ஷவ்வால் மாத தலைபிறையும் சமூகக் கட்டுக்கோப்பும்

Shawwal Moon

எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தை நிர்ணயம் செய்யும் விடயமாக மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய சூறா சபை சமூகத்தின் சகல தரப்பினையும் பணிவாக வேண்டிக் கொள்கிறது. கடந்த வருடத்துக்கு முன்னைய வருடம் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் ஏற்படுத்திய வடுக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். பரஸ்பர விமர்சனங்கள், கண்டனங்கள் மறுப்பறிக்கைகள், ஏளனங்கள் என்று அப்பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. அதுமாத்திரமன்றி பிற சமூதாயத்தவர்களிற் சிலர் முஸ்லிம்களது நிலை கண்டு ஆச்சரியப்பட்டனர். மற்றும் சிலர் எள்ளி நகையாடினர்.

எனவே, இந்நிலை இவ்வருடமும் உருவாகாமலிருக்க எம்மில் ஒவ்வொருவரும் தத்தமது பங்களிப்பைச் செய்து சமூகத்தின் ஐக்கியத்தையும் கட்டுக் கோப்பையும் பேணுவதோடு பிற சமயத்தவர் என்மைப் பற்றி தப்பாகப் புரிவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்காதிருப்போமாக!

அந்த வகையில் பின்வரும் வேண்டுகோள்களை தேசிய சூரா சபை சமூகத்தை நோக்கி விடுக்க விரும்புகிறது.

இலங்கையில் அரபு இஸ்லாமிய மாதங்களின் தலைப்பிறையைத் தீர்மானிப்பதன் அதிகாரமிக்க அமைப்புக்களாக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளி நிருவாகம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய மூன்றையும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்டிருக்கிறது. அவ்மூன்று அமைப்புக்களதும் பிரதிநிதிகள் கொழும்பு பெரிய பள்ளிவயலில் ஒன்று கூடி கலந்தாலோசித்து எடுக்கும் இறுதித் தீர்மானத்துக்கு இலங்கையிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் கட்டுப்பட வேண்டும். துறை சார்ந்தவர்கள் (உலுல் அம்ர்) என்று குர்ஆன் கூறும் தரப்பினராக அவர்களே பிறைத் தீர்மானத்தில் கணிக்கப்பட முடியும் நாடு பூராவும் இயங்கும் ஜம்இய்யாவின் கிளைகள் மூலமாகவும் மற்றும் வேறு வழிமுறைகள் மூலமாகவும் பெறப்படும். தகவல்களை அடிப்படையாக வைத்து அவர்கள் தீர்மானம் எடுப்பார்கள்.

பிறைபார்ப்பவர்களது எண்ணிக்கை, அவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள், எந்த நாளில் எந்த நேர அளவுக்குள் பிறை தென்படும் வாய்ப்புண்டு, எந்தத் திசையில் பார்க்கமுடியும், சர்வதேச பிறையா தேசியப் பிறையா போன்ற விவாகரங்களில் இந்த மூன்று தரப்பினரதும் முடிவுகளில் நாம் தங்கியிருப்பது எல்லாவகையிலும் உசிதமானதாகும். மார்க்கத்துக்கும் சமூகத்துக்கும் பாதுகாப்பாகவும் அமையும். மேற்படி மூன்று அமைப்புக்களது பொறுப்பில் இவ்விவகாரத்தை நாம் ஒப்படைப்பது நல்லது. அவர்கள் இது விடயமாக பிழையான முடிவுகளுக்கு வந்தால் அதன் பொறுப்பை அவர்களே சுமக்க நேரிடும். ஆனால், அதிதீவிரமான முயற்சிகளை அவர்கள் செய்த பின்னரும் பிழையான முடிவுக்கு வந்தாலும் அவர்களுக்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு என்பதை நாம் கவனிக்க வேண்டும். “ஆட்சியாளர் கடுமையாக ஆய்வு செய்த பின்னர் சரியான முடிவுக்கு வந்தால் அவருக்கு இரண்டு கூலிகளும் கடுமையான முயற்சி செய்த பின்னரும் பிழையான முடிவுக்கு வந்தால் அவருக்கும் ஒரு கூலி உண்டு. (முஸ்லிம் 1716) என நபி (ஸல்) கூறியிருப்பதால் இது விடயமாக விரிந்த மனதோடும் நல்லபிப்பிராயத்தோடும் அவர்களது முடிவுகளை நோக்க வேண்டும். ஒரு கூலிக்கும் இரண்டு கூலிக்கும் இடைப்பட்ட விடயமாகவே இது இருக்கிறதே அன்றி நரகத்துக்கும் சுவர்க்கத்துக்கும் போவதை தீர்மானிக்கும் விடயமாக இது இல்லை என்பதை அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும். நாட்டில் மார்க்க விவகாரங்களுக்கான தலைமைத்துவங்களை மதித்து செயற்படுமாறு சூரா சபை பொது மக்களை மீண்டும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.

ஐம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளிவாசல், கலாசாரத் திணைக்களம் என்ற மூன்று அமைப்புக்களும் தலைப்பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் சற்று அதிகமான கரிசனையும் அக்கறையும் எடுத்து வருவதை தேசிய சூரா சபை பாராட்டுவதோடு முஸ்லிம் சமூகம் இம்மூன்று அமைப்புகளிலும் இதுவிடயமாக பெரும் நம்பிக்கை வைத்திருப்பதால் அந்த நம்பிக்கையை தொடர்ந்தும் பாதுகாப்பதில் கவனமெடுக்க வேண்டும் என்றும் பணிவாக வேண்டிக் கொள்கிறது.

‘உங்களில் எவரும் ஒரு காரியத்தை செய்தால் அதனை கனகச்சிதமாக அவர் செய்வதையே அல்லாஹ் விரும்புகிறான்’. (பைஹகீ) ‘அல்லாஹ் கச்சிதமாகச் செய்வதை ஒவ்வொரு விடயத்திலும் கடமையாக்கியுள்ளான்’ (முஸ்லிம்) என்ற ஹதீஸ்கள் எமது காரியங்கள் அனைத்திலும் மும்முரமாகவும் அக்கறையோடு, முழுக்கவனத்தைக் குவித்தும் ஈடுபடுவதே எமது மார்க்கத்தின் தனித்துவ பண்பாக இருப்பதாலும் பிறையை தீர்மானிக்கும் பொறுப்பு ஓர் அமானிதம் என்ற வகையிலும் இது விடயமாக உங்கள் அதிதீவிர ஈடுபாட்டை முஸ்லிம் சமூகம் சார்பாக உங்களிடம் ஷூரா சபை எதிர்பார்க்கிறது. உங்களது தீர்மானங்களை தீவிர ஆராய்ச்சியின் பின்னரே நீங்கள் மேற்கொள்வதற்கும் உங்கள் முடிவுகள் சமூகத்தின் நலனுக்கு உறுதுணையாக அமைவதற்கும் அல்லாஹ் உங்களுக்குத் துணை நிற்க வேண்டும் என சூரா சபை பிரார்த்தித்துக் கொள்கிறது.

அல்லாஹ் எம் அனைவரது ரமழான் மாத அமல்களையும் ஏற்றுக் கொண்டு பெருநாளை சந்தோஷமாகவும் ஐக்கியமாகவும் கொண்டாடுவதற்கான வாய்ப்பைத் தருவானாக.

தகப்பலல்லாஹூ மின்னா வமின்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top