தேசிய ஷூரா சபையான ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவை (SLMA) இன் ஏற்பாட்டில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை சகவாழ்வு தொடர்பான செயலமர்வொன்று இடம்பெறவுள்ளது. இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கையொன்றை வகுக்கும்நோக்கோடு நடாத்தப்படவுள்ள இச்செயலமர்வில்முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலளர்கள், தஃவா மற்றும் சமூகப் பணிபுரிவோர் ஆகியோரை உள்ளடக்கிய சுமார் 40பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அண்மைக்காலமாக இனரீதியான பல்வேற்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதினைக் கருத்திற்கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவையின் சகவாழ்வுக்கான உபகுழு மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் அனைத்து துறைகளுக்கும் ஏற்ற நீண்டகால இலக்குகளைக் அடிப்படையாகக் கொண்ட நிரந்தரமான, நகர்வுகளை மேற்கொள்வதை வழிமுறையாகக் கொண்ட தேசிய ஷூரா சபை, “சரீஆவின் வரையறையறைகளுக்குள் நின்று தனித்துவத்தைப் பேணிய நிலையில் பிற சமூகங்களுடன் எவ்வாறு சகவாழ்வை மேற்கொள்ளள்ளலாம்?“ என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சியாக இது அமையவுள்ளது. இந்த செயலமர்வு பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியிருக்கும்:-
- சமாதான சகவாழ்வு தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டத்தை விளக்கும் உரை
- இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதோர் இதுவரை மேற்கொண்டுள்ள முயற்சிகள்பற்றிய ஆய்வு
- சமாதான சகவாழ்வை அடைவதற்கு முட்டுக்கட்டைகளாக அமையும் பிரதானமான தடைகளை இனங்காணல்
- இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் கரைந்து விடாமல் சகவாழ்வை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிப்பதும் அதற்கான வளங்கள், வாய்ப்புகள், வழிமுறைகள் என்பன பற்றித் திட்டமிடலும்