சமூக சீர்திருத்த நிறுவனங்களை ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான வழிகாட்டல்கள்

sy

ஏப்ரல் 21 தாக்குதல்களைத் தொடர்ந்து உருவாகியுள்ள அசாதாரண நிலை குறித்து, தேசிய ஷூரா சபையின் உறுப்பு அமைப்புக்களுடனான விசேட சந்திப்பின் போது அத்தாக்குதல்களின் அதிர்வுகள், பின்விளைவுகள் தொடர்பாக ஆழமான கருத்துப் பரிமாறல்கள்  இடம்பெற்றன.

சமூக சீர்திருத்த நிறுவனங்களின் கட்டமைப்பிலும் செயற்பாடுகளிலும் முன்னேற்றகரமான பல மாற்றங்கள் தேவை என்பதை அந்த சந்திப்பின் போது தேசிய ஷூரா சபையும் அதன்  உறுப்பு அமைப்புக்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டன.

எனவே, இலங்கையில் கல்வி மேம்பாடு, சமூக நலப்பணிகள், சமூக தீர்திருத்தம் ஆகிய மூன்று விடயங்களையும் மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களின் இலக்குகள், மூலோபாயத்  திட்டங்கள், வழிமுறைகள் என்பன  மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

அந்தவகையில், சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான வழிகாட்டல்களை வழங்குவது முதன்மைபடுத்தப்பட்ட பணியாக அமைய வேண்டும் என்று தேசிய ஷூரா சபை தீர்மானித்து, அது தொடர்பான பணிகளை முன்னெடுப்பதற்கென ஓர் உபகுழுவை நியமித்தது.

சமூக சீர்திருத்த நிறுவனங்களுக்கான வழிகாட்டல் கையேடு ஒன்றை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் படி அந்தக் குழு பணிக்கப்பட்டது. அதன் படி நாட்டிலுள்ள சவால்களை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, நாட்டு நலனில் மிகுந்த அக்கறையுடன், காலத்துக்கு தேவையான முறையில் தெளிவான வேலைத்திட்டங்களுடன் சமூக சீர்திருத்தப் பணியில் தொழிற்படுவதற்கான வழிகாட்டல்களை அந்தக் குழு முன்மொழிய வேண்டும் என ஷூரா சபை வேண்டிக் கொண்டது.

அதன் பின்னர் பல கலந்துரையாடல்களை  மேற்கொண்ட  அந்தக் குழுவானது தஃவா மற்றும் சமூக நலப்பணிகளில் பல வருட காலங்களாக ஈடுபட்டு அனுபவப்பட்ட ஆளுமைகளை இனம் கண்டு அவர்களை நேரில் சந்தித்து, அவர்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பின்வரும் பரப்புக்களில் கேட்பது என்றும் தீர்மானித்தது:-

  1. இஸ்லாமிய சமூக சீர்திருத்த அமைப்புக்களின் கடந்த கால செயற்பாடுகளில் இருந்த குறைபாடுகள்
  2. சமகால சவால்களும் அவற்றின் பாரதூரங்களும்
  3. இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள்,பொறிமுறைகள், அணுகுமுறைகள்
  4. எதிர்காலத்தில் சமூக சீர்திருத்தப் பணியை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்கள்

அந்தவகையில்,மேற்படி தஃவா குழு பல ஆளுமைகளை நேரில் சந்தித்து திரட்டிய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளது தொகுப்பு பின்வருமாறு:-

#இஸ்லாமிய சமூக சீர்திருத்த அமைப்புக்களின் கடந்த கால செயற்பாடுகளில் இருந்த குறைபாடுகள்:-

