தேசிய ஷூரா சபை ஒழுங்கு செய்த முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான கலந்தாலோசனை அமர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை (15.01.2023) காலை கொழும்பில் நடைபெற்றது.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் இருந்து எதிரும் போதுமான கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இது தொடர்பான சட்டவரைபை தயாரிக்கும் படி சட்ட வரைபுகள் திணைக்களத்துக்கு நீதி அமைச்சர் கட்டளையிட்டிருப்பதாகவும் அந்த வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படும் சூழ்நிலையில் தான் இத்தகைய கலந்துரையாடலை தேசியசபை ஏற்பாடு செய்திருக்கிறது.
நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்களும் கலந்துரையாடல்களும் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் சமூகத்தில் கருத்து தெளிவையும் அமைதியையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்து வருகிறது.
விவாகம் விவாக ரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரச மட்டும் சமூக மட்டங்களில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக தனி நபர்களும் அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக ஷூரா சபை ஏற்பாடு செய்த மேற்படி ஆலோசனை மன்றத்தில் பேசப்பட்டது.
அனைத்து தரப்பினரும் பெரும்பாலும் கருத்தொற்றுமைப்பட்ட விவகாரங்ளை சபையோர் அங்கு பட்டியல்படுத்தினர். அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் முதலில் எடுக்கப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்ட அம்சங்கள் பற்றிய விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அவை ஒவ்வொன்று தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டது.
அந்த வகையில்,
பெண் காதி, பெண் திருமணப் பதிவாளர், வலீ, பலதாரமணம், மதாஉ, திருமண வயதெல்லை போன்ற கருத்து பேதங்களுக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக சபையோர் தமது அறிவு, மற்றும் அனுபவ பின்னணிகளில் இருந்து கருத்துக்களை வெளியிட்டனர். மிகவும் அறிவுபூர்வமாகவும் சுமூகமாகவும் திறந்த மனதுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொகுக்கப்பட்டன.
அவற்றை அடிப்படையாகக் கொண்டு தேசிய சூரா சபையின் மத்திய செயற்குழு மேற்கொண்டு ஆய்வு செய்து அறிக்கையொன்றைத் தயார் செய்வது நல்லது என சபையோர் ஏகமனதாகத் தீர்மானித்தனர்.
தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி அமர்வில் சட்டத்தரணி ஜாவித் யூஸுப், (உபதலைவர்) அஷ்ஷெய்க் பளீல்,(உபதலைவர்) சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்(செயலாளர்),ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர், சட்டத்தரணி காளான ருஷ்தி ஹபீப், முனீர்,ஸரூக் (முன்னைநாள் கொழும்பு பகுதி காதி நீதிபதி), ரிஸ்வான் ஆகியோரும் உலமாக்கள் சார்பாக அஷ்ஷெய்க் மக்தூம், அஷ்ஷெய்க் நஜ்மான், கலாநிதி அஷ்ஷெய்க் ரஊப் ஸெய்ன், அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத், அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத், அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுதீன் ஆகியோரும்
மிர்ஸூக் பளீல் (பேருவளை பகுதி முன்னைநாள் காதி நீதிபதி), குவாமி பாரூக் (விவாகப் பதிவாளர்) போன்றோரும் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வெளியிட்டனர்.
மேற்படி அமர்வில் தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழுவின் உப செயலாளர்களான பர்ஸான் ராசீக், ஷராப் அமீர், ஆகியோரும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நுஃமானும் கலந்து சிறப்பித்தனர்.
– தேசிய ஷூரா சபையின் ஊடகப் பிரிவு