(தேசிய சூர சபையின் சமூக பொருளாதாரக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை)
சந்தர்ப்பு சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்போம்!
கோவிட் -19 பரவல் நாட்டின் வியாபார முறைமையையும் மக்களது நுகர்வுப் பாங்கினையும் மாற்றியமைத்துள்ளது. இந்த அவசர கால நிலைமை ஒரு சோதனை மிகுந்ததாக இருந்தாலும் அதில் பல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் உள்ளதை நாம் தெளிவாக உணர வேண்டும்.
இயந்திரமாக செயற்பட்ட மனிதர்கள் சுயமாகவும் நிதானமாவும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். கிராமங்களிலும் நகரங்களிலும் மனித நேய உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வீடுகளில் சிக்கனம் பேணப்படுகின்றது. அதேபோல் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் ஒரு புதிய விடிவை நோக்கிப் பயணிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அனர்த்தம் மற்றும் அவசரகால நிலைமைகளில் நிவாரணப் பணிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுள்ள எமது பணிகள், நீடித்த இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு எமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை பெற்றுத் தரக்கூடிய முயற்சிகளை நோக்கி நகர வேண்டும். நாம் செலவிடும் ஒவ்வொரு ரூபாய் ஸதாக்காவும் ஸக்காத்தும் நிலையான, உரிய இலக்கை அடைந்துள்ளனவா என நாமே எம்மை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு உள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் பூரண ஆதரவு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை சீரான முறையில் ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியமான சமூகக் கடமை என தேசிய ஷூறா சபையின் கருதுகிறது.
ஊரடங்கு சட்ட நீடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதில் அரச இயந்திரத்துடன் இணைந்து பிரதேச சிவில் மற்றும் அரசியல் தலைமைகள் களத்தில் பணியாற்ற வேண்டும். அதேநேரம் இந்த சவாலை சந்தர்ப்பமாக மாற்றியமைப்பதில் எமது ஸதகாக்களையும் ஸக்காத் நிதிகளையும் பயன்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். எமது இந்தப் புதிய முயற்சியானது சமூகத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அவை சிறந்த பெறுபேறுகளை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும்.
எனவே, இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஆன்லைன் சேவைகள் மற்றும் අපේ පොළ ஆகிய இரு முக்கிய வியாபார முறைகளை ஊக்குவிக்க விரும்புகிறோம்.
ஆன்லைன் சேவைகள்
நகரப்புறங்களில் மற்றும் உப நகரங்களில் ஒன்லைன் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கான தரமான சேவைகள் வழங்கப்பட முடியும். இந்த வியாபார முயற்சிகள் ஒரு கூட்டு முயற்சியாக அமைவது விரும்பத்தக்கது. குறித்த பிரதேசத்தில் வசதியுள்ளவர்கள் முன்வந்து மொத்த வியாபாரிகளை தொடர்புகொண்டு அதேபோல பிரதேசத்தில் மோட்டார் சைக்கில்கள், முச்சக்கர வண்டிகள் உடனான இளைஞர்களையும் தொடர்புபடுத்தி இந்த முயற்சியை முன்னெடுக்க முடியுமாக இருப்பின் அது மிகவும் பயன் மிக்கதாக அமையும்.
අපේ පොළ
எமது கிராமங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி போன்ற வாகனங்களை வைத்துள்ள இளைஞர்களை ஊக்குவித்து அவர்களைக் கொண்டு கிராம மட்டத்தில் சிறிய சந்தைகளை ஆரம்பிக்க முடியும். சந்தைகளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களில் நடத்துவதுடன் மற்றைய நேரங்களில் ஒன்லைன் சேவையாகவும் முன்னெடுக்க முடியும்.
நாம் மேலே குறிப்பிட்ட ஒன்லைன் சேவைகள் மற்றும் අපේ පොළ ஆகிய இரண்டும் முறையான வியாபார முயற்சிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எமது அனைத்து நடவடிக்கைகளும் இலாபத்தையும் சேவையையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் மானியங்களை வழங்குவதில் அக்கறையோடு செயற்பட்ட நாம் தற்போது புதிய வியாபாரிகளை உருவாக்குவதில் சமூகமாக செயற்படக் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் ஊக்குவிப்பும் ஆதரவுமே எங்கள் இளைஞர்களுக்கு நீங்கள் வழங்கும் மூலதனமாகும்.
ஒவ்வொரு ஊரும் குறைந்தது 10 புதிய வியாபாரிகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யுமிடத்து நாடளாவிய ரீதியில் சுமார் 10,000 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும், இன்ஷா அல்லாஹ்.
அதேபோல பாசத்தையும் அன்பையும் முதன்மைப்படுத்திய ஒரு சமூகம் என்ற வகையில் வியாபாரத்தின் ஆரம்ப கட்டங்களில் உறவு முறைகளுக்கு அப்பால் அளவை நிறுவைகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அனைவரும் பணத்தை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும். வியாபார முறைகளை கடன் என்பதுஆரம்பித்த இடத்திலேயே அழித்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. முஸ்லிம் வியாபாரிகளாகிய நாம் மற்ற சமூகத்தினருக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மையையும் நாணயத்தையும் பேணக் கூடியவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் எந்தப் பணியை முன்னெடுத்தாலும் அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பேணி நடக்க வேண்டும். சந்தையிலும் எமது கடைகளுக்கு இடையிலும் குறைந்தது 10 அடி இடைவெளியையாவது பேண வேண்டும். தனிநபர் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு என்பவற்றின் மீதே தேசிய பாதுகாப்புத் தங்கியுள்ளது.
இறுதியாக,
அல்லாஹ்வின் உதவியால் இந்த அசாதாரண சூழ் நிலை சீரடைந்து நாடு இயல்பு நிலையை அடையுமிடத்து உங்களது இந்த வியாபார முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகுமா என்ற அச்சம் எழத் தேவையில்லை. ஏனெனில்,சாதாரண சூழ்நிலையில் மக்களது தேவை தற்போது உள்ளதை விட பல மடங்காக மாறும். அதற்கேற்ப புதிய வியாபார உத்திகளை எம்மால் விருத்தி செய்ய முடியும்.
நாம் இந்தக் குறுகிய காலத்தில் எமது பணியை திறம்பட நம்பகத்தன்மையுடன் மேற்கொள்வோமாயின் இன்ஷாஅல்லாஹ் அதுவே எமது வியாரம் எதிகாலத்தில் வெற்றியடைய அத்திவாரமாக அமையும்.
எதிர்காலத்தில் எமது தற்காலிக சந்தைகளை காலை சந்தையாக அல்லது சுபஹ் தொழுகைக்கு பின்னரான சந்தையாக மாற்றி எமது ஊரிகளின் காலைப்பொழுதுகளை பரக்கத் மிக்க பொழுதுகளாக எம்மால் மாற்ற முடியும். அதேபோல் நகர பிரதேசங்களிலும் ஆன்லைன் சேவைகளை பல நிறுவனங்களுடன் இணைந்து விருத்தி செய்ய முடியும்.
தேசிய ஷூரா சபையின் சமூகப் பொருளாதாரக் குழு நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் வியாபார முயற்சிகளை மேம்படுத்துவதில் உங்களுடன் இணைந்து பணிபுரிய திடசங்கற்பம் பூண்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் கீழ்வரும் இலக்கங்கள் ஊடக எம்மைத் தொடர்புகொள்ள முடியும்.
அஜிவதீன் – 0714422146
அன்வர் சதாத் – 0777330189