தேசிய ஷூரா சபையின் நான்காவது பொதுச்சபைக்கூட்டமும் ஆலோசனை மன்ற அமர்வும் கடந்த 15ம் திகதி கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள எம். ஐ. ஸீ. எச். கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
இரு அமர்வுகளைக் கொண்ட இந்நிகழ்வில் முதலில் நடைபெற்ற ‘இன்றைய சவால்களும் தேசிய ஷூரா சபையும்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த ஆலோசனை மன்ற அமர்விற்கு நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகத்தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலார்கள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.
கதீப் முஅத்தின் நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் ஜப்பாரின் கிராத்துடன் நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வமர்விற்கு தேசிய சூரா சபையின் கௌரவத் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமை வகித்தார். உபதலைவர் அஷ்ஷெய்க் பளீல் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். இவ் ஆலோசனை மன்ற அமர்வில் முக்கிய மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன.
தேசிய சூரா சபையின் செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளரும் கட்டடக் கலைநிபுணருமான ககோ.ரீஸா யஹியா அவர்கள் “தற்கால சவால்களுக்கு முன்னால் தேசியசூரா சபை”எனும் தலைப்பில் சுமார் ஒரு மணித்தியாளம் விஷேட உரையை நிகழ்தினார். முஸ்லிம் சமூகம் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல்வேறுபட்ட சவால்களுக்கு என்றும் இல்லாத வகையில் முகம்கொடுத்து வருகிறது. இந்த சவால்கள் ஒவ்வென்றுக்குப் பின்னாலும் பாரிய பின்னணிகள் உள்ளன. எதிரிகள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு மூலோபாயத் திட்டங்களை வகுத்து செயற்படுகிறார்கள், வல்லரசுகளது சர்வதேச, பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் மூஸ்லிம் சமூகப் பிரச்சினைகள் உருவாகுவதற்கு பிரதான பின்புலங்களாக உள்ளன. முஸ்லிம் அரபு நாடுகளை ஒவ்வொன்றாக வீழ்த்தி சீரழிக்கும் எதிரிகளது திட்டம் கைகூடிவருகிறது. எனவே, எந்தவொரு பிரச்சினையையும் நாம் ஆழமாகவும் தூர நோக்கோடும் பார்க்கவேண்டும். எமது சமூகத்தை வழிநடாத்தும் புத்திஜீவிகளுக்கும் உலமாக்களுக்கும் துறைசார் நிபுணர்களுக்கும் பாரிய பொறுப்புகள் உள்ளன. இந்தத் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும் என்ற சமூகத்தின் வேண்டுகோளின் பின்னரே தேசியசூரா சபை உருவாகியது. அதனைப் பலப்படுத்த சகலரதும் ஒத்துழைப்புத் தேவை என அவர் கூறினார்.
அடுத்த நிகழ்வாக தேசிய சூரா சபையின் கடந்த கால செயற்பாடுகளை உள்ளடக்கிய சுமார்15 நிமிட காணொளி ஒன்று காண்பிக்கப்பட்டது.
அடுத்தாக தேசிய ஷூரா சபையின் சமூக பொருளாதார உபகுழு மேற்கொண்டுவரும் “இலங்கை முஸ்லிம்களது சமூக பொருளாதார கட்டமைப்பும், சவால்களும் அதற்கான நிரத்தரத் தீர்வுகளும்” எனும் ஆய்வின் இடைநிலை அறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் அஷ்ஷெய்க் மிப்லி(நளீமி), இலங்கைப் பாராளுமன்றத்தில் சிரேஷ்ட ஆய்வாளராகப் பணியாற்றும் சகோ.அஜ்வதீன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.
இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் கவனக் குவிப்புக்கு உள்ளாக வேண்டிய பிரதான துறையாக பொருளாதாரத் துறை இருப்பதையும் அத்துறையில் முஸ்லிம்கள் கணிசமான அளவு பின்னடைந்திருப்பதையும் புள்ளிவிபரங்கள் ஊடாக அவர்கள் எடுத்துக்காட்டினார்கள். ஆனால், முஸ்லிம் சமூகத்திட்கு இருக்கும் வளங்களும் வாய்ப்புகளும் பொருளாதார சுபீட்சத்தை அடைந்து தலைநிமிர்ந்து நிற்பதற்கு போதியவையாக இருப்பினும் அவற்றை உரியமுறையில் பயன்படுத்தாமலிருப்பது தான் பிரச்சினைக்கான காரணம் என்றும் உரியதிட்டமிடலும் முயற்சியும் மேற்கொள்ளப்படுமாயின் முன்னேற்றத்தைக் காணமுடியும் என்றும் அங்கு அவர்கள் இருவரும் தெளிவுபடுத்தினார்கள்.4th GA 3
“இலங்கையரில் 6.7% ஆனவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும்போது முஸ்லிம் சமூகத்தில் 22% ஆனவர்கள் வறுமையோடு வாழுவதாயின் எமது பொருளாதார நிலை எங்கிருக்கிறது, ‘வறுமை மனிதனை இறைநிராகரிப்புக்கு நெருக்கமாக்கிவிடும்’ என நபி(ஸல்) கூறியிருப்பதிலிருந்து அது எவ்வளவு பாரதூரமானது என்பதனைப் புறியலாம். இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நிறுவன ரீதியாக 1000 மில்லியன் ரூபாய்கள் சகாத் கமிட்டிகள் ஊடாகத் திரட்டி விநியோகிக்கப்படுகின்றன, அதேவேளை தனிப்பட்டமுறையில் 2000 மில்லியன்கள் ஸகாத்ததாக வழங்கப்படுகின்றன. ஆனால் இப்பணத்தின் பெருந்தொகையானது நுகர்வுத் தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றன. முதலீட்டுத் தேவைகளுக்காகவல்ல,எனவே, இந்த ஸகாத்தையும், உபரியாக வழங்கப்படும் ஸதகாக்களையும் கூட பகீர், மிஸ்கீன்களுக்கான நிரந்;தரவருமான மூலங்களை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். புத்திஜீவிகளும் துறைசார் நிபுணர்களும் இதற்கான மூலோபாயத் திட்டங்களை வகுக்கவேண்டும்.”
இவ்வாறு பல்வேறுபட்ட காத்திரமான கருத்துகளையும் தரவுகளையும் முன்மொழிவுகளையும் உள்ளடக்கியதாக அவ்விருவரதும் உரைஅமைந்திருந்தது.
அதனையடுத்து, நிகழ்த்தப்பட்ட இரண்டு உரைகள் தொடர்பாக நிகழ்வுக்கு வருகைதந்திருந்தவர்களிற் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக ஹிள்ரூ ஸித்தீக். வைத்திய கலாநிதி ரியாஸ் போன்றோரது கருத்துக்கள் கலந்துரையாடலுக்கு வலுவூட்டின.
இரண்டாம் அமர்வு பொதுச் சபை அங்கத்தவர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தது. அதில் காழி நீதிமன்றங்களது தலைவரும் சட்டத்தரணியும் தேசிய சூராசபையின் பொதுச் செயலாளருமான நத்வி பஹாவுத்தீன் கடந்த கூட்ட அறிக்கையையும் கடந்த ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றிய அறிக்கையையும் முன்வைத்தார். தேசிய சூராசபையின் உப பொருளாலர் மௌலவி ஸியாத் இப்ராஹீம் அவர்கள் நிதி அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
பேராசிரியர் ரிஸ்வி ஷரீப், பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சித்தீக், ஜமாஅதே இஸ்லாமி அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், ஜமாஅதுஸ் ஸலாமா அமைப்பின் தேசியப் பொறுப்பாளர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முயீத் உள்ளிட்ட தேசிய சூராசபையில் அங்கம் வகிக்கும் அமைப்புகளது பிரதிநிதிகள் தஃவா, சமூக சேவை, கல்வி போன்ற துறைகளில் ஆர்வத்தோடு முன்னணியில் நின்றுசெயற்படும் உலமாக்கள், புத்திஜீவிகள் பலரும் இந்தநிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
கலந்துறையாடலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் இலங்கை முஸ்லிம்களின் சுகாதாரப் பகுதியை ஒழுங்குபடுத்துவதற்கான தனியான ஒரு சபையை உருவாக்குவதன் அவசியம், தமது தனித்துவத்தினை இழந்து பிறரில் கரைந்து போகும் வகையில் பலர் நடந்துக்கொள்வதால் ஏற்படும் சன்மார்க்க விரோத நிலைகள், மதரஸாக்களும் பள்ளிவாயல்களும் தமது பணிகளை காத்திரமாக நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் போன்ற இன்னோன்ன விவகாரங்கள் அலசப்பட்டன. தேசியசூரா சபை இன்னும் பல பணிகளில் எதிர்காலத்தில் ஈடுபடவேண்டும் என்றும் அதற்காக தம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் தாம் நல்கத் தயாராக இருப்பதாகவும் பலரும் வலியுறுத்தினர். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய சூரா சபையின் பெண்கள் பிரிவைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்க அம்சமாகும்.
நன்றியுரையை தேசிய சூராசபையின் உதவித் தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் நிகழ்த்தினார். மௌலவி இம்தியாஸ் ஸலபி, டாக்டர் ரியாஸ் காஸிம், உதவித் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அசூர் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.