தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு (Executive Committee) வின் 200 ஆவது கூட்டம் கடந்த 2023.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு AMYS கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெற்றது.
தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் நிறைவேற்று குழுவின் உறுப்பினர்கள், செயலக (Secretariat) உறுப்பினர்கள், அங்கத்துவ அமைப்பு (Member Organisations) களது பிரதிநிதிகள் உட்பட சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.
மௌலவி தாஸீம் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியம் தொடர்பாக நிகழ்த்திய ஆன்மீக உரையைத் தொடர்ந்து கடந்த கூட்ட அறிக்கையை சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் போன்றன தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக, ‘இலங்கை முஸ்லிம்கள் கல்வித் துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்’ தொடர்பாக விசேட கலந்தாலோசனை மன்றம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு அமைவாக 03-08-2023 அன்று ஷூரா சபையின் காரியாலயத்தில் அது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேற்படி அமர்வில் பின்வருவோர் தலைவர் ரீ.கே. அஸூர், ஷெய்க் எச்.எம்.எம். பழீல், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், கலாநிதி என்.பி. கபூர்தீன், ஷெய்க் ஜெஸார் ஜௌபர், ஷெய்க் ரஸீன் அஸ்ஸான், ஷெய்க் எம். எச். எம். புஹாரி, எம்.எச் எம் ஹஸன் ஆசிரியர், தேசிய கல்வி நிறுவனத்தை சேர்ந்த விரிவுரையாளர் இஷ்ரா, அஷ்ஷைக் மக்தூம் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த விடயம் குறித்து மேலும் விரிவாக ஆராய்வதற்காக துறைசார்ந்த இன்னும் சிலரை அடையாளம் கண்டு, மற்றோர் அமர்வு விரைவில் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
‘தேசிய ஷூரா சபையின் செயற்பாடுகள்- ஒரு பார்வை’ எனும் தலைப்பில் உபதலைவர்களில் ஒருவரான ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் அடுத்ததாக உரை நிகழ்த்தினார். தேசிய ஷூரா சபையின் பலம், அதற்கு சமூக மட்டத்தில் காணப்படும் அங்கீகாரம், அதன் மீதான சமூகத்தின் எதிர்பார்க்கைகள், அது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசியதுடன் தற்போதையை காலகட்டத்தில் தேசிய ஷூரா சபையின் பணிகள் எந்தளவு முக்கியத்துவமிக்கவை என்பதையும் எடுத்துக் காட்டினார். அனைவரும் ஒத்துழைத்தால் தான் அதன் பணிகளை சிறந்த முறையில் முன்கொண்டு செல்லலாம் என வலியுறுத்திய அவர் இது அல்லாஹ்வால் சமூகத்திலுள்ள திறமைசாலிகள் துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் மீது சுமத்தப்பட்ட அமானிதம் என்றும் வலியுறுத்தினார்.
அடுத்ததாக இலங்கை பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சகோ. அஜுவதீன் அவர்கள் ‘தேசிய ஷூரா சபை எத்தகைய விடயங்களுக்கு கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?’ எனும் தலைப்பில் கருத்துக்களை முன்வைத்தார். ஷூரா சபையின் சட்டக் கோவையில் உள்ள பிரதான நோக்கங்களை மையமாகக் கொண்டு தான் எந்தவொரு வேலைத் திட்டமும் நகர வேண்டும் என அவர் வலியுறுத்தியதோடு, முதன்மைப்படுத்த வேண்டியவைகளை அடையாளம் காணுவதற்கான முறைமையை தெளிவுபடுத்தி, அதற்கான நியாயங்களை குறித்துக் காட்டினார்.
ஷூரா சபையின் செயற்பாடுகள் தொண்டர் பணியாகவே முன்னெடுக்கப்படுகின்றன. அதனை வினைத் திறனாக்க வேண்டுமானால் முழுநேர உத்தியோகத்தர்களது தேவை இருக்கிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடி மிக்க சூழலில் இதனை சாத்தியப்படுத்தும் வழிவகைகள் பற்றி சிந்திப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஷூரா சபையின் உறுப்பு அமைப்புக்களாக இருந்து செயற்பட்டு பின்னர் சில பல காரணங்களால் தமது சமூகப் பணிகளை பொதுவாகவே நிறுத்திக் கொண்ட சில அமைப்புக்களை மீண்டும் ஷூரா சபையுடன் இணைத்துக்கொள்வது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் இது பற்றி மேலும் சில முயற்சிகளை மேற்கொள்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது.
அடுத்ததாக தற்போதைய நிதி நிலைமை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. பொருளாளர் மெளலவி நவ்பர் அவர்கள் தற்போதைய நிதிநிலைமை பற்றிய ஒரு தெளிவை வழங்கினார்.
கூட்டம் கஃப்ஃபாரதுல் மஜ்லிஸ் துஆவுடன் மதியம் 1.15 அளவில் நிறைவுற்றது.