தேசிய ஷுரா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானம்
தேசிய ஷுரா சபையின் மூன்றாது பொதுச் சபைக் கூட்டம் அதன் தலைவர் தாரிக் பதியூதின் மஹ்மூத் தலைமையில் இன்று (22.02.2015) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 06 இல் அமைந்துள்ள எம்.ஐ.சீ.எச். மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பொதுச் சபை அங்கத்தவர்களும் நிறைவேற்றுக் குழு மற்றும் செயலக அங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள், அரசியல் அமைப்புத் திருத்த யோசனைகள், தேசிய ஷுரா சபை கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் போன்ற பல்வேறு கருத்துகளும் அபிப்பிராயங்களும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
எதிர்கால பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் நியாமானதும் தகுதி வாய்ந்ததுமான சகல மக்களினதும் பிரதிநிதித்துவத்தை அரசியல் அமைப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மீள் நிர்னணயம் தொடர்பான செயல்முறையில் சிறுபான்மையினரது பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மேலும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வை தேசிய ஷுரா சபையின் பிரதித் தலைவர் டீ.கே. அசூர் தொகுத்து வழங்கினார். கடந்த பொதுச் சபை அறிக்கையை உதவி பொதுச் செயலாளர் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் வாசித்தார்.
தேசிய ஷுரா சபையின் முக்கியத்துவத்தை பலரும் உணர்ந்துள்ளனர். அதனால் எமது பொறுப்பும் பணியும் அதிகரித்துள்ளன. இதனை எல்லோரும் ஒன்றிணைந்து கூட்டாகவும் தியாகத்துடனும் செயற்படுத்துவதன் மூலமே அல்லாஹ்வின் உதவியுடன் சாதிக்கலாம். இந்த செயற்பாடுகள் முஆமலாத் வகையை சார்ந்த இபாதத் எனவும் தலைவர் தாரிக் பதியூதின் மஹ்மூத் தனது உரையில் தெரிவித்தார்.
கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை பொதுச் செயலாளர இஸ்மாயில் அஸீஸும் நிதி அறிக்கையை பிரதிப் பொருளாளர் மௌலவி ஸியாத் இப்ராஹிமும் முன்வைத்தனர்.
பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) சிறப்புரை நிகழ்த்தினார். தேசிய ஷுரா சபையின் பொறுப்புகள், கடமைகள் தொடர்பாக வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், முதன்மைப்படுத்தப்பட வேண்டிய விடையங்கள் குறித்தும் விளக்கினார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் அரசியல் அமைப்பு திருத்த யோசனைகள், முஸ்லிம்களின் எதிர்கால பாராளுமன்ற பிரதிநிதித்துவம், தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மீள் நிர்ணயம் ஆகியன தொடர்பாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி ரஸீத் எம். இம்தீயாஸ் புள்ளி விபரங்களுடன் விளக்கினார்.
பொதுச் சபை அங்கத்தவர்களான விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் ஸரூக் ஸஹாப்தீன், முன்னாள் ஐ.நா. அலுவலகர் ஹில்ரு சித்தீக், அமெரிக்காவில் உள்ள தஸ்மினா அமைப்பின் செயற்பாட்டாளர் இல்யாஸ் ஹாஷிம், சிரேஷ்ட ஆய்வாளர் எம்.ஐ. எம். முஹியத்தீன், மௌலவி அப்துல் வதூத் ஜிப்ரி, இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷித் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் தேசிய ஷுரா சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானwww.nationalshoora.com யை பேராசிரியர் ரிஸ்வி ஷரீப் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இதுகுறித்த விளக்கத்தை நிறைவேற்றுக்குழு உறுப்பினரான ஆய்வாளர் ரீஸா யஹியா முன்வைத்தார்.