தேசிய மட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டையும், தேசத்தின் நலனையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் தேசிய ஷுரா சபை கலந்துரையாடல் மற்றும் ஆய்வு அரங்குகள் ஊடாக சமூகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய பொது வேலைத்திட்டங்களை அடையாளம்கண்டு அவற்றின்பால் பணியாற்ற சமூக நிறுவனங்களை ஒருங்கிணைத்து வருகின்றது.
இந்தப் பின்னணியில் தேசிய ஷுரா சபையின் சமூக, பொருளாதார உபகுழுவின் ஏற்பாட்டில் கூட்டு ஸகாத் நடைமுறைப்படுத்தலை வினைத்திறன்மிக்க வகையில் நாடளாவியரீதியில் விஸ்தரிப்பதை இலக்காகக்கொண்டு தற்போது மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டுவரும் ஸகாத் அமைப்புக்களின் அனுபங்களையும், செயற்திட்டங்களையும் பகிர்ந்துகொள்ளும் செயலமர்வு மிகவும் வெற்றிகரமாக நேற்று முன்தினம்(23) சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கையில் பிராந்திய மற்றும் கிராமிய மட்டத்தில் செயற்பட்டு வரும் அனுபவமிக்க 47 ஸகாத் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஸகாத்துறையில் தோ்ச்சிபெற்ற உலமாக்கள் மற்றும் சமூக பொருளாதாரத் துறை ஆய்வாளர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள், சமூக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 150 போ் பங்கேற்ற இந்த ஆய்வு அரங்கு கடந்த சனிக்கிழமை (23) கொழும்பு வெள்ளவத்தையில் அமையப்பெற்றுள்ள MICH மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஸகாத் அமைப்புக்களுக்களின் அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதுடன், இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன. குறிப்பாக, இலங்கையில் தற்போது இயங்கிவரும் 80 ஸகாத் அமைப்புக்களின் எண்ணிக்கையை அடுத்துவரும் 5 வருடகாலப்பகுதியில் சுமார் 400 வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதன் தேவையும் இந்த செயலமர்வில் உணரப்பட்டது.
தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ஷுரா சபையின் சமூக பொருளாதார உப குழுவின் தலைவரும் இறைவரி திணைக்களத்தின்ஆணையாளருமான அஷ்ஷெய்க் என்.எம். மிப்லி (நளீமி), ஜாமியா நளீமியா கலாபீடத்தின் உதவிப் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் பளீல் (நளீமி), அஷ்ஷெய்க் ஐயூப் அலி (நளீமி) மற்றும் உஸ்தாத் மன்சூர் (நளீமி)ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில், இலங்கையில் மையப்படுத்திய ஒரு ஸகாத் செயலகம் அமைப்படல், நாடு பூராகவும் இயங்கும் ஸகாத் அமைப்புக்கள் செறிப்படுத்தப்பட்டு மேலும் பலப்படுத்தப்படல், இலங்கை முஸ்லிம்களின் சமூக பொருளாதர நிலைமையை மேம்படுத்த உரிய உத்திகள் அறிமுகப்படுத்தப்படல் போன்ற பல முக்கிய விடயங்கள் உள்ளிட்ட ஒரு பிரகடனமும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்ட மேற்படி முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில், இன்ஷா அல்லாஹ், உங்களுடன் பகிர்துகொள்ளவுள்ளோம்.