நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்திய கலந்துரையாடல் நிகழ்வொன்றை தேசிய ஷூரா சபை இன்று(5.10.2019) கொழும்பில் நடாத்தியது.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் துறைசார் அறிவையும் அனுபவங்களையும் கொண்ட புத்தி ஜீவிகள் பலரும் ஷூரா சபையின் உறுப்பு அமைப்புக்களது பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டர். இந்த நிகழ்ச்சியை தேசிய ஷூரா சபையின் அரசியல் துறைக்கான உபகுழு ஏற்பாடு செய்திருந்தது.
எந்த வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனைப் பற்றி கூறுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டமாக அது இருக்கவில்லை மாறாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப் இருப்பவர் பொதுவாக நாட்டைப் பொறுத்தவரையிலும் முஸ்லிம் சமூகத்தைப் பொருத்தவரையிலும் கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரிப்பதற்கான ஆலோசனை கோரும் மன்றமாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் தலைமை தாங்கிய இந்த நிகழ்வை பிரபல சட்டத்தரணியும் தேசிய ஷூரா சபையின் உப தலைவர்களில் ஒருவருமான ரீ.கே.அஸுர் நடாத்தி வைத்தார்.
மற்றுமொரு உபதலைவரான பொறியாளர் ரீஷா யஹ்யா அறிமுக உரையை நிகழ்த்தினார். இலங்கையின் வரலாறு நெடுகிலும் நிகழ்ந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பாக சுதந்திரத்துக்குப் பின்னரான நிகழ்வுகளைத் தொட்டுக் காட்டிய அவர் அவை நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியை,சமாதான சகவாழ்வை,சமூக மேம்பாட்டைப் பாதித்த விதத்தைக் கோடிட்டுக் காட்டினார்.
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை, அரசியல் சுயநலம், மத, இன தீவிரவாதங்கள், பிராந்திய சர்வதேச பூகோள அரசியல் போன்றன இந்த நாட்டைப் பெரிதும் பாதித்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் கலந்துரையாடலின் போதும் தீர்மானங்கள் எடுக்கும் போதும் இவற்றைக் கவனத்திலெடுப்பது நல்லது என கூறினார்.
அழைக்கப்பட்டிருந்தவர்களுக்கிடையிலான திறந்த கலந்துரையாடல் அடுத்து இடம்பெற்றது.
முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி அனைத்து சமூகங்களும் ஜனாதிபதித் தேர்தலை ஆவலோடு எதிர்பார்திருக்கின்றன.இந்த நிலையில் நாட்டைப் பொறுத்தவரையில் பொதுவாக உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தியும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் சவால்களைக் குறித்துக் காட்டியும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் மகஜர் ஒன்றை முன்வைப்பது அவசியம் என தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே இக்கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலந்துகொண்டவர்கள் மகஜரில் உள்ளடக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். அவை தொகுக்கப்பட்டிருப்பதோடு அவற்றை தேசிய ஷூரா சபையின் அரசியல் துறைக்கான உபகுழுவினர் தொகுத்து ஒழுங்குபடுத்தி முழுமையான ஆவணமாகத் தயாரித்து எடுப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது.
நாடு படுபயங்கரமான கடன் சுமையில் சிக்கியிருப்பது, பிறநாடுகளது செல்வாக்காலும் பிராந்திய நலன்களாலும் அலைக்கழிப்படுவது, இனவாத தீவிரவாத அச்சுறுத்தல், காணிப் பிரச்சினை, மீள் குடியேற்றம், தொழில் வாய்ப்புக்களை வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சம் போன்ற இன்னோரன்ன விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டன.
முஸ்லிம்களைக் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தினது அபிலாஷைகளை கருத்திலெடுப்பதும் தூரநோக்கோடு செயற்படுவதும்
அவசியமாகும். நாட்டு நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் அவர்கள் செயல்படாத போது அது பெரும் துரோகமாகும். அரசியலை எவரும் உழைப்பதற்கான ஊடகமாகப் பயன்படுத்தலாகாது போன்ற கருத்துக்களும் பேசப்பட்டன.
ஜனாதித் தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்ற மாகாண சபை தேர்தல்கள் வர இருப்பதால் இந்த மகஜர் அனைத்துக்கும் பொதுவாக அமைய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைப் சேர்ந்தவர்களுக்கும் இதன் பிரதிகள் கையளிக்கப்படவுள்ளன.
இந்த மகஜரில் உள்ளடக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றிய மேலதிகமான ஆலோசனைகளை இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைக்காதவர்கள் தேசிய ஷூரா சபையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.