Muslim Opposition MPs Meet with National Shoora Council

mp3

The National Shoora Council met with Muslim Members of Parliament from the Opposition on Wednesday, 23rd July, and held discussions on national and community-related issues. 

Members of Parliament who attended the event included Rauff Hakeem, M.L.A.M.Hizbullah,M.S. Uthumalebbe, Nizam Kariapper, Mujibur Rahman, Kabir Hashim, M.M.Thahir,Ismail Muththu Mohamed, K.Kadear Masthan and M.S.Wazith 

 NSC President M.M. Zuhair, General Secretary Rasheed M. Imthiyaz, and former President Sheikh S.H.M. Faleel also addressed the gathering. Members of the NSC executive and Secretariat were also present at the event. 

தேசிய ஷுரா சபையின் எதிர்க்கட்சி முஸ்லிம் எம்பிக்களுடனான சந்திப்பு 

இலங்கை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தேசிய மற்றும் முஸ்லிம் சமூக விவகாரங்களை கலந்துரையாடுவது என்ற குறிக்கோளின் அடிப்படையில் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஷூரா சபையின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த 23 7 2025 புதன்கிழமை கொழும்பில் சந்தித்து ஆக்கபூர்வமான, சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.  

 தேசிய ஷூரா சபையின் கௌரவ தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் எம் ஸுஹைர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வரவேற்புரையை கௌரவ செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்.எம்.இம்தியாஸ் நிகழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து சபையின் முன்னை நாள் தலைவர் அஷ்ஷேக் எஸ்.எச்.எம். பளீல் தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளை அறிமுகம் செய்ததோடு சபையின் தோற்றம், வளர்ச்சி, இலக்குகள், சாதனைகள், தொடர்பாக ஒரு அறிமுகத்தை முன்வைத்தார். நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சகோ.எம்.எச்.எம்.ஹஸன் நன்றியுரையை நிகழ்த்தினார். 

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், M.L.A.M.ஹிஸ்புல்லாஹ், M.S.உதுமான் லெப்பை, நிஸாம் காரியப்பர், முஜீபுர் ரஹ்மான்,கபீர் ஹாஷிம், M.M. தாஹிர், இஸ்மாயில் முத்து மொஹமட், K.காதர் மஸ்தான், M.S.வாஸித் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் அவர்கள் தலைமை உரை நிகழ்த்திய போது தற்போது இலங்கை முஸ்லிம்களது உரிமைகள் மீறப்படுவது பற்றியும் தேசிய நலனுக்கு அச்சுறுத்தலாக அமையும் சில அம்சங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியதுடன் அவை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். குறிப்பாக இலங்கையில் இஸ்ரேலியர்களது பலவகையான நடவடிக்கைகள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் அது முஸ்லிம் சமூகத்தை மாத்திரமன்றி இந்த நாட்டின் தேசிய நலனையும் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியதோடு இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தோடு தொடர்பான பல விவகாரங்கள் பேசப்பட வேண்டிய நிலையில் இருப்பதனை அவர் நினைவூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.  

 அதனை தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.  

 உரையாடலின் போது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தம், அல்குர்ஆனின் மொழிபெயர்ப்பு பிரதிகள் சுங்கப் பகுதியில் தடுத்துவைக்கப்படிருத்தல், இஸ்ரேலியர்களது பிரசன்னம்,மஹரை சிறைச்சாலை பள்ளிவாசல் சர்ச்சை போன்ற இன்னோரன்ன பல விவகாரங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் மிகவும் சுமூகமான கலந்துரையாடலை நடத்தினர். 

அங்கு வருகை தந்திருந்த எதிர்தரப்பு எம்பிக்கள் தமக்கும் ஆளும் கட்சி முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவு வலுப்பட வேண்டும் என்றும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். 

பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரைகளை நிகழ்த்துகின்ற மற்றும் விவாதங்களில் கலந்து கொள்கின்ற பொழுது தேவையான குறிப்புக்களையும் தகவல்களையும் வழங்குவதற்கு சபை தயாராக இருப்பதனை குறிப்பிட்டுக் காட்டிய ஷூரா சபை பிரதிநிதிகள் அதற்காக தம்மை தேவையான போது தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.  

அரசியல் துறையானது மனித வாழ்வோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்ட ஒரு அங்கமாக இருப்பதனால் அரசியல் துறையுடன் சம்பந்தப்படாமல் எந்த ஒரு சமுதாயமும் வாழ முடியாது என்ற வகையில் இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுடன் நிர்பந்தமாக தொடர்பை வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதினால் இலங்கை முஸ்லிம்களது சிவில் தலைமைத்துவங்களது குடை நிறுவனமான தேசிய ஷூரா சபை கடந்த காலங்களில் பல்வேறுபட்ட அரசியல் ரீதியான நகர்வுகளை கட்சி பேதம் இன்றி முன்னெடுத்திருக்கிறது. அந்த வகையில் கடந்த காலங்களில் பல தடவை அரசியல்வாதிகள் அது சந்தித்து பல விடயங்களை கலந்த ஆலோசித்திருக்கிறது.  

 கடந்த மே மாதம் ஆளும் கட்சி உறுப்பினர்களை தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகள் சந்தித்து பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.  

தேசிய ஷூரா சபை இதற்கு முன்னர் எல்லை நிர்ணய விவகாரம், இலங்கை சட்ட யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் போன்ற பல்வேறு மிக முக்கியமான துறைகளோடு தொடர்பான ஆலோசனை மன்றங்களை அது ஏற்பாடு செய்திருக்கிறது. வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இருக்க வேண்டிய பண்புகள் தொடர்பாக பல அறிவுறுத்தல்களை தேர்தலுக்கு முன்னால் வழங்கிவந்திருக்கிறது. தேர்தல்களின் பொழுது முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை தொடர்ந்தும் அது வழங்கிவந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் தேவைகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட 27 அம்ச கோரிக்கைகளைக் கொண்டக் கொண்ட மகஜர் ஒன்றை அது ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் கையளித்தது.  

 அதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்களை நேரடியாக சந்தித்து பல விடயங்களை ஷூரா சபையின் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடினர். 

 இத்தகைய அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களின் ஒரு கட்டமாகவே ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களை சந்தித்து கருத்துப் பரிமாற வேண்டும் என்ற திட்டம் தேசிய ஷூரா சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

ஊடகப் பிரிவு  

தேசிய ஷூரா சபை 

28.07.2025 

 

mp4

mp6

mp1

mp2

 

Scroll to Top