கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இரவு ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய காரணமற்ற பல சுற்றுத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள தேசிய சூரா சபை, இஸ்ரேலின் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது..
இது தொடர்பில் தேசிய சூரா சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈரானின் மின் உற்பத்தி செய்யும் இராணுவ நோக்கமற்ற அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய ஆபத்தான தாக்குதல்களை தேசிய சூரா சபை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல்கள் பரந்த அளவில் கதிர்வீச்சு கசிவை ஏற்படுத்தி, அப்பிராந்தியத்தில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மரணத்தையும் பேரழிவையும் விளைவித்திருக்கக் கூடும். பிபிசி குறிப்பிட்டுள்ளதன்படி, இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “சிறப்பானது” என்று பாராட்டியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும். இது நிலைமையை மேலும் மோசமாக்குவதாக அமைந்துள்ளது.
அணுவாயுதங்கள் கொண்ட இஸ்ரேல், அணுவாயுதமற்ற ஈரானின் மீது முன்னறிவிக்கப்படாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி முகவரகத்தால் (IAEA) இதுவரை பேச்சுவார்த்தைகள் மூலம் கையாளப்பட்டு வந்த அணுசக்தி தொடர்பான பிரச்சினைகளை ஒரு காரணமாகக் கொண்டு, தேவையில்லாத ஒரு போரை ஈரானின் மீது இஸ்ரேல் தூண்டிவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய மிகவும் ஆபத்தான தாக்குதல், 2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான படையெடுப்பை விட மோசமானது. அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷும், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரும், ஈராக்கின் பாத் கட்சித் தலைவர் சதாம் ஹுசைன் பேரழிவு தரும் ஆயுதங்களை (WMD) வைத்திருப்பதாகவும் சதாமின் பேரழிவு ஆயுதங்களால் இங்கிலாந்து 45 நிமிடங்களில் அழிக்கப்படும் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து ஈராக் மீது படையெடுத்தனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களை இலங்கை அரசு கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேசிய சூரா சபை, உலக அமைதி மற்றும் பொருளாதார நிவாரண நலன்களுக்காக சர்வதேச அணுசக்தி முகவரகம் (IAEA) மூலம் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்குமாறும் கோரியுள்ளது. மேலும் சர்வதேச நீதிமன்றத்தின் அண்மைய ஆலோசனைக்கு முரணாக, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனியப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களுக்கு சட்டவிரோதமாக உதவுவதற்காக, பலஸ்தீனியர்களுக்குப் பதிலாக முந்தைய அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட 20,000 இலங்கையர்களை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்குத் திருப்பியழைக்குமாறும் தேசிய சூறா சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் மீது இஸ்ரேல் பல சுற்றுத் தாக்குதல்களை நடத்தி, ஆத்திரமூட்டும் வகையில் குண்டுவீசியதை சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்தான், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் பல நாடுகள் கண்டித்து விமர்சித்திருப்பதை தேசிய சூரா சபை வரவேற்றுள்ளது.
இந்தத் தாக்குதலை “ஈரான் இஸ்லாமிய குடியரசு மீதான சியோனிச ஆக்கிரமிப்பு” எனக் கண்டித்துள்ளதையும் “சியோனிச அரசுடனான உறவுகளைத் துண்டிக்குமாறும்” “மத்திய கிழக்கில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க” தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதை தேசிய சூறா சபை வரவேற்றுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் தற்போது ஒரு பீப்பாய் 8 அமெரிக்க டொலராகவுள்ள உலக கச்சா எண்ணெய் விலையை சில மணி நேரங்களிலேயே பீப்பாய்க்கு சுமார் 10 அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, இலங்கை போன்ற சிரமப்படும் பொருளாதாரங்கள் மற்றும் ஏனைய மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார மீட்சியை கடுமையாக அச்சுறுத்துவதாக உள்ளது.
இதேவேளை, எந்தவொரு தவிர்க்க முடியாத தற்காப்பு பதிலடிகளிலும் ஈரான் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என தேசிய சூரா சபை வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற இஸ்ரேலின் சக்திவாய்ந்த ஆதரவாளர்கள், தங்கள் அணு ஆயுதங்களின் மீது கட்டுப்பாடு கொண்ட வலதுசாரி தீவிரவாதத் தலைவர்களால் வழிநடத்தப்படுகிறார்கள். இத்தகைய தலைவர்கள், பாரசீக -அரபு மத்திய கிழக்கில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நிகழ்வுகளை எளிதில் மீண்டும் நடத்தக்கூடும். இதன் மூலம் மில்லியன் கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொல்வதோடு, மேலும் பல மில்லியன் மக்களை வாழ்நாள் முழுவதும் ஊனமாக்கக்கூடும். எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஈரான் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என தேசிய சூரா சபை கேட்டுக்கொண்டுள்ளது.