  1. இலங்கை மண்ணில் மேற்கொள்ளப்படும் சமூக சீர்திருத்தத்தின் பொது இலக்குகள் யாவை என்ற தெளிவான பார்வை இன்மை
  2. இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள், பல்லின சமூகத்தின் மனநிலை, கலாசாரம் மற்றும் அவர்களது வாழ்வின் யதார்த்தங்கள் போன்ற சூழமைவுகளை கவனத்திற் கொள்ளாத சமூக சீர்திருத்த செயற்பாடுகள்
  3. நாட்டு மக்களின் சுபீட்சமும் அமைதியும் அனைத்து சமூகங்களுக்கிடையிலான சுமூகமான உறவில் தங்கியுள்ளது என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமையும் சகவாழ்வு சிந்தனை குறித்து போதிய கவனம் செலுத்தப்படாமையும்
  4. சிறுபான்மையினருக்குப் பொருத்தமான வாழ்வொழுங்கை வகுத்து செயற்படாமை
  5. தேசிய அரசியல் நீரோட்டத்தை விளங்கி செயற்பாடாமை.
  6. சமூக சீர்திருத்த அமைப்புக்களுக்கு மத்தியில் பரஸ்பரக் கலந்துரையாடல் மற்றும் இணைந்து செயற்படும் கலாசாரம் இன்மை
  7. இலங்கையில் செயற்படும் சமூக சீர்திருத்தவாதிகள் மாற்றுக் கருத்துக்களை சகிக்காமையும் புரிந்துணர்வோடு செயற்படாமையும்
  8. இஸ்லாத்தின் பரந்த நோக்கையும் முன்மாதிரியான நடத்தையையும் அழகிய பண்புகளையும் கொண்ட ஒரு சமூகமாக முஸ்லிம்களை அடையாளப்படுத்த சமூக சீர்திருத்த அமைப்புக்கள் தவறியமை
  9. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொது விவகாரங்களில் போதிய கவனம் செலுத்தப்படாமை.
  10. இஸ்லாத்தின் நடுநிலைச் சிந்தனையை பரப்புவதற்கு, உரிய முக்கியத்துவம் கொடுக்காமை.
  11. சமூகப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருத்தல்.
  12. சகோதர சமூகங்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவை வழங்குவதில் போதிய கவனம் செலுத்தப்படாமை
  13. நபிகளார்(ஸல்) அவர்கள் அகிலத்தின் அருட்கொடை என்ற சிந்தனையை முதன்மைப்படுத்தி பிரச்சாரம் முன்வைக்கப்படாமை.
  14. இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பொதுவான குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில் கொடுப்பதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாமை.
  15. சமூக சீர்திருத்த அமைப்புக்களும் மற்றும் சமூக முக்கியஸ்தர்களும் பிறமத தலைவர்களுடன் போதிய தொடர்பை வளர்த்து கொள்ளாமை.

#தற்போதுள்ள சவால்களும் அவற்றின் பாரதூரங்களும்:-

  1. முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய சீர்திருத்த அமைப்புக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்றமை.
  2. இஸ்லாமிய சிந்தனை, அறபு மொழி, ஆடைக் கலாசாரம், மத்ரஸாக்கள் மற்றும் கலாசார சின்னங்கள் போன்ற பல விடயங்கள் தீவிரவாத அடையாளங்களாக சித்திரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளமை.
  3. சர்வதேச அரங்களில் நிலவும் இஸ்லாம் பற்றிய பீதி (Islamophobia) உள்நாட்டிலும் தாக்கம் செலுத்தி வருகின்றமை.
  4. பல்லின சமூகத்தில் முஸ்லிம்களால் முன்னெடுக்கப்படும் சகவாழ்வு முயற்சிகள் பிழையாக பார்க்கப்படுகின்றமை.
  5. சமூக சீர்திருத்த நிறுவனங்களினூடாக மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த பயன்கள் குறைந்துள்ளமை.
  6. ஊர் மட்டங்களில் மக்களை வழிநடாத்துவதற்கு பலர் முன்வரத் தயங்குகின்றமை.
  7. பல இஸ்லாமிய நிறுவனங்களின் பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் பல நடைமுறைப் பிரச்சினைகள் தோன்றியுள்ளமை.
  8. முஸ்லிம்களது ஒழுங்கற்ற அரசியல் செயற்பாடுகளால் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றமை.
  9. எந்த நியாயமுமின்றி முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புக்காரர்களாகப் பார்க்கப்படுகின்றமை.
  10. சிவில் சமூகத்தில் இஸ்லாம் பற்றிய தவறான மனப்பதிவு வளர்ந்து வருகின்றமை.
  11. ஷூரா, ஷரீஆ, ஜிஹாத் போன்ற பதப்பிரயோகங்கள் பற்றிய பிழையான புரிதல்கள் ஏற்பட்டுள்ளமை.
  12. சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை இனவாதத்தை தூண்டும் வகையில் பரப்புரை செய்கின்றமை.
  13. சவால்களை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள்

