தேசிய ஷூறா சபையின் ரமழான் கால வழிகாட்டல்கள்:

ramadan1

பொதுவாக ஏனைய காலங்களை விட ரமழான் காலம் முஸ்லிம்களது வாழ்வில் விசேடமானது. எமது ஆன்மீக, லெளகீக வாழ்வில் பலவகையான திருப்பங்கள் ஏற்பட வேண்டும் எனும் நோக்கில் பாக்கியங்களைக் கொண்ட அந்த மாதம் அல்லாஹ்வால் எமக்குத் தரப்பட்டிருக்கிறது. அதேவேளை, வழக்கமாக ரமழான் காலத்தில் முஸ்லிம் சமுகம் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வரும் பல சவால்களுக்கு அதிகமாக முகம் கொடுப்பதுண்டு. எனவே, அம்மாதத்தை முஸ்லிம்கள் எவ்வாறு கழிப்பது பொருத்தமாக இருக்கும் என்பது சம்பந்தமான சில ஆலோசனைகளை தேசிய ஷூறா சபை வழங்க விரும்புகிறது.

ஆன்மீகம், ஒழுக்கம், கல்வி

  • ஆன்மீகப் பகுதி முஸ்லிம்களது வாழ்வின் அஸ்திவாரம் என்பதால்,எல்லாவற்றுக்கும் முன்பாக இம்மாதத்தில் அல்லாஹ்வுடனான உறவை முஸ்லிம்களாகிய நாம் மென்மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு  முயற்சிப்பது அவசியமாகும். இப்புனித மாதத்தில் நோன்பு இருப்பதுடன் அதிகமான ஸூன்னத்தான வணக்கங்களிலும் ஈடுபடுவது இரட்சகனுக்கும் அடியானுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த உதவும். திலாவதுல் குர்ஆன், திக்ர்கள், இஸ்திக்பார், இரவு வணக்கங்கள் என்பவற்றில் நாம் அதிக கவனம் எடுக்க வேண்டும். மன்னிப்பது, பொறுமை, அல்லாஹ்வின் கூலியில் நம்பிக்கை, ஈகை, உளப்பரிசுத்தம் என்பன எமக்கான அணிகலன்களாக இருக்கட்டும்.
  • குறிப்பாக இயக்கங்களுக்கிடையிலும் பொதுவாக சமூகத்திலும் மோதல்களை உருவாக்கும் வகையிலான சொற்பொழிவுகளை உலமாக்கள் தவிர்ப்பதுடன் நல்லமல்களில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடும் வகையிலான கருத்துக்களை உள்ளடக்கிய குத்பா பிரசங்கங்களையும்,உபந்நியாசங்களையும் செய்வது சாலச் சிறந்ததாகும்.
  • குறிப்பாக இளைஞர்கள் வழிபிறழ்ந்து விடாதிருக்கவும் பிறருக்கு தொந்தரவின்றி இரவு காலங்களைக் கழிப்பதற்கும் ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்வதற்குமான ஏற்பாடுகளைச் செய்வது பொறுப்புதாரிகளது கடமையாகும். தஜ்வீத் வகுப்புக்களை நடாத்துவதற்கும்  பாடசாலை மற்றும் அஹதிய்யா பாடத்திட்டங்களை  மீட்டுவதற்குமான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகளும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் பள்ளிகளிலோ பாடசாலைகளிலோ செய்ய வேண்டும். பெற்றார்கள் இது விடயமாக கூடிய கவனமெடுத்து பொறுப்பு தாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது அவசியமாகும்.
  • வீட்டு சூழலை பிள்ளைகள் கல்வி கற்பதற்கும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பொருத்தமானதாக பெற்றார் அமைத்துக் கொடுக்க வேண்டும். வெகுசன தொடர்பு சாதனங்ள், கையடக்கத் தொலைபேசிகள் என்பன தீய வழியில் பயன்படுத்தப்படாதிருக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • கடைத் தெருக்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பாதை ஓரங்கள் என்பவற்றில் கூட்டம் கூட்டமாக நின்று கதைத்துக்கொண்டிருப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். அது வீண் வம்புகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் இட்டுச்செல்லும்.

சமாதான சகவாழ்வு

  • தேசிய ஷூரா சபை இவ்வருட ரமழானை இனங்களுகிடையிலான சகவாழ்வை மேம்படுத்துகின்ற மாதாமாக பிரகடனப்படுத்தியுள்ளது. எனவே,நீங்களும் உங்கள் ஊரின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சகவாழ்வை மேம்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி மேற்கொள்வது சாலச் சிறந்ததாகும்.
  • முஸ்லிமல்லாதோர் மத்தியில் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் பற்றிய பல்வேறுபட்ட தப்பபிப்பிராயங்கள், சந்தேகங்கள் நிலவுகின்றன. எனவே அவற்றைக் களைவதற்கு ஓர் அரிய சந்தர்ப்பமாக நாம் இந்த ரமழானை மாற்றியமைத்தல் அவசியமாகும்.
  • உலமாக்கள், கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஆலோசனை (சூரா) சபை ஒன்றை ஒவ்வொரு பகுதியிலும் உருவாக்கிக்கொள்வதோடு மார்க்க அனுஷ்டானங்கள், சமூக விவகாரங்கள் அல்லது பிற சமூகங்களுடனான உறவுகள் போன்றவற்றில் சர்ச்சைகளும் பதட்டமான சூழ்நிலைகளும் தோன்றும் போது அவர்களது ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடப்பது நல்லதாகும்.
  • ரமழான் காலத்தில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள், பிற மத ஆலயங்களது மதகுருமார், கல்விமான்கள், சமூக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் போன்றோருடன் முஸ்லிம்கள் தொடர்புகளை ஏற்படுத்தி நல்லுறவைப் பேணிக்கொள்ள வேண்டும். அவர்களுடனான சந்திப்புக்களின் போது இஸ்லாத்தின் அடிப்படையான வரம்புகளை நாம் மீறாமலும் ஷிர்க்குகளில் சம்பந்தப்பட்டு விடாமலும் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.அங்கு நிகழ்த்தப்படும் உரைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும்.
  • பள்ளிவாயலில் இஷாத் தொழுகையை தொடர்ந்து தராவீஹ் தொழுகையை இயன்றவரை நேரகாலத்தோடு நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்கு உடனடியாக திரும்புவதும் ஆண்களது மேற்பார்வையுடனும் பாதுகாப்புடனும் பெண்கள் பள்ளிவாயல்களுக்கு தராவீஹ் தொழுகைக்காக வருவதும் அனாவசியமான பிரச்சினைகள் உருவாகுவதைத் தவிர்க்க உதவும்.
  • பள்ளிவாயலின் வெளி ஒலி பெருக்கிகளை அதான் மற்றும் விஷேட அறிவித்தல்களைத் தவிர பயான்கள், தொழுவித்தல் போன்றவற்றிற்காக பயன்படுத்துவதை முற்றாக தவிர்ப்பது நல்லது.
  • பள்ளிவாயல்களுக்கு வருவோர் தமது வாகனங்களை உரிய வாகன தரிப்பிடங்களிலோ அல்லது வேறு பொருத்ததமான இடங்களிலோ பிறருக்கு தொந்தரவு ஏற்படாத விதத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் வழிகாட்டல்களும் அவசியமாகும்.
  • இன்ஷா அல்லாஹ், கிட்டிய எதிர்காலத்தில் ஒரு பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதால் அதனுடன் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு சமுதாயதை நெறிப்படுத்துவது துறை சார்ந்தவர்க்களது பொறுப்பாகும். அனால், எவராவது அரசியல் ரீதியிலான பேச்சுக்களில் அளவு மீறி ஈடுபட்டு ரமழான் என்ற பொன்னான சந்தர்ப்பத்தை வீணடித்து விடலாகாது. ரமழானின் ஒவ்வொரு வினாடிகளும் மிகப் பெறுமதியானவை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
  • மஸ்ஜித்கள் மற்றும் பொது நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படும் ரமழான் கால நிகழ்ச்சிகள், இப்தார் நிகழ்வுகளை அரசியல் இலாபங்களுக்காகப் எவராவது பயன்படுத்திவிடாதிருக்க நிருவாகிகள் பார்துக்கொள்ள வேண்டும்.

பொருளாதார மேம்பாடு

  • முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார, கல்வி, ஒழுக்க மேம்பாடுகளினூடாக நிலைபேறான அபிவிருத்திகளை அடைந்துகொள்வதற்கு திட்டமிட்டு செயற்படக் கூடிய ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இந்த ரமழானை நாம் மாற்றிக் கொள்ளலாம்.
  • ரமழானில் குறிப்பாக நகர்ப் புறங்களுக்கு முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த யாசகம் கேட்போர் வந்து பாதை ஓரங்களில் தங்குவதாலும் பிறமதத்தவர்களது வியாபார நிலையங்களுக்கும் வீடுகளுக்கும் செல்வதாலும் முஸ்லிம் சமூகம் பற்றிய பிழையான மனப்பதிவுகள் ஏற்படலாம் என்பதுடன் தற்போதைய சூழலில் இன ரீதியான அசம்பாவிதங்களுக்கும் வழி வகுக்கலாம் என்பதால் இந்நிலையில் இருந்து சமுதாயத்தைப் பாதுகாக்க முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • பொதுவாக முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஊர்களில் ஸகாத்,ஸதகாக்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன் யாசக முறையை நீக்குவதற்கான காத்திரமான வழிமுறைகளைப் பற்றி சிந்தித்து செயல்படுவது நல்லது.பல தடவை உம்ராக்களுக்காக செல்பவர்கள் உடனடியாக முன்னுரிமைப்படுத்த வேண்டிய- ஏழ்மையை கட்டுப்படுத்தல், கல்வி மேம்பாடு போன்ற திட்டங்களுக்காக தமது பணத்தைச் செலவிடலாம்.
  • வீண்விரயம்,அர்த்தமற்ற பொழுதுபோக்குகள் என்பவற்றை முற்றாகத் தவித்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் உலகுக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் காரியங்களில் மாத்திரம் ஈடுபடுவது உலக,மறுமைப் பேறுகளை அடைந்து கொள்ள வழிவகுக்கும்.

 

பொறுப்புதாரிகளது பொறுப்புக்கள்

முஸ்லிம் சமுதயத்தில் ஆழமான ஈமானும் சமூக ஐக்கியமும்,தெளிந்த சிந்தனையும் உலக,மார்க்க அறிவுகளில் ஆழமும்,பண்பாட்டு விழுமியங்களில் உச்ச நிலையும்,பிற சமூகங்களுடன் நல்லுறவும் ஏற்படவேண்டியிருப்பதால் பொறுப்புக்களை வகிப்பவர்கள் தமது பொறுப்புக்களை அமானிதங்களாகக் கருதி தத்தமது சக்திக்கு உட்பட்ட வகையில் செயல்பட வேண்டும்.

‘’(நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும்மனிதர்களிடையே தீர்ப்புக் கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்.(4: 58)

‘’உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள்.உங்கள் ஒவ்வொருவரது பொறுப்புக்கள் பற்றியும் (மறுமையில்)விசாரிக்கப்படுவீர்கள்.”(ஹதீஸ்)

மேற்கூறிய வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு மிகுந்த பொறுப்புணர்சியுடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய ஷூறா சபை இலங்கை வாழ் முஸ்லிம்களை வினயமாகக் கேட்டுக் கொள்வதுடன் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு அது சமூகத்திற்கு  வழங்கிய வழிகாட்டல்களை மகித்து அதன்படி  செயற்பட்ட  உங்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

ரமழான் காலத்தில் முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமாக விடயங்களை உள்ளடக்கிய மேற்படி ரமழான் கால வழிகாட்டல்களை  நாட்டிலுள்ள அனைத்து மஸ்ஜித்களினூடாக பொதுமக்களை அடையச்செய்து, அவர்களை அறிவூட்டுவதே எமது நோக்கமாகும். எனவே, உங்களது பகுதியில் உள்ள மஸ்ஜித்களுக்கும் இவ்வழிகாட்டியை கிடைக்கச்செய்து அதனை ஜும்மா தொழுகையின் பின்னர் அறிமுகம்செய்து, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்துமாறு மஸ்ஜித் நிருவாகிகளைக் கேட்டுக்கொள்கிறோம். மேற்படி ரமழான் வழிகாட்டியை எனும் எமது இணையத்தளமான www.nationalshoora.com இலிருந்து பெற்று உங்கள் பகுதி பள்ளிவாயல்களுக்குக் கிடைக்கச் செய்யவும்.

வல்ல அல்லாஹ் புனித ரமழானை அனைவருக்கும் பாக்கியமுள்ளதாகவும் பாதுகாப்பன காலமாகவும் ஆக்குவானாக

 

Scroll to Top