப்பும் உடையதாக மலரச் செய்வானாக!

தேசிய ஷூரா சபை

02.03.2025

Scroll to Top