#முதலாவது: சிந்தனா ரீதியான வழிகாட்டல்கள்

  1. இலங்கையில் சமாதான சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உழைக்கும் தேசிய நிறுவனங்களுடன் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
  2. அனைத்து சீர்திருத்த அமைப்புக்களும் நடுநிலை (வஸதிய்யா) சிந்தனையை சமூகமயப்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
  3. சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கம் என்ற முஸ்லிம்களது கருத்தியல் தாம் இலங்கை பிரஜைகளாக வாழ்வதில் எதிர்மறை தாக்கம் விளைவிக்காது என்பதை புரிதல் வேண்டும்.
  4. பிற மத நம்பிக்கை கோட்பாடுகளையும் வாழ்வு முறைகளையும் முஸ்லிம்கள் கற்க வேண்டும்.
  5. தஃவா என்பதற்கான சரியான விளக்கத்தை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தல்
  6. கலாசார ரீதியாக எந்த எல்லையுள் நாம் சகோதர சமூகங்களுடன் இணைந்து செயற்படலாம் என்பதை வரையறுத்தல்.
#இரண்டாவது : பொறிமுறைகள் தொடர்பான வழிகாட்டல்கள்
  1. சமூக சீர்திருத்த நிறுவனங்கள் தமது செயற்பாடுகள், கட்டமைப்பு, நிதிக் கையாள்கை போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படல்.
  2. தேசிய மற்றும் ஊர் மட்டங்களில் சிவில் சமூக அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை சட்ட ஒழுங்குகளுக்கு ஏற்ப முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படல்.
  3. பிற சமூகத்தவர்களுடன் உரையாடுவதற்கு பொருத்தமானவர்களை முற்படுத்தல்.
  4. நாட்டிலுள்ள பொதுநலப் பணிகளில் ஈடுபடும் சகோதர நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல்.
  5. அரசின் பொது வேலைத் திட்டங்களில் இணைந்து செயற்படல்.
  6. பிராந்திய ரீதியில் சகோதர சமூகங்களுடன் இணைந்து செயற்படல்
  7. ஆய்வு முயற்சிகளில் எல்லோரையும் பயன்படுத்துதுல் மஸ்ஜிதுகளில் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் வகையில் யாப்பு சீர்திருத்தம் செய்யப்பட்டு சமூகமயமாக்கப்படல்.
  8. சமூகத்தின் அடிமட்டம் வரை வழிகாட்டல்கள் சென்றடைய வழிவகை செய்தல்
  9. அனைத்து அமைப்புக்களையும் உள்ளடக்கிய ‘தேசிய தஃவா ஃபோரம்’ ஒன்றை உருவாக்குதல்.
  10. பொது நலனுக்காக அமைப்புக்கள் தமது சில நலன்களை விட்டுக் கொடுத்தல்
  11. சீர்திருத்த அமைப்புக்கள் தத்தமது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை தமக்கிடையே அறிமுகம் செய்தல்.
  12. ஒரே வேலைத்திட்டத்தை இரு அமைப்புக்கள் போட்டி மனப்பான்மையுடன் மேற்கொள்வதை தவிர்ந்து அவற்றைப் பகிர்ந்து இயங்குதல்.முஸ்லிம்கள் தமது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இலங்கை சட்ட யாப்பிற்கு ஏற்ப அனுபவிப்பதோடு, நாட்டின் மீதான கடமைகளை செய்வதிலும் கூடிய கவனம் எடுத்தல்

#முன்றாவது : இலங்கை சூழமைவில் சக சகோதர சமூகங்கள் தொடர்பான தஃவா வழிகாட்டல்கள்:-

  1. சீர்திருத்தப் பணியில் சிங்கள மொழிக்கு முன்னிரிமை வழங்குதல்.
  2. இலங்கையில் இஸ்லாத்தின் அழகிய போதனைகளை சிங்களத்தில் அறிமுகம் செய்வதற்கான முலோபாயத் திட்டத்தை வகுத்தல்.
  3. சிறுபான்மை முஸ்லிம்களுக்கான வாழ்வொழுங்கை வகுத்தல்.
  4. முஸ்லிம் சிறுபான்மை நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
  5. சமூக வலைத்தளங்களின் ஊடாக சந்தேகங்களைக் களையவும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் முயற்சித்தல்.
  6. சமூக நலப்பணிகளில் இன, மத வேறுபாடின்றி தொழிற்படல்.
  7. சக மத சகோதரர்களது மனங்களில் எம் மீது மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தும் விதத்தில் எமது நடத்தை,செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வழிகாட்டல்களை வழங்குதல்.
  8. மத்ரஸா மாணவர்களுக்கு பௌத்தம், இந்து, கிறிஸ்தவ சமயங்கள் பற்றிய போதிய அறிவை வழங்குதல்.
  9. நாம் இலங்கையர் என்ற வகையில் குடிமக்கள் அனைவருடனுமான சமூக நல்லுறவை வலுப்படுத்தல்.
  10. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பெரும்பான்மையினரிடம் முஸ்லிம்கள் பற்றி இருந்த நல்லெண்ணத்தை தொடர்ந்தும் பேணிவருவதற்கு முயற்சித்தல்.
  11. பெரும்பான்மை மக்களுடன் கலந்துறவாடும் முஸ்லிம்களும் மற்றும் முஸ்லிம் வர்த்தக சமூகமும் ஏனையோரும் முன்மாதிரியாக நடந்து கொள்வதற்கு வழிகாட்டல்.
  12. சகவாழ்வு என்பது ஒரு சூழ்நிலையை சமாளிப்பதற்கான ஒரு பொறிமுறையல்ல. அது இஸ்லாம் கூறும் அடிப்படையான ஒரு வாழ்வு முறை என்ற கருத்து சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரப்பப்படல்.

