கொரோனா விவகாரம் தொடர்பாக தேசிய சூரா சபையின் வேண்டுகோள்

Covid 19CTA

ஆட்கொல்லி வைரஸ் நோய் பரவுவதை கருத்திற்கொண்டு அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அரசு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்த கொடிய நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சில பிரதேசங்கள் முற்றுமுழுதாக மூடப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் ஊர்களும் இவ்வாறான நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளைச் சேர்ந்த சிலர் வெளிநாடு சென்றிருந்த போது நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்து பின்னர் ஊர்களில் வந்து

அவர்கள் பழகியவர்களுக்கும் அது பரவியிருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என நம்பப்படுவதால் அந்த ஊர்களை பிற ஊர்களிலிருந்து அரசு ஒதுக்கி வைத்திருக்கிறது.

வெளிநாடு சென்று வந்தவர்கள் தமது பயணம் பற்றி அதிகாரிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும் என்று வேண்டப்பட்டிருந்தும் கூட அக்கட்டளையை அவர்கள் அசட்டை செய்திருப்பதாக அரசு கூறுகிறது. சில ஊடகங்களும் மற்றும் சிலரும் இது பற்றிய தகவல்களை இன உணர்வைத் தூண்டும் வகையில் பரப்பி வருவதும் யாமறிந்த விடயமாகும்.

எனவே, அனைவரது நலன்களைக் கருத்திற் கொண்டு ஒவ்வொரு பிரஜையும் குடும்பங்களும் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அரசின் வேண்டுகோள்களுக்கு இணங்க தேசிய சூரா சபை பின்வரும் ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்கும் படி முஸ்லிம்களை அன்பாக வேண்டிக்கொள்கிறது:-

1.மார்ச் 10ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும்.

  1. அவ்வாறு வெளிநாடு சென்று வந்த பின்னர் அதுபற்றி போலீசுக்கு அறிவிக்காமல் எவராவது வீட்டில் மறைந்திருந்தால் அது பற்றி தெரிந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
  2. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் எவராவது தொடர்பு கொண்டிருந்தால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அது அவரது வீட்டிலாகவும் இருக்கலாம். தனக்கென்று ஓர் அறையை அவர் பிரத்தியேகமாக ஒதுக்கி அதற்குள் இருக்கவேண்டும். அப்படியான வசதி அந்த வீட்டில் இல்லாதிருந்தால் அதிகாரிகளுக்கு அது பற்றி அறிவித்து அவர்கள் ஏற்பாடு செய்யும் இடத்திற்குச் சென்று அங்கு தங்க வேண்டும்.
  3. கோவீட் 19 தொற்றின் அடையாளங்கள் ஒருவருக்கு இருந்தால் அவர் தனிப்பட்ட ஒரு வைத்தியரிடமோ தனியார் சிகிச்சை நிலையங்களுக்கோ போகாமல் அரச வைத்தியசாலைகளுககு அல்லது சிகிச்சை நிலையங்களுக்கு மட்டுமே போகவேண்டும். அவ்வாறு போக முன்னர் அது பற்றி அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.
  4. ஊரடங்குச் சட்டத்தின் விதிகளை அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.அவசரத் தேவைகள் ஏற்பட்டால் போலீசாரின் முறையான அனுமதியைப் பெற்று வெளியேற வேண்டும்.

மேற்கூறப்பட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது நாட்டுப் பற்றின் அடையாளமாக இருப்பதுடன் அது ஒரு மார்க்கக் கடமையுமாகும் என்பதை வலியுறுத்துவதுடன் இனவாதிகளது பிரசாரங்களை ஓரளவு தவிர்க்கவும் உதவும் என்றும் சூரா சபை கருதுகிறது.

மேலும் ஊரடங்குச் சட்டத்தின் பொழுது வீட்டில் தங்கியிருக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுத்தம்,சுகாதாரம், குடும்ப வாழ்வு, வீட்டு சூழல், பிள்ளை வளர்ப்பு பற்றி இஸ்லாம் காட்டித்தந்திருக்கின்ற வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன் இரட்சகனுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு இபாதத்துக்களில் ஈடுபட்டு பொறுமையோடும் தவக்குலோடும் இருக்க வேண்டும்.

இந்த கொடிய நோயிலிருந்து அனைவரையும் அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக!

இப்படிக்கு

தேசிய சூரா சபை

 

Scroll to Top