தேசிய ஷூரா சபையின் கல்விக்கான உப குழு வடமேல் மாகாண கல்வி திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அதிபர் வாண்மை விருத்தி செயலமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் வயம்ப பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. 2016,2023 ஆகிய ஆண்டுகளில் நியமனம் பெற்ற வடமேல் மாகாணப் பாடசாலை அதிபர்கள் இச்செயலமர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்குரார்ப்பண நிகழ்வில் தேசிய ஷூறா சபையின் நிறைவேற்றுக் குழு, கல்விக்கான உபகுழு மற்றும் செயலகக் குழுவின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தலைவர் ரீ.கே. அஸூர் (LLB) வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், ஷூறா சபை தொடர்பான அறிமுகத்தை செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் வழங்கினார்.
அமர்வுக்குத் தலைமை தாங்கிய வடமேல் மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் ரியாஸ் முகம்மத் (SLEAS) அவர்கள் இச்செயலமர்வின் நோக்கம் மற்றும் செயன்முறை தொடர்பாக விளக்கினார்கள்.
முதலாவது விரிவுரை தேசிய ஷூரா சபையின் உபதலைவரும் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளரரும் அதன் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பளீல் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. “அதிபர் பதவி: அமானிதமும் அருளுமாகும்” என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார்.
இரண்டாவது அமர்வு கலாநிதி ரிஷாத் புஹாரி (Training Expert, Career Guidance – International Labour Organization) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. “சமநிலையான அதிபர் வாழ்வு” என்ற தலைப்பில் அவர் கருத்து பரிமாறினார். அதிபர்கள் தனிப்பட்ட, குடும்ப, வான்மைத்துவ, சமூக, ஆன்மீக ரீதியாக அனைத்து துறைகளிலும் சமநிலையை பேணுவதற்கான பல்வேறு உத்திகள் மற்றும் உபாயங்கள் குறித்து அவர் கலந்துரையாடினார்.
மூன்றாவது அமர்வை, பாடசாலை ஒன்றில் இருக்க வேண்டிய பிரதான திட்டம் (Master Plan) தொடர்பாக மாஹோ கல்விப் பணிமனையின் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் முஹம்மத் அலி ஜின்னா நளீமி (SLEAS) நடத்தினார். பாடசாலைக்கு தேவையான பௌதீக மற்றும் ஏனைய வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி செய்வதற்கான மாஸ்டர் பிளான்களை தயாரிப்பதற்கான அடிப்படைகள் தொடர்பாக அவர் கருத்து பரிமாறினார்.
இரவு அமர்வாக, முல்லைத்தீவு சுப்ரமணியம் ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் நல்லையா அமிர்தநாதன் அவர்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றது. திரு.நல்லையா அமிர்தநாதன் அவர்கள் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட தனது பாடசாலையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக டிஜிடல் மயப்படுத்தியுள்ளார். ஆரம்பப் பிரிவை மாத்திரம் கொண்ட இப்பாடசாலையின் 17 வகுப்பறைகளும் திறன் வகுப்பறைகளாக (Smart Class) மாற்றம் பெற்றுள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் மடிக்கணனியை பயன்படுத்துகின்றனர். ஒரு முப்பரிமாண அச்சுப் பிரதி (3D Printer) பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் டெப்களைப் (Tabs) பயன்படுத்துகின்றனர். மெய்நிகர் வகுப்றை (VR Classroom) ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் கல்வி அமைச்சின் சிறந்த அதிபருக்கான விருதை இரு முறை வென்றுள்ளார்.
இவ்வாறு பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய திரு நல்லையா அமிர்தநாதன் அவர்களுடைய அனுபவப் பகிர்வு பாடசாலைக்குத் தேவையான வளங்களை பல்வேறு தரப்புக்களோடு இணைந்து எவ்வாறு பெற்றுக் கொள்வது,அதனை ஒழுங்கு முறையாக மற்றும் சட்ட திட்டங்களைப் பேணி எவ்வாறு பாடசாலைக்கு கொண்டு வருவது என்பது தொடர்பாக ஒரு அருமையான விளக்கத்தை வழங்கியது.
இரண்டாம் நாள் அமர்வின் முதலாவது நிகழ்வாக அஷ்ஷேக் எம்.ரி.எம். நுஸ்ரத் நளீமி (பயிற்றுவிப்பாளர், மாணவர் வழிகாட்டல் ஆலோசகர்) அவர்களுடைய தலைமைத்துவ மற்றும் குழுவாகப் பணியாற்றல் தொடர்பான செயற்பாட்டு அமர்வு இடம்பெற்றது.
இரண்டாவது அமர்வை “Nudge கோட்பாடும் பாடசாலை அதிபர்களின் தீர்மானமெடுக்கும் வகிபங்கும்” என்ற தலைப்பில் மாஹோ கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம்.றிஸ்வி நளீமி (SLEAS) நிகழ்த்தினார்.
இறுதி அமர்வாக, விரைவிலே ஏற்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் மற்றும் அதற்கான அதிபர்களுடைய தயார் நிலை தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஜே.எம்.ஜெஸார்(நளீமி) அவர்களுடைய கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்து கொண்ட அனைவருக்கும் பங்குபற்றுநர் சான்றிதழ் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அதிபர்கள் நிகழ்வு தொடர்பாக பூரண திருப்தி அடைந்தவுடன் இவ்வாறான நிகழ்வை ஒழுங்கு செய்த வடமேல் மாகாண கல்வி பணிமனைக்கும் தேசிய ஷூரா சபைக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.