#நான்காவது : மூலோபாயங்கள் தொடர்பான வழிகாட்டல்கள்

  1. தீவிரவாத சிந்தனைகளின் பால் இளைஞர்கள் கவரப்படுவதுலிருந்து அவர்களைப் பாதுகாப்பதை முதன்மை பணியாகக் கொண்டு அனைவரும் இணைந்த வகையில் தேவையான பொறிமுறைகளை வகுத்து வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுதல்.
  2. சிங்களம், அரபு, ஆங்கிலம் உட்பட பன்மொழிப்புலமை உள்ள சமூக சீர்திருத்தப் பணியாளர்களை உருவாக்குதல்.
  3. சமூகப் பொதுநலன் கருதி அரசியல்வாதிகளை விமர்சிக்கும் போக்கைத் தவிர்த்து அவர்களை அரவணைத்து அவர்களது பயன் மக்களைச் சென்றடையும் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தல்
  4. சமூக சீர்திருத்த அமைப்புக்கள் இணைந்து இலங்கைக்கான பொது இலக்குகள் மற்றும் வேலைத்திட்டங்களை உருவாக்கிச் செயற்படல்.
  5. சர்வதேச முஸ்லிம் உம்மத்துடனான தொடர்புகளை வலுப்படுத்தி அதன் பயனை உத்தியோகபூர்வ வடிவில் அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.
  6. அரசாங்க அங்கீகாரத்துடன் இஸ்லாம் பற்றிய பூரண விளக்கங்களை வழங்கக் கூடிய நிலையங்களை தலை நகரிலும் பிரதான நகரங்களிலும் ஏற்படுத்தல்.
  7. இலங்கையின் தேவை கருதி சிங்கள மொழியிலான நூல்களைப் புதிதாக எழுதுதல். கடந்த காலத்தில் எழுதப்பட்ட நூல்களது பட்டியலைத் தயாரித்து அவற்றில் மிகப் பொருத்தமானவற்றை மீள்பிரசுரம் செய்வது.
  8. சமூக சீர்திருத்த அமைப்புக்களின் தலைமைகளுக்கு சட்டத்துறை, அரசியல், இலங்கை வரலாறு, முகாமைத்துவம், மூலோபாயத் திட்டமிடல் போன்ற பகுதிகளில் போதிய அறிவைப் பெற்றுக் கொள்ள வழிசெய்தல்.
  9. நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள எதிர்காலத் தலைமைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல்.
  10. சிவில் உரிமைகளுக்காக உழைக்கும் சட்டத்தரணிகள் குழுக்களை வலுப்படுத்தல்.
  11. சமூக சீர்திருத்த அமைப்புக்களுக்கு இடையில் மனம் திறந்து கருத்தாடல் செய்வதற்காக சபை ஒன்றை உருவாக்குதல்.
  12. இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அறிவுபூர்வமான பதில்கள் வழங்கப்படுவதற்காக புத்திஜீவிகள் குழுவொன்று அமைத்தல்.
  13. சமூகத்தை ஆன்மீக ரீதியாகப் பலப்படுத்துவதற்கான பயிற்றுவித்தல் ஒழுங்கை வகுப்பதும் செயற்படுத்துவதற்கான பொறிமுறையை கண்டறிதலும்.
  14. இஸ்லாமிய சீர்திருத்த அமைப்புக்கள் நிறுவன ஒழுங்கை முறையாக கடைப்பிடித்தல்.
  15. முஸ்லிம்களுக்கு மத்தியில் கலை மற்றும் இலக்கியப் பகுதிகளை வளர்த்தல்
  16. பெண்களது சமூகப் பங்களிப்பை அதிகரித்து பலப்படுத்தல்.
  17. குடும்பம் என்ற கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை உருவாக்குதல்.
  18. இஸ்லாம் மனித நேயத்தை போதிக்கிறது, அது உலக மக்கள் யாவருக்கும் அருட்கொடை என்பதை உணரச் செய்வதற்கான திட்டங்களை வகுத்தல்.
Scroll to Top