அன்பார்ந்தவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
இம்முறை நோன்பு காலம் மிகவும் வித்தியாசமான முறையில் கழிந்ததை அனைவரும் அறிவோம். Covid-19 பரவலைத் தடுக்க அரசு முயற்சிகளை எடுத்தபோது அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தேசிய சூரா சபை முதற்கண் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறது.
அதேபோல் அரசு ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. எனவே, நோன்புப் பெருநாளையும் நாம் கட்டுப்பாடாகக் கொண்டாடிக் கொள்ள வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க பொதுவாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பெருநாள் தினத்திலும் அதற்குப் பிறகு வரும் நாட்களிலும் பூரண ஒத்துழைப்பை நாம் நல்க வேண்டும். நாட்டிலுள்ள சகல பிரஜைகளும் நலமாக வாழ வேண்டுமாயின் ஒவ்வொரு தனிமனிதனும் அதற்காக ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
எனவே நாட்டின் சட்டத்தை மதித்து, அடிப்படை சுகாதார விதிகளைப் பேணி நாம் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும் என சூரா சபை வேண்டிக் கொள்கிறது.
அந்தவகையில் பெருநாள் தினத்தில் பள்ளிவாயல்களிலோ திடல்களிலோ கூட்டாக தொழுகைகளை நடத்துவதை முற்றாக தவிர்த்துக் கொள்வதோடு வேறு ஏதும் காரணங்களுக்காகவும் பொதுவான இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். எமது பெருநாளை நாம் விமரிசையாக கொண்டாடுவது நல்லதல்ல. அது முஸ்லிம் சமூகம் பற்றிய விமர்சனங்கள் உருவாகக் காரணமாக அமைந்து விடும்.
இம்முறை நாங்கள் வீடுகளில் தொழுகை நடத்திவிட்டு குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்கமுடியும். உறவினர், நண்பர்கள் மற்றும் அயலவர் வீடுகளுக்குப் போவதோ கூட்டான செயற்பாடுகளில் ஈடுபடுவதோ விபரீதங்களை ஏற்படுத்தலாம்.
செவ்வாய் கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் சமூக இடைவெளியை பேணியுமே எல்லா இடங்களிலும் நாம் நடந்துகொள்ளவேண்டும்.
அதேவைளை பலரும் தொழில்களை இழந்து வருமானம் இல்லாத நிலையில் பெருநாள் கொண்டாட முடியாத சூழலில் வறுமையில் வாடுவதால் இம்முறை பெருநாள் காலங்களில் அநாவசியமான செலவுகளை தவிர்த்து ஏழைகளுக்கும் தேவையுடையவர்களுக்கும் உதவ அனைவரும் முன்வரவேண்டும் என்று தேசிய ஷூறா சபை வினயமாக வேண்டிக்கொள்கிறது.
இந்த ரமழான் மாதத்தில் நாம் புரிந்த நல்லமல்களை ஏற்று பாவங்களை மன்னித்து மிக விரைவில் Covid-19 தாக்கத்திலிருந்து உலகை விடுவிக்க வேண்டுமென அனைவரும் வல்லவன் அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொள்வோம்.
உங்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.