தேசிய ஷூரா சபை விடுக்கும் சுதந்திர தின செய்தி

indp

இலங்கை ஒரு சுதந்திர தேசமாக இன்று ஒரு புது அனுபவத்தின் நுழைவாயிலில் உள்ளது. சுதந்திரம், விடுதலை என்பன வெவ்வேறு வடிவங்களில் எம் நாட்டை வந்தடைந்துள்ளன.

இத்தகைய பல்வேறு வடிவங்களிலும் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் எனும் நம் நாட்டின் பல்வேறு இன மக்களும் முக்கிய பாத்திரங்களை வகித்துள்ளனர்.

எமது அரசியல் தலைமைகள் 1948ல் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பங்களிப்பைச் செய்தனர். இலங்கை இராணுவத்தினர் 30 வருட யுத்தத்திலிருந்து 2009ல் விடுதலை பெற்றுக் கொடுத்தனர். 2015ல் இந்நாட்டின் பொதுமக்கள் குடும்ப ஆட்சி, ஊழல், அச்சம் என்பவற்றிலிருந்து தேசத்தை மீட்டனர். இவ் ஒன்றிணைந்த விடுதலைப் பாதையில் மக்களின் சக்தி தெளிவாக வெளிப்பட்டது.

எந்தவித தாமதமும் இல்லாமல் ஒரே தாயின் பிள்ளைகளாக உடன் முன்னேறிச் செல்வோம் என்பது தேசிய கீதம் இசைக்கும் போதெல்லாம் எம் நினைவுக்கு வருகின்றது. தேசிய கீதத்தின் இந்த வார்த்தைகளை செயலுருப்படுத்தும் நேரம் வந்துள்ளது. நல்லாட்சிக்கு மக்கள் அளித்துள்ள ஆணை, இந்த உன்னத இலக்கிற்கான நல்லதொரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.

இலங்கை சுதந்திரமடைய 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1937ல் தேசிய சபையில், காலஞ்சென்ற கலாநிதி ரி.பீ. ஜாயா ஆற்றிய உரையின் முக்கிய வார்த்தைகள் சிலவற்றை எம் மக்களுக்கு நினைவூட்டுவது பெறுமதி மிக்கதாகும். ‘நாம் எம் சமூகத்திக்காகவும் எழுந்து நிற்கிறோம். ஆனால் அது நாட்டின் ஒட்டு மொத்த நலனுக்கு எதிரானதாக அமைந்து விடாது. நான் எப்போதும் சொல்வதை இன்று மீளவும் வழியுறுத்துகின்றேன். ஏப்போதும் நாட்டின் நலனே தலையாயது, முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எமது கருத்தாகும்’ என்று அவர் கூறினார்.

இந்த சுதந்திர தினத்தில் ரி.பீ. ஜாயா முன்வைத்த அதே உணர்வை எமது சிந்தனைகளில் நாம் புதுப்பிக்க வேண்டும். இனவாத, மதவாத நோய்களை விட்டு எங்கள் சிந்தனைகளை இத் தினத்திலிருந்து தூய்மையாக்கிட வேண்டும்.

இவ் 67வது சுதந்திர தினத்தில் சகவாழ்வு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை நிறைந்த அமைதியான யுகமொன்றைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு  இலங்கையின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தேசிய ஷூரா சபை அழைப்பு விடுப்பதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இஸ்மாயில் ஏ அஸீஸ் 

பொதுச் செயலாளர்

தேசிய ஷூரா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top