இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் இலங்கை முஸ்லிம் பேரவை நேற்று முன்தினம் மகஜர் கையளித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்கள் மூலமாக முஸ்லிம் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட சுமார் 2 லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரே முஸ்லிம் பேரவையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரால் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த சில வருடங்களாகவே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஹலால் பிரச்சினையில் ஆரம்பித்த இந்த வன்முறைக் கலாசாரம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் வரை தொடர்ந்தவண்ணமே உள்ளன. ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டுமென்று கோரி சிங்கள இனவாத அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருந்தன.
ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட சிங்கள பேரினவாத கட்சிகளும் அமைப்புக்களும் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்துமாறு பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியிருந்தன. இதன் காரணமாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தனது ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டுவந்ததுடன் வேண்டுகோள்விடுக்கும் உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் சான்றிதழை விநியோகித்தும் வந்தது. இவ்வாறிருந்தபோதிலும் அதற்கு எதிராகவும் தற்போதும் பொதுபலசேனா போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வாகன பவனி ஊர்வலத்தையும் நடத்தியிருந்த பொதுபலசேனா அமைப்பு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை நாட்டில் தொடர்வதாகவும் அதனை முற்றாகத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தி வருகின்றது.
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலுடன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான வன்முறைகள் ஆரம்பமாகின. இதுவரை 25 பள்ளிவாசல்கள் வரையில் வன்முறைக் கும்பல்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுமுள்ளன. இறுதியாக கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. அண்மையில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு முன்னால் பன்றி இறைச்சிப் பொதி போடப்பட்டிருந்தது. இவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் தொடர்ந்து வருகின்றன.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா மற்றும் ராவணா சக்தி போன்ற அமைப்புக்களும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. இத்தகைய வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்படுவதானது நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவே அமைந்து வருகின்றது.
இத்தகைய நிலையிலேயே இலங்கை முஸ்லிம் பேரவை ஜனாதிபதிக்கு மகஜரினை கையளித்திருக்கின்றது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடனான சந்திப்பில் முஸ்லிம் பேரவையின் உதவித் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணியும் ஈரான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான எம்.எம். சுஹைர், பொருளாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம கதீப் மௌலவி எம். தஸ்லீம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. தேசியத் தலைவர் கே.என். டீன், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் சம்மேளனத் தலைவர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் மற்றும் ஏ.எல். ஹகீம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதிக்கான இந்த மகஜரில், குறிப்பிட்ட சில வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீவிரவாத அமைப்புக்கள் மஸ்ஜித்களை குறிவைத்து தாக்குதல், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி திரிபுபடுத்திய விடயங்களையும் வதந்திகளையும் பரப்பி இனங்களுக்கிடையே பதற்ற நிலையையும் முறுகல் நிலையையும் தூண்டி வருகின்றன. இத்தகைய நகர்வு முறியடிக்கப்படாவிடின் நிச்சயமாக முஸ்லிம்களை இலக்கு வைத்து ஒரு இனக்கலவரத்துக்கு அது வழி வகுக்கலாம். இந்த தீவிரவாத அமைப்புக்களால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நாசகார செயல்கள் மூலம் உங்கள் தலைமையிலான நாட்டின் நற்பெயருக்கும் பௌத்த சமயத்துக்கும் களங்கம் எற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சமய நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் சமூகம் மீதான இலக்கு வைத்த தாக்குதலை நிறுத்துவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறும் அதேபோல் இனங்களுக்கிடையே சகோதர உணர்வையும் சக வாழ்வையும் மேம்படுத்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதியிடம் நாம் வினயமாக வேண்டிக்கொள்கிறோம் என்றும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதையடுத்து சிவில் சமூகத் தலைவர்கள் துறைசார் நிபுணர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட சக சமூக அமைப்புக்களுடனான பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் இந்த இலங்கை முஸ்லிம் பேரவை நிறுவப்பட்டது. சூறா அடிப்படையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சமகால விவகாரங்களை கலந்துரையாடி ஆலோசனை பெற்று அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையிலேயே இந்தப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையிலேயே 600 முஸ்லிம் கிராமங்களிலிருந்து கையெழுத்துக்களை பெற்று இந்த மகஜர் ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டுமென்பதே இலங்கை முஸ்லிம் பேரவையின் கோரிக்கையாக அமைந்துள்ளது. முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை பெரும் கவலையடையச் செய்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த மகஜரில் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
எமது நாட்டில் 3 தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் நாட்டிலுள்ள மூவின மக்களும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர். தற்போது நாட்டில் அமைதி பிறந்துள்ள நிலையில் முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்தும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது இன, மதங்களிடையே முரண்பாடுகளை அதிகரிப்பதற்கே உதவும் என்பது திண்ணம்.
மதங்களிடையே இடம்பெற்றுவரும் இத்தகைய வன்முறைகளை தடுப்பதற்கு மதத் தலைவர்கள் இடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவது இன்றியமையாதது என்று அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் கருத்து தெரிவித்திருந்தார். தேசிய தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து பேசியிருந்த அவர் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா போன்ற அமைப்பினரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மதங்களிடையிலான பிணக்குகளுக்கு முற்றாக தீர்வுகாண படையினராலோ பொலிஸாராலோ முடியாது என்றும் மதத் தலைவர்களே இதற்குரிய புரிந்துணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
உண்மையிலேயே முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த மதத்தினர் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவில்லை. மாறாக ஒருசில குழுவினரே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே இத்தகைய குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கமானது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
இலங்கை முஸ்லிம் பேரவை சமர்ப்பித்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளத்தக்க விடயங் களேயாகும். எனவே அந்த மகஜரில் உள்ள விடயங்களை நடைமுறைப் படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் முன்வரவேண்டும். இதன்மூலமே நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கி டையில் நல்லுறவைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
– வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்