பள்ளிவாயல்களது பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சில வழிகாட்டல்கள்

srilanka mosque covid

Covid-19 பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட மத ஆலயங்களை 12ம் திகதி முதல் திறக்க முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அனைவரது நலன்களையும் கருத்தில் கொண்டு பல நிபந்தனைகளுடன் கூடிய வகையில் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, பள்ளிவாயல்களைப் பொருத்தவரையில் சில நடைமுறைகள் அமுலுக்கு வருவது அவசியம் என ஷூரா சபை கருதுகிறது.

பொதுவான அறிவுறுத்தல்கள்

  1. 50 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் பள்ளிவாயலில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  2. வரிசைகளில் நிற்கையில் ஒரு மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும்.
  3. கைலாகு செய்வது, கட்டித் தழுவுவது, நெருக்கமாக நின்று சலாம் கூறுவது போன்றன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  4. பள்ளிவாயல்களில் தரித்திருக்கும் நேரத்தை இயன்றவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  5. கூடி நின்று கதைத்தல், நூல்களை வாசித்தல், பயான் பண்ணுதல், தொழுகைக்கு முன்னரோ பின்னரோ ஒன்று கூடுதல், மஸ்ஜிதில் ஓய்வெடுத்தல் என்பன முற்றாக தவிர்க்கப்படவேண்டும்.
  6. முடிந்த வரை ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளிலேயே வுளூ செய்துவிட்டு வருவது நல்லதாகும்.
  7. பள்ளிவாயல்களில் உள்ள ஹவுள்களை வுளூவுக்காக உபயோகிப்பதை முற்றுமுழுதாக தவிர்ப்பதுடன் நிர்ப்பந்தமான சூழலில் மட்டும் டெப்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  8. தடிமல், தும்மல், இருமல் போன்ற சுவாசத் தொகுதியுடன் தொடர்பான நோய்கள் மற்றும் காய்ச்சல் கண்டவர்கள் பள்ளிக்கு வருவதை முற்றுமுழுதாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவை கொரோனாவின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்பு உண்டு.
  9. நீரிழிவு, இருதய மற்றும் நாட்பட்ட நோய்களை கொண்டவர்களும் வயது முதிர்ந்தவர்களும் சிறுவர்களும் பள்ளிக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக இத்தகையவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கொரோனா தொற்றுக்கு இவர்கள் இலகுவில் உள்ளாகலாம்.
  10. பயணம் போய் வருபவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவதை தவிர்ப்பது நல்லது.

நிர்வாகிகளுக்கான அறிவுறுத்தல்கள்

  1. சன நெரிசல் உள்ள பிரதேசங்களில் 50 பேருக்குரிய டோக்கன்களை ஒரு மணிநேர இடைவெளிக்குள் வழங்க முடியும்.
  2. தொழுகைக்கான அதான் ஒலிபதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் பள்ளிகள் திறக்கப்பட்டு அதானைத் தொடர்ந்து இகாமத் கூறி தொழுகை நிறைவடைந்து பத்து நிமிடத்தில் பள்ளிவாயல்கள் மூடப்பட வரவேண்டும்.
  3. தொழுகைகள் நடைபெறும் நேரங்களில் கதவுகளும் யன்னல்களும் திறந்திருக்க வேண்டும்.
  4. பள்ளிக்கு வருவோர் பள்ளிவாயலின் குர்ஆன் மற்றும் நூல்களை பாவிக்காதிருக்க அவற்றை மூடி வைப்பது நல்லது.
  5. தொழுகைக்கு வருவோர் ஸப்புகளில் தமக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் படி பணிப்பதோடு அதனை கண்காணிப்பதற்கு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது அவசியமாகும்.
  6. நீர் அருந்துவதற்காக வைக்கப்பட்டுள்ள குளிரூட்டிகள் அகற்றப்பட வேண்டும்.
  7. பள்ளிக்கு வரும் ஒவ்வொருவரும் ‘மாஸ்க்’ அணிந்து வருவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  8. தொழுகையாளிகள் நுழைவதற்கும் வெளியேறவும் வெவ்வேறு வாயில்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
  9. நுழைவாயிலில் கை கழுவுவதற்காக சவர்க்காரத்துடன் கூடிய டெப் வசதிகளும் பாதரட்சைகளை அகற்றிய பின்னர் கால்களை கழுவுவதற்கு பிரத்தியேகமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும்.
  10. முஸல்லாவை வீட்டிலிருந்து தொழுகையாளிகள் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தலாம்.
  11. பள்ளிவாயலின் தோட்டத்துக்குள்ளும் பள்ளிவாயலுக்கு உள்ளேயும் பின்வரும் பதாதைகள் தொங்க விடப்படலாம். “தும்ம நேரிட்டால் முழங்கையை மடித்து அதற்குள் தும்முங்கள்”, “உங்கள் வாய், மூக்கு, கண்களை தொடாதீர்கள்”,”பள்ளிக்குள் கலந்துரையாடல் செய்ய வேண்டாம்”, “நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் பள்ளிக்கு வரலாகாது” போன்ற பதாதைகளை தொங்க விட முடியும்.
  12. கதவுகள், யன்னல்கள், கைப்பிடிகள், கழிவறைகள் என்பன வழக்கமாக அடிக்கடி பல தடவை தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  13. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் தரைப்பகுதி சுத்தம் செய்யப்படவேண்டும். எனவே, காப்பட்கள், பாய்கள் என்பன தொழும் பகுதிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
  14. பள்ளிவாயலின் ஆங்காங்கே Sanitizer கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வக்பு சபையும் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுவதுடன் பிராந்திய பொது சுகாதார அதிகாரிகளை அவ்வப்போது கலந்தாலோசித்துக் கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

மேற்படி ஒழுங்குகளை நாம் கடைப்பிடித்தால் இன்ஷா அல்லாஹ் இயன்றவரை கொரோனா தொற்றை தவிர்க்க முடியும் என்பதுடன் அரச விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்களாக நடந்து கொள்ள முடியும்.

வல்லவன் அல்லாஹ் அனைவரையும் அனைத்து விதமான ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாப்பானாக!

இப்படிக்கு,

ஊடகப்பிரிவு

தேசிய ஷூறா சபை

11.6.2020

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top