உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூறா சபையின் சட்ட மற்றும் நடைமுறை வழிகாட்டல்

உழ்ஹிய்யா

இஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம், நன்மைகள் மற்றும் அது தொடர்பான மார்க்க சட்ட திட்டங்கள் என்பன பற்றிய விபரங்களை உலமாக்களை அணுகி அறிந்து கொள்ள முடியும். என்றாலும் நாட்டின் நிலவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக தேசிய ஷூரா சபை கீழ் காணும் வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றது :

உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட-விதிமுறைகளுக்கமைய, சமூக நால்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.

ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியுமாக இருந்தாலும் ஆடுகளைக் கொடுப்பதே விரும்பத்தக்கதாகும்.

உழ்ஹிய்யா நடைமுறையானது நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் ஏழை-பணக்கார விதியாசமின்றி ஈத்பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு வழிவகுக்கிறது. மேலும், இதன் மூலம் நாட்டின் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேசிய விவசாயிகளும் கூடிய நன்மை பெறுவார்கள். வருடாந்த உழ்ஹிய்யா நடவடிக்கை மூலம், சுமார் 250 மில்லியன் ரூபா தேசிய உள்நாட்டு உற்பத்திக்கும், உள்நாட்டு விவசாயிகளுக்கும் கிடைக்கப்பெறுகின்றது (மதிப்பீடு 2013).

விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது;

மிருக வைத்தியரிடமிருந்து (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ்,மாட்டு விபர சீட்டு(Cattle Voucher), சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு சிறிய ஒரு தொகைப் பணத்தை செலுத்த வேண்டும்.

ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(மிருகத்தின் உரிமை அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.

மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கும் ஒரு மாட்டிற்கு ஒரு தொகைப் பணத்தை செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.

மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவை கவனத்தில் எடுப்பது அவசியமாகும்.

மற்றும் சில வழிகாட்டல்கள்

  1. பொதுவாக நகர்ப்புறங்களில் குர்பானி விலங்குகள் பொதுமக்களுக்குத் தென்படும் வகையில் பாதையோரங்களில், பொது இடங்களில் கட்டி வைக்கபடுகின்றன. இதனை முற்றாகத் தவிர்ந்து கொள்ளவும்.
  2. குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
  3. குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன்,தத்தமது மஹல்லாக்களை மையப்படுத்தி பிரதேச சூழலுக்கு ஏற்ப பொது மஷூறாவின் அடிப்படையில் உழ்ஹிய்யா விடயங்களை முன்னெடுப்பது சிறந்தது.
  4. பள்ளிவாசல் வளவுகளுக்குள் குர்பான் செய்யவதைத் தவிர்ந்து கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் அதிகளவிலான விலங்குககளை குர்பான் செய்வதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக பொருத்தமான பல இடங்களைத் தெரிவு செய்து அங்கு குர்பான் நடவடிக்கைகளைச் செய்வது விரும்பத்தக்கதாகும்.
  5. பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு.
  6. குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம், சாணம், தோல் என்பவற்றை) மிகவும் பொறுப்புணர்வுடன், உரிய முறையில் பூமியின் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
  7. குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
  8. போயா தினத்தில் (ஆகஸ்ட் 25) உழ்ஹிய்யா கொடுப்பதையும், பங்கிடுவதையும்,வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  9. ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்

குறிப்பு: தேசிய ஷூறா சபையின் இணையத்தளமான www.nationalshoora.com இலிருந்து இவ் உழ்ஹிய்யா வழிகாட்டலைப் பெற்று உங்கள் பிரதேச மஸ்ஜித்களுக்கும் கிடைக்கச் செய்யவும். இதனை தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்கமாறு மஸ்ஜித் நிருவாகிகளை வேண்டிக்கொள்ளவும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top