இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான இன்று, இலங்கை முஸ்லிம்களது புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் இஸ்லாமிய சிவில் அமைப்புக்களது மன்றமான தேசிய ஷூரா சபை இலங்கை மக்கள் அனைவருக்கும் பின்வரும் செய்தியை தெரிவிக்க விரும்புகிறது:-
மேலைநாட்டு காலனித்துவ அடிமைத்தள ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கை மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க அனைத்து இனங்களையும் சேர்ந்த தியாகிகள் போராடி இருப்பது போல் சிலர் அதற்காக தமது இன்னுயிர்களையும் தியாகம் செய்திருக்கிறார்கள். டீ.எஸ்.சேனாநாயக்க, சேர் பொன்னம்பலம் அருணாச்சலம்,டப்ள்யூ.டப்ள்யூ. கன்னங்கர, எப்.ஆர் சேனாநாயக்க, பிலிப் குணவர்தன பொன்ற தேசபிதாக்களோடு ரீ.பி. ஜாயா,அறிஞர் சித்திலெப்பை, சேர்.ராசிக் பரீத் போன்ற முஸ்லிம் தலைவர்களும் தோளோடு தோள் நின்று சாத்வீக ரீதியாக, அறிவு ரீதியில் போராடியிருக்கிறார்கள்.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு காலனித்துவவாதிகளால் திணிக்கப்பட்ட பிரித்தாளும் கொள்கை போன்ற பல தடைகள் இருந்த பொழுது முஸ்லிம் தலைவர்கள் ‘எமது வேறுபாடுகளை, வித்தியாசங்களை நாம் பின்னர் கவனித்துக் கொள்வோம். முதலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வோம்’ என்று கூறினார்கள்.
ஆனால், எமது தாயகமான இலங்கை இன்று மிகக் கவலைக்கிடமான நிலையில் உள்ளது .பொருளாதாரம் அதள பாதாளத்தில் விழுந்துள்ளது. சமூகங்களுக்கிடையிலான உறவுகள் பலவீனமடைந்துள்ளன. அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகிறது. மக்களது மனங்களில் பதட்டம் நிலவுகிறது. இவை இந்த அவல நிலைக்கான சான்றுகளாகும். பல பில்லியன் டாலர்கள் சர்வதேசத்திற்கு எமது நாடு கடன்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சுதந்திரத்தை நாம் கொண்டாட மாட்டோம் என்று கூறும் நிலைக்குக் கூட சிலர் வந்துள்ளனர்.
இப்படியான நிலையில் நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் யதார்த்தமானதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இனவாதம், மதவாதம், சுயநலம், அரசியல் கதிரைகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கம், பொருளாதார சுரண்டலை மையப்படுத்திய செயல்பாடுகள் தான் இந்த நாட்டை இந்த நிலைக்கு தள்ளி இருக்கின்றன.
எனவே, நாம் கடந்த கால நிகழ்வுகளிலில் இருந்து படிப்பினை பெற்று எம்மை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.
அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நின்று இந்த அவல நிலையிலிருந்து எமது நாட்டை விடுவிக்க உழைக்க வேண்டும். சமாதானம், சகோதரத்துவம், பரஸ்பர ஒத்துழைப்பு,நம்பிக்கை, தூரநோக்கு, தியாகம் என்ற பண்புகளை கைக்கொள்ள இத் தருணத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோமாக!
“எந்தவொரு சமூகமும் தனது உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றிக் கொள்ளும் வரை அல்லாஹ் அந்த சமூகத்தின் நிலைமைகளை மாற்ற மாட்டான்”(அல்குர்ஆன்: அர்ரஃத்:11)