கொரோனா விவகாரத்தால் தொழில்களை இழந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்!

Corona 1

(பள்ளிவாயல்கள் நிருவாக சபைகள், இஸ்லாமிய நிறுவனங்களுக்கான தேசிய ஷூறா சபையின் அன்பான வேண்டுகோள்)

 

அல்லாஹ்வின் நாட்டப்படி தற்போது உலகின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி கொண்டிருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

எனவே மக்கள் தமது நடமாட்டங்களைக் குறைத்து அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லாமல் வெளியில் செல்வதை முற்றாக தவிர்க்கும் படி

வேண்டப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்திருக்கிறது. பலர் தமது தொழில்களை இழந்திருக்கிறார்கள். அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் தமது தேவைகளை நிறைவு செய்வதற்கு பெரும் கஷ்டப்படுகிறார்கள். வீடுகளுக்குள் அடங்கி இருக்கிறார்கள்.

உழைப்பது எப்படிப் போனாலும் அன்றாடம் சாப்பிட்டுக் கொள்வதற்குக் கூட அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

எனவே, பள்ளிவாயல் நிருவாக சபைகளும் இஸ்லாமிய சமூக சேவை அமைப்புகளும் மற்றும் தனவந்தர்களும் இந்த பாதிக்கப்பட்ட மக்களது தேவைகளை அறிந்து உலர் உணவு அவர்களுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தேசிய சூரா சபை மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கிறது.

வரவிருக்கும் ரமழான் மாதத்திலே ஸகாத் மற்றும் ஸதகா கொடுப்பதற்காக நிய்யத் வைத்திருப்பவர்கள் அவற்றை முன்கூட்டியே இந்த தேவைகளுக்காக ஒதுக்கும் படி சூரா சபை கேட்டுக்கொள்கிறது.

அல்லாஹ்தஆலா இப்படியான சந்தர்ப்பத்தில் உதவி செய்யக்கூடியவர்களுக்கு நிச்சயம் அபரிமிதமான கூலிகளை தருவான் என்பதில் சந்தேகமில்லை.

அல்குர்ஆனில் அல்லாஹ் “அவர்களது சொத்துக்களில் கேட்டு வருபவர்களுக்கும் கேட்டு வராமல் தயக்கத்தோடு மறைந்திருப்பவர்களுக்கும் பங்குண்டு” என்று கூறுகிறான்.

எனவே, வெட்கத்தினால் மற்றவர்களிடம் கையேந்துவதற்குத் தயங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளியவர்களை கண்டறிந்து அவர்களுக்குரிய பங்கை நாம் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.

இதற்கான முயற்சிகளை பள்ளிவாயல் நிர்வாக சபைகளும் இஸ்லாமிய அமைப்புகளும் செய்ய வேண்டும் என்று சூரா சபை வேண்டுகிறது. அது மாத்திரமன்றி முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கும் எமது உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

நாள் சம்பளத்துக்காக கூலி வேலை செய்தவர்கள் தொழிலுக்கு வர முடியாத சூழ்நிலை இருப்பின் அவர்களுக்கான நாள் சம்பளத்தை முதலாளிகள் அதாவது தொழில் வழங்குநர்கள் அவர்களுக்கு இனாமாக வழங்குவது கூட ஸதகாவாக அமையலாம்.

வல்லவன் அல்லாஹ் தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடியான சூழலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதோடு யாரெல்லாம் தமது ஸதகாக்களை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவுகிறார்களோ அவர்களுக்கு நிரப்பமான கூலியை கொடுக்க வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கு பொறுமையை கொடுக்க வேண்டுமென்றும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கிறோம்.

அல்லாஹ் எமது முயற்சிகளை ஏற்று அங்கீகரிப்பானாக!

இப்படிக்கு

தேசிய சூரா சபை

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top