ரமழான் மாதம் முஸ்லிம்களது வாழ்வில் வருடாவருடம் வந்து போகும் மைல் கல்லாக, திருப்பு முனையாக அமைய வேண்டிய மாதமாகும். அந்தவகையில் எமது கடந்த கால பலவீனங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, சமூகமாக முன்னோக்கிச் செல்வதற்கான தயார்படுத்தல்களை இந்த மாதத்தில் செய்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
இலங்கையிலும் உலக அளவிலும் கொவிட் 19 தொற்று ஆதிக்கம் செலுத்தி வரும் தற்கால சூழலில் தான் இம்முறை புனித ரமழானை நாம் சந்திக்கிறோம். அதேவேளை வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலவிதமான சவால்களை நாம் எதிநோக்கிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிக்குள் முன்னெப்போதும் இல்லாமல் பலர் சிக்கியிருக்கிறார்கள்.
இந்த மூன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் எடுத்த நிலையில் தான் ரமழான் கால அமல்களையும் இதர செயற்பாடுகளையும் முஸ்லிம் சமூகம் நிதானமாகவும் தூர நோக்கோடும் அமைத்துக் கொள்ள வேண்டும் என தேசிய ஷூரா சபை எதிர்பார்க்கிறது. எனவே, சாதாரண சூழ்நிலையில் ரமழானைப் பயன்படுத்தியது போன்றல்லாமல் சமகால சூழ்நிலையை புரிந்து கொண்ட வகையில் ரமழானை சிறப்பாக பயன்படுத்த திட்டமிட்டுக் கொள்வது மிக முக்கியமானது.
இந்தப் பின்னணியில் தேசிய சூறா சபை பின்வரும் வழிகாட்டல்களை தர விரும்புகிறது:-
#சுகாதார வழிமுறைகள்
கொவிட் 19 பாதிப்பை குறைப்பதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இவ்விடயத்தில் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியது போல இந்த ரமழானிலும் முஸ்லிம்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தேசிய சூறா சபை அன்பாககேட்டுக் கொள்கிறது.
உலக சுகாதார ஸ்தாபனம் 31.3.2021 அன்று வெளியிட்ட அறிவித்தலின் படி கொவிட் தொற்றைப் பொறுத்தவரை எதிர்வரும் காலங்களில் மூடுண்ட இடங்களில் ஒன்றுகூடல்களை நடாத்துவது புதிய கொரோனா வைரஸின் புதிய அலை உருவாக வழிவகுக்கலாம் என்றும் மத கிரியைகளை முடிந்த வரை திறந்த வெளிகளில் நடாத்துவது நல்லது என்றும் அல்லது ஒன்று கூடுவோரது எண்ணிக்கையும் கால அளவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. கொவிட் வேகமாகப் பரவிவரும் நாடுகளில் இருப்போர் இது விடயமாக கூடிய அவதானம் எடுக்க வேண்டும் என்றும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் பள்ளிவாயல்களுக்கு ஜமாஅத்தாக தொழச் சென்றால் அங்கு வழமையாக கவனிக்கும் படி கூறப்படும் அம்சங்களான வீட்டிலே வுழூ செய்து தயாராகிச் செல்வது, முஸல்லாவை எடுத்துச் செல்வது, முகக்கவசம் அணிந்து கொள்வது, சமூக இடைவெளியை முற்றாகப் பேணுவது, கைலாகு செய்வதையும் கட்டித்தழுவுவதையும் தவிர்ப்பது, நீண்ட நேரம் பள்ளிவாசல்களில் தரித்திருப்பதை தவிர்ப்பது போன்ற ஒழுங்குகளை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.இது நாட்டின் சட்டமாக இருப்பதுடன் பொது நலனுக்கான ஏற்பாடாகவும் இருப்பதால் இவற்றை அனுசரித்து நடக்கும் எவருக்கும் அல்லாஹ் நிச்சயமாக நன்மைகளைத் தருவான்.
தராவீஹ் தொழுகையை முடியுமான வரை குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் இணைந்து தத்தமது வீடுகளில் ஜமாஅத்தாகத் தொழுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளுதல் நல்லது.
நோய்கள் தொற்றிக்கொள்ளாதிருக்க முதியோரும் நோய்வாய்ப்பட்டிருப்போரும் வீடுகளில் தொழுதுகொள்வதும் சிறுவர்களை பள்ளிவாயல்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்வதும் சாலச் சிறந்ததாகும்.
#பள்ளிவாயில் நிர்வாகிகளுக்கு
வழக்கமாகவே ரமழான் காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு பள்ளிவாயில்களுடனான தொடர்பு அதிகமாக இருக்கும் என்ற வகையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் இந்த வாய்ப்பை அமானிதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் எத்தனை பேரை தொழுகைக்காக அனுமதிக்கலாம் என்பதை தீர்மானித்து அது பற்றி பொது மக்களுக்கு பரவலாக அறிவிக்க வேண்டும்.
பள்ளிவாயில்களில் இடம்பெறும் மார்க்க விளக்க வகுப்புக்களுக்கும் குத்பாக்கள், பயான்களுக்கும் மிகப் பொருத்தமான உலமாக்களுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
பயான்கள், ஐவேளைத் தொழுகைகள் போன்றவற்றை பள்ளிவாயில் ஒலிபெருக்கிகள் வாயிலாக ஒலிபரப்புவதை முற்று முழுதாக் தவிர்ப்பது இன நல்லுறவுக்கும் ஒலியால் சூழல் மாசடையாதிருக்கவும் வழிவகுக்கும். பள்ளிக்கு வெளியில் உள்ள ஒலிவாங்கிகளை அத்தியாவசியமான அறிவித்தல்களுக்காக மாத்திரம் பயன்படுத்தலாம்.
சிறுவர்களும் இளையவர்களும் பொது இடங்களில் கூடியிருப்பதையும் பாதைகளில் விளையாடித் திரிவதையும் கட்டுப்படுத்துவற்கான வழிகாட்டல்களை வழங்க முடியும்.
வழமையான கஞ்சி விநியோகத்தை பள்ளிவாயல் நிர்வாகங்கள் மேற்கொள்வதாயின் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகப் பேணி அதனை முன்னெடுப்பது மிக அவசியமானதாகும்.
#உலமாக்கள் தொடர்பானவை
ரமழான் காலம் மக்களை நெறிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக இருப்பதால் உலமாக்கள் இந்த மாதத்தை உச்சமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பள்ளிவாயில்களில் இடம்பெறும் குத்பாக்கள் மற்றும் பயான்களிலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போதும் முஸ்லிம் சமூகத்துக்குள் பிரிவினைகளையோ மோதல்களையோ தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்களை முற்றுமுழுதாக தவிர்க்கும் படி தேசிய ஷூரா சபை அழுத்தமாக வேண்டிக் கொள்கிறது. ஆனால், அதி முக்கியத்துவாய்ந்த தலைப்புக்களான அல்லாஹ்வுடனான உறவை வலுப்படுத்துவது, சமூக ஐக்கியம், இன நல்லிணக்கம், சூழல் சுத்தம், உடல் ஆரோக்கியம், இஸ்லாமிய குடும்ப வாழ்வு, பிள்ளை வளர்ப்பு, ஒழுக்க மேம்பாடு, உள நோய்களில் இருந்து தூரமாகியிருப்பது, கல்வித் துறையில் உயர்ந்து விளங்குவது போன்ற தலப்புக்களைத் தெரிவுசெய்யுமாறும் அது சிபார்சு செய்கிறது.
ரமழான் காலங்களில் மேற்கொள்ளும் வழமையான தெளிவூட்டல் நிகழ்ச்சிகளை ZOOM தொழிநுட்பம் மூலம் மேற்கொள்ள முடியும்.
#பொருளாதார மேம்பாடு
ரமழான் காலம் சமூகத்தில் பொருளாதார ரீதியான மேம்பாட்டை ஏற்படுத்த சிறந்த வாய்ப்பாகும்.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ரமழான் நோன்புக்கு முன்னர் உள்ள மூன்றாம் தூண் ஸகாத் என்ற வகையில் ஸகாத் கமிட்டிகள் இந்த ரமழானில் ஏனைய காலங்களை விட அதிக உடற்சாகத்தோடும் திட்டமிட்டும் இயங்க முடியும்.
நீண்டகாலமாக தொழில் வாய்ப்புக்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சரியாக இனங்காணப்பட்டு அவர்களும் ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக ரமழான் காலத்தில் பெருகும் முஸாபர்கள் விடயமாக அந்தந்த மஹல்லாக்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.
#பொதுவான வழிகாட்டல்கள்
பொது இப்தார்களை இயன்ற வரை தவிர்த்துக் கொள்வது காலப் பொருத்தமாக அமைவதுடன் அதற்கென ஒதுக்கும் பணத்தொகையை தேவையுடையவர்களுக்கான வாழ்வாதார வசதிகளாக வழங்கலாம்.
பள்ளிவாயல்களை முஸ்லிம்கள் கட்டுப்பாட்டுடன் பயன்டுத்தப்படுவதன் காரணத்தினால் ரமழானை கழிப்பதற்கான உகந்த சூழுலாக வீட்டுச் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை சினிமா போன்ற நேரத்தை வீணடிக்கும்,மற்றும் பாவமான காரியங்களுக்காக வீட்டில் இருப்போரில் எவரும் பாவிக்காதிருக்க வீட்டில் இருக்கும் பொறுப்பானவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
மாற்றமாக குர்ஆன் திலாவத்துக்கும் தஜ்வீத் சட்டங்களை கற்றுக் கொள்வதற்குமான ஹிஸ்பு மஜ்லிஸ்கள்,வாசித்த நூல்களில் உள்ள கருத்துக்களை பகிந்து கொள்வதற்கான முஸாகரா மஜ்லிஸ்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக உலமாக்களும் துறைசார் நிபுணர்களும் நடாத்தும் பயனுள்ள நிகழ்ச்சிகளை பார்க்கவும் செவிமடுக்கவுமான சந்தர்ப்பங்கள் போன்றன ஏற்பாடுசெய்யப்பட வேண்டும்.
பாடசாலைகளிலோ பல்கலைக் கழகங்களிலோ மத்ரஸாக்களிலோ கற்கும் மாணவ மாணவியர் வீடுகளில் விடுமுறையில் இருந்தால் அவர்கள் தமது பாடங்களை மீட்டுவதற்கும் வாசிப்பதற்குமான அமைதியான சூழலை பெற்றோர் ஏற்படுத்துவதும் சமூக ஊடகங்கள் வாயிலாக மேலதிக வழிகாட்டல்களை தமது பிள்ளைகள் ஆசிரியர்களிடமிருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அவசியமாகும்.
அல்குர்ஆன் இறக்கப்பட்ட புனித மாதமாக ரமழான் இருப்பதால் பொதுவாக முஸ்லிம்கள் அனைவரும் தினமும் அல்குர்ஆனிலிருந்து கணிசமான பகுதியை ஓதுவதும் ஓய்வாக இருக்கும் போதும் வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போதும் திக்ரில் நாவை ஈடுபடுத்துவதும் அவசியமாகும்.பொதுவாக நாவின் விபரீதங்கள், பாவமான எண்ணங்கள் ,செயல்கள் என்பவற்றிலிருந்து முற்றுமுழுதாகத் தவிர்ந்து கொள்வதன் மூலம் புனித ரமழானில் அல்லாஹ்வின் அருளையும் நிரப்பமான கூலியையும் ரய்யான் எனும் சுவர்க்கத்தையும் இன்ஷா அல்லாஹ் அடைந்து கொள்ள முடியும்.
நபி(ஸல்) “யார் உண்மைக்குக்குப் புறம்பான பேச்சுக்களை பேசுவதில் இருந்தும் அதனடிப்படையில் செயல்படுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளவில்லையோ அவர் உணவையும் குடிப்பையும் தவிர்ந்து கொள்வதில் அல்லாஹ்வுக்கு எத்தேவையுமில்லை” (ஸஹீஹுல் புஹாரி-1903) எனக் கூறினார்கள்.
மேலே சொன்ன ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு ரமழானை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி, அல்லாஹ்வின் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதுடன், கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாடும் உலகமும் விடுபட வேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
இம்முறை ரமழான் எம் அனைவரது வாழ்வின் மற்றுமொரு மைல் கல்லாக,மிகச் சிறந்த சந்தர்ப்பமாக அமைய தேசிய சபை வாழ்த்துகிறது.
இவ்வண்ணம்
#தேசிய ஷூரா சபை
24.8.1442 – 07.04.2021