ஜனாதிபதித் தோ்தல் தொடர்பாக தேசிய ஷுரா சபையின் பொதுவான அறிவித்தல்

Presidential election

ஜனாதிபதித் தோ்தல் வாக்களிப்பு இன்ஷா அல்லாஹ் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி, சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் பி.ப. 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. வாக்களிப்பில் 15,992,096 போ் பங்கேற்கத் தகைமை பெற்றுள்ளனர்.

வாக்களிப்பின் போது, அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையை அல்லது தோ்தல் ஆணைக்குழு அங்கீகாரத்துடனான தற்காலிக அடையாள அட்டையை சமர்ப்பிப்பதுடன், உரிய அதிகாரிகள் முன்னிலையில் ஆள் அடையாளம் (முக அடையாளம்) உறுதிசெய்யப்படல் வேண்டும்.

கட்சிகள் சார்பாகவும், சுயாதீன உறுப்பினர்களாகவும் 35 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள இந்தத் தோ்தலில் செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 50% த்திலும் கூடிய (சுமார் 65 இலட்சம்) வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாகத் தொிவுசெய்யப்படுவார்.

எந்தவொரு வேட்பாளரும் முதலாம் கணிப்பீட்டில் 50% வாக்குகளைப் பெறாத விடத்து மாத்திரம், அதி கூடிய வாக்குகளைப் பெற்ற முதல் இரு வேட்பாளர்களும் இரண்டாம் சுற்றுக் கணீப்பீட்டுக்குத் தகைமை பெற்றவர்களாகக் கருதப்பட்டு, ஏனைய 33 வேட்பாளர்களும் இரண்டாம் சுற்றுலிருந்து (தோ்தலிலிருந்து) நீக்கப்படுவார்கள்.

இருப்பினும் இவ்வாறு நீக்கக்கப்படும் 33 வேட்பாளர்களுக்கும் கிடைக்கபெற்ற வாக்குகளில், இரண்டாம் சுற்றுக்குத் தகைமைபெற்ற இரு வேட்பாளர்களுக்குமான விருப்பு வாக்குகள் ஏதும் இடப்பட்டிருப்பின் அவை பிரத்தியேகமாக (முறையே 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள்) எண்ணப்பட்டு தகைமைபெற்ற இரு முதன்மை வேட்பாளர்களினதும் ஆரம்ப வாக்குகளுடன் சோ்க்கப்பட்ட பின்னர் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார்.

ஆகவே, மொத்த வாக்காளர்களில் சுமார் 10 வீதமான வாக்குகளைக் கொண்ட இலங்கை முஸ்லிம்களாகிய நாம், தேசத்தின் நலன் கருதி, தேசிய ஒற்றுமைக்கும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுத்து, மனித உரிமைகளையும் சமய உரிமைகளையும் மதித்து, நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் ஒரு ஜனாதிபதியைத் தொிவு செய்வதில் ஒரு பொதுவான புரிந்துணர்வுடன் எமது பெறுமதிமிக்க வாக்குகளைப் பிரயோகிக்கப் கடமைப்பட்டுள்ளோம்.

ஆட்சியாளர்கள் தொிவுசெய்யப்படலாம், மக்கள் தொிவுகளும் காலத்துக்குக் காலம் மாறலாம். ஆனால் சமூக ஒற்றுமை பாதிப்படையக் கூடாது. இந்தத் தோ்தல் களம் இன மத நல்லுறவுக்கான ஒரு ஆரம்ப தளமாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். எனவே தேசத்தின் நலன் கருதி பொருத்தமானதொரு வேட்பாளருக்கு வாக்களிப்பதில் ஒற்றுமையாகவும், தூரநோக்குடனும், உளத்தூய்மையுடனும் செயற்படுவது சமூகக் கடமையென தேசிய ஷுரா சபை கருதுகின்றது.

நாட்டின் சமாதானம், ஒற்றுமை, அபிவிருந்தி, சட்ட ஒழுங்கு மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்தல் தொடர்பான பொதுவான முன்மொழிவுகளை பிரதான வேட்பாளர்களிடம் தேசிய ஷுரா சபை கையளித்துள்ளது என்ற விடயத்தையும் நாம் உங்களுக்கு அறியத்தர விரும்புகிறோம்.

 

Scroll to